இந்த ஆட்சியிலும் தொடரும் ஊழல் : எம்.பி ஜோதிமணி எழுதிய கடிதம்… முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தி?

Author: Babu Lakshmanan
25 November 2021, 6:06 pm
jothimani - stalin- updatenews360
Quick Share

சென்னை : தற்போதைய ஆட்சியிலும் ஊழல் தொடருவதாகக் கூறி தலைமை செயலருக்கு காங்., எம்பி ஜோதிமணி கடிதம் எழுதியது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாமை நடத்துவதில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கும், எம்பி ஜோதிமணிக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சியரைக் கண்டித்து காங்கிரஸ் எம்பி ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

karur mp dharna - updatenews360

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக முகாம்களை நடத்துவதில்லை எனக் குற்றம்சாட்டிய எம்பி ஜோதிமணி, மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்வதில்லை எனக் கூறினார். இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியரோ, முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அழைப்பு விடுத்தும் எம்பி ஜோதிமணி பங்கேற்பதில்லை எனக் கூறியதோடு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட உபகரணங்களைத்தான் வாங்கி வழங்கி வருவதாகவும் கூறியிருந்தார்.

இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மேசையிலிருந்து 1% – 2% வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான் கோப்புகள் நகரும் என மக்கள் மத்தியில் பரவலான அபிப்ராயம் உள்ளதாகக் கூறி கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமைச் செயலர் இறையன்புவிற்கு கடிதம் எழுதியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தற்போதைய கரூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மேசையிலிருந்து குறைந்தபட்சம்‌ 1% – 2% வரை கட்டாய வதல்‌ முடிந்த பிறகு தான்‌ கோப்புகள்‌ நகரும்‌ என்று மக்கள்‌ மத்தியில்‌ பரவலான அபிப்ராயம்‌ உள்ளது. அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட்டால்‌ உண்மை வெளிப்படும்‌. ஆனால்‌ நானோ அரசியலில்‌ நேர்மையை மட்டுமே நம்புகிறேன்‌.

கடந்த ஆட்சிக்‌ காலத்தில்‌ கரூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியில்‌ (2019-2020) இருந்து விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட கொரொனா தடுப்பு நிதியில்‌ முப்பத்தியைந்து லட்ச ரூபாய்‌ ஊழல்‌ நடந்ததை கண்டறிந்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்‌ நிதியை திரும்பப்பெற்று, அதே தொகுதியில்‌ பள்ளிகளில்‌ வகுப்பறை கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளேன்‌. ஆகவே எனதுபணிகளில்‌ ஊழல்‌ செய்வது சாத்தியமில்லை.

ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை எனது முன்னெடுப்பில்‌ செயல்படுத்தினால்‌ வழக்கம்போல ஊழல்செய்ய அனுமதிக்க மாட்டேன்‌ என்பதால்‌ நாடாளுமன்ற உறுப்பினரான எனது முயற்சியில்‌ கொண்டுவரப்படும்‌ ஒன்றிய அரசின்‌ திட்டங்களை செயல்படுத்த கருர்‌ மாவட்ட ஆட்சியர்‌ மறுக்கிறாரா- என்பது போன்ற கேள்விகள்‌ எழுவதை தவிர்க்க முடியவில்லை.

கடந்த ஆட்சியிலும்‌, நாங்கள்‌ மக்கள்‌ பணி செய்யவிடாமல்‌ தடுக்கப்பட்டோம்‌. அந்த காலகட்டத்தில்‌ அரசை எதிர்த்து மக்கள்‌ நலத்திட்டங்களை செயல்படுத்த நாங்கள்‌ எத்தனை உக்கிரமான போராட்டங்களை முன்னெடுத்தோம்‌. அதற்காக நாங்கள்‌ எப்படி ஒடுக்கப்பட்டோம்‌ என்பதை தாங்களும்‌ அறிவீர்கள்‌. அந்த நெருக்கடியான காலகட்டத்தில்‌ இன்றைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌. அன்றைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு தந்த தார்மீக ஆதரவை இந்த நேரத்தில்‌ நான்‌ நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன்‌.

