ஒரு நியமனம்.. ஓரணியில் திரளும் கோஷ்டிகள்..! தமிழக காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி பூசல்

14 August 2020, 11:30 am
Quick Share

சென்னை: தமிழக காங்கிரசில் மகளிர் அணி தலைவர் நியமனத்தால் அடுத்தக்கட்ட கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. விரைவில் அது வெளிப்படையாக டெல்லி வரை எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

தேசிய அளவில் பாரம்பரிய கட்சி காங்கிரஸ். பழுத்த அனுபவசாலிகள் கொண்ட கட்சி. அக்கட்சியின் பிரதான அடையாளமாக இன்றும் பார்க்கப்படுவது கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல். ஆளாளுக்கு ஒரு கோஷ்டியை உருவாக்கி வைத்துக் கொண்டு திசை தெரியாமல் உருளுவார்கள்.

இது அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் ஒன்று. இப்போது தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரிக்கு எதிராக பல கோஷ்டிகள் இன்னமும் டெல்லி தலைமைக்கு புகார்களை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றன.

Cbe KS Alagiri Byte - updatenews360

இந்த விஷயங்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மகளிர் காங்கிரஸ் தலைவர் நியமனம் பெருத்த கோஷ்டி பூசலை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அதன் தலைவராக சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதன் பின்னணியில் நடந்த கோஷ்டி அரசியல் கட்சி தொண்டர்களை அதகளப்படுத்திவிட்டது.

இந்த பதவிக்கு தமது ஆதரவாளர்களை நியமிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் தரப்பும், ஈவிகேஎஸ் தரப்பும் களம் இறங்கியது. இறுதியில் ஈவிகேஎஸ் ஆதரவாளரான சுதா அறிவிக்கப்பட்டார். இந்த இருவரை தவிர்த்து, எம்பியான  மாணிக்கம் தாக்கூர், இப்போது இருக்கும் ஜான்சிராணியே நன்றாக செயல்படுகிறார், அவரே தொடரட்டும் என்று முட்டி மோதி பார்த்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு ஏமாற்றம் தந்தது.

இவர்களின் கோஷ்டி அரசியலையும் மீறி, சுதா அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சியின் பல மட்டங்களில் அதிருப்தி தாண்டவமாடுகிறது. அதற்கு காரணம் 2009ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை பிளாஷ்பேக்காகி காட்டுகின்றனர் தொண்டர்கள்.

அப்போது தமிழகத்தில் ஈழஅரசியல் உச்சக்கட்டத்தில் இருந்தது. முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து மரணித்தார். அந்த தருணத்தில் சோனியாவை கண்டித்து போராட்டம் நடத்தியவர் இப்போது மகளிர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Congress_Sinking_UpdateNews360

அனைத்து பதவி நியமனங்களிலும் கோஷ்டிகள் கச்சை கட்டும். ஆனால் இந்த முறை அனைத்து கோஷ்டிகளும் ஓரணியில் நின்றுகொண்டு சுதாவின் நியமனத்தை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்து வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரசை பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டி உள்ளது.

அதுவும் 2021ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது இருக்கும் தருணத்தில் ஒற்றுமையுடன் கட்சி பணியாற்ற வேண்டிய சமயத்தில் இப்படி இருக்கிறார்களே? இதை தவிர்க்க டெல்லி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாரம்பரிய கதர்ச்சட்டைக்காரர்கள்….!

Views: - 8

0

0