பாஜகவிடம் மட்டுமல்ல… சீமானிடமும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : எம்பி ஜோதிமணி கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 4:38 pm
seeman- - jothimani - updatenews360
Quick Share

பாலியல் சீண்டல் விவகாரத்தில் சிக்கிய கே.டி. ராகவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமானை, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாலியல் சீண்டலில் சிக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி கேடி ராகவனை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, ஒருவர் தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிறது தான் சமூகக் குற்றம் என்றும், உலகத்தில் எங்கும் நடந்திறாத ஒன்றையா அவர் செய்து விட்டார் எனவும் கூறியிருந்தார். மேலும், தனிப்பட்ட அவர் வீட்டின் அறையில் செய்ததை படம் பிடித்து விட்டு, குறை சொல்வதை ஏற்க முடியாது என்பது போல அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கே.டி. ராகவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமானை, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். இவர் இப்படி பொறுப்பில்லாமல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரி என்ற மன நிலையை சீமான் உருவாக்குகிறார்.

இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆபத்தாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. பாஜகவிடம் இருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான அருவருக்கத்தக்க ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு. சீமான் போன்றவர்களிடம் பெண்களும், தமிழ் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள். பெண்களை பாலியல் ரீதியாக வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள். காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரி என்று ஆகிவிடுமா. பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகி விடுவார்களா.? இப்படி காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றன, அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை திரு.சீமான் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்தப் போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். பல்வேறு உளவியல், சமூக, பொருளாதார தடைகளை தாண்டி, பொது வாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்பவர்கள், கண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் இதுதான் ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை தான் தமிழ்ச்சமூகம் சரிவர செய்து வருகிறது. பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் அயோக்கியர்களும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களும் தமிழ்ச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது.

திரு. சீமான் மீது கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் சீமான் பாஜகவின் B டீம் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி இருக்கிறார். எப்படி இருந்தாலும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான் கே.டி ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலம் என இளைஞர்களும் மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தை புரிந்துகொண்டு அவரை புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு, என காரசாரமாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 246

0

0