Cm stalin - updatenews360

அப்படிப்பட்ட முதலமைச்சரின்‌ தலைமையிலான அரசில்‌, கரூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ எப்படி இப்படியொரு முறைகேடான உத்திரவைப்‌ பிறப்பிக்க முடியும்‌? அதுவும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலன்‌ தொடர்பான செயல்பாட்டில்‌ மாவட்ட ஆட்சியருக்கு இப்படி ஒரு முக்கியமான கொள்கை முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம்‌ எங்கிருந்து வந்தது: தமிழக அரசின்‌ அனுமதி இன்றி, பொறுப்பற்ற முறையில்‌ மக்கள்‌ நலன்களுக்கு விரோதமாக, ஒரு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ இப்படி ஒரு கொள்கை முடிவை எடுத்திருப்பது சட்டவிரோதமானது.

ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ மலிவான, பொறுப்பற்ற, உள்நோக்கமுள்ள சுயநல செயல்பாடுகளால்‌, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள்‌ நலன்‌ பாதிக்கப்படக்கூடாது. ஆகவே, உடனடியாக கரூர்‌ மாவட்ட ஆட்சியரின்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமான, இதயமற்ற கொள்கை முடிவை திரும்பப்பெற்று, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்காக, எனது தீவிரமான முயற்சியில்‌ கொண்டுவரப்பட்ட. ஒன்றிய சமுகநீதி அமைச்சகத்தின்‌ அலிம்கோ நிறுவனத்தின்‌, மாற்றுத்திறனாளிகள்‌ முகாமை கரூர்‌ மாவட்டத்தில்‌ உடனடியாக நடத்தவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

இது கரூர்‌ மாவட்டத்தில்‌ கடினமான வாழ்க்கைச்‌ சூழலில்‌ உழலும்‌ ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களின்‌ பிரச்சினை மட்டுமோ, ஒரு தனிப்பட்ட கரூர்‌ நாடாளுமன்ற உறுப்பினரின்‌ உரிமைப்‌ பிரச்சினை மட்டுமோ அல்ல. ஒன்றிய, மாநில அரசுகளின்‌ நிர்வாகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ தலைமையிலான மாவட்ட நிர்வாகத்தின்‌ எல்லைகள்‌, செயல்பாடுகள்‌,
மக்கள்‌ பிரதிநிதிகளின்‌ பொறுப்புகள்‌ என்று அனைத்தையுமே கேள்விக்கு உள்ளாக்கியுள்ள, அரசியல்‌ சாசனம்‌ வரையறுத்துள்ள விதிகளை கேலிக்கூத்தாக்கியுள்ள ஒரு மாபெரும்‌ தவறு.

இன்று கரூர்‌ மாவட்டத்தில்‌ நடப்பது நாளை தமிழகத்தில்‌ எங்கு வேண்டுமானாலும்‌ நடக்கலாம்‌. இதனால்‌ அப்பாவி மக்கள்‌ பாதிக்கப்படுவார்கள்‌ அனைவரும்‌ பாராட்டும்‌ வகையில்‌, அர்ப்பணிப்போடு செயல்படும்‌ முதலமைச்சருக்கும்‌, தமிழக அரசுக்கும்‌ அவப்பெயர்‌ ஏற்படும்‌. உங்களைப்‌ போன்ற அதிகாரிகளின்‌, நற்பெயருக்கும்‌ களங்கம்‌ ஏற்படும்‌ ஆகவே மிகுந்த பொறுப்பும்,. மக்கள்‌ நலனில்‌ ஆழ்ந்த அக்கறையும்‌ கொண்டுள்ள இந்த அரசு பொறுப்பற்று, முறைகேடாக. செயல்பட்டுள்ள கருர்‌ மாவட்ட ஆட்சியர்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்‌ என்று நம்புகிறேன்‌, எனக் குறிப்பிட்டிருந்தார்.

AnnaArivalayam

இந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை உயர்த்திப் பேசியிருந்தாலும், ஊழல் செயல்பாடு என தண்டோர அடிப்பது போன்று தர்ணா போராட்டம் மற்றும் கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியது, அரசின் செயல்பாடுகளுக்கு கலங்கம் விளைவிப்பது போன்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நடந்திருக்கக் கூடாது என்று திமுகவினர் புலம்பி வருகின்றனர். மேலும், இந்த செயல்பாடு முதலமைச்சர் ஸ்டாலினை அதிருப்தியடையச் செய்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, திமுகவுக்கும், காங்கிரசுக்கும் மறைமுக பனிப்போர் நடந்து வரும் நிலையில், எம்பி ஜோதிமணியின் இந்த திடீர் அதிரடி இருகட்சியினருக்குமே சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Views: - 176

0

0

Leave a Reply