கூட்டணி தலைவரா…? அத நாங்க பாத்துக்கறோம்… உங்க வேலைய நீங்க பாருங்க : PKவை வெளுத்து வாங்கிய காங்., எம்பி ஜோதிமணி..!!

Author: Babu Lakshmanan
4 December 2021, 7:49 pm
Pk - congress - updatenews360
Quick Share

பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நிறுத்த வேண்டும் என்கிற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து ராகுல் காந்தியால் போராட முடியாது என கடந்த சில வாரங்களாகவே அவர் தொடர்ந்து கூறியும் வருகிறார்.

PK வார்னிங்

அதாவது காங்கிரஸ் கட்சியால் மோடிக்கு எந்த வகையிலும் சவால் விடுக்க முடியாது என்பது அவருடைய எண்ணம். அண்மையில் பிரசாந்த் கிஷோர், பாஜக பற்றிய தனது மதிப்பீட்டை வெளிப்படையாக கூறியிருந்தார். அது அரசியல் வட்டாரத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, மார்க்சிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவும் அறிவுரை கூறுவது போலவும் அமைந்திருந்தது.

PM_Modi_UpdateNews360

“வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இருந்ததைப் போலவே, இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பாஜக இருக்கப் போகிறது.

காங்., தப்பு கணக்கு

30 சதவீத வாக்குகளை கொண்டுள்ள ஒரு பாஜக போன்ற ஒரு தேசிய கட்சியை எதிர்க்கட்சிகளால் வீழ்த்துவது மிகவும் கடினமான காரியம். ஏனென்றால் 65 சதவீத வாக்குகளை பத்து, பதினைந்து
மாநிலக்கட்சிகள் பிரித்துக் கொண்டு விடும்.

மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற வலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். பாஜக எங்கும் போய் விடாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு அதை எதிர்த்து நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

மோடியின் பலத்தை நீங்கள் ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அறிந்து கொள்ளாதவரை, அவரைத் தோற்கடிக்க உங்களால் ஒருபோதும் முடியாது” என்று கூறியிருந்தார்.

Sonia_Rahul_UpdateNews360

பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னதற்கு முக்கிய காரணமே, இனி காங்கிரஸ் தலைமையில் மத்திய பாஜக அரசை எதிர்த்தால் தோல்விதான் கிடைக்கும். எனவே மம்தா பானர்ஜியின் தலைமையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரளவேண்டும். அப்படி நடந்தால் மத்தியில் பாஜக அரசை வீழ்த்தி விட முடியும் என்பது அவருடைய கணிப்பு.

இதற்காகத்தான் மம்தா பானர்ஜியை 2024-ல் பிரதமர் வேட்பாளருக்கு நிறுத்த எதிர் கட்சிகளின் ஆதரவை அவர் இப்போதே திரட்டி வருகிறார்.

மீண்டும் எச்சரிக்கை

ஆனால் இந்த அறிவுரையை காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் பிரசாந்த் கிஷோர் இரு தினங்களுக்கு முன்பு இன்னொரு சர வெடியை கொளுத்தி போட்டார்.

“பலமான எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரசின் பிரதிநிதித்துவம் அவசியமானது. ஆனால், காங்கிரஸ் தலைமை பதவி தனி நபர் யாருக்கும் சொந்தமானது இல்லை. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீதம் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி கண்டுள்ளது. எனவே எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைமை என்பது ஜனநாயகப்பூர்வமாக தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

sonia - mamata - pk - updatenews360

ஜோதிமணி கொந்தளிப்பு

இந்த கருத்து காங்கிரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. சோனியாவும், ராகுலும் நேரடியாக பிரசாந்த் கிஷோருக்கு பதிலடி கொடுக்காவிட்டாலும் கூட மூத்த தலைவர்கள் பொங்கியெழுந்து அவரை வறுத்து எடுத்து விட்டனர். தற்போது கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி ஜோதிமணியும் தன் பங்குக்கு வசைமாரி பொழிந்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் தலைவரை காங்கிரஸ் தொண்டர்கள் தேர்வு செய்துகொள்வோம். எங்கள் கட்சிக்காகவும், இந்த நாட்டுக்காகவும் தியாகம் செய்தவர்கள் யார் என நாங்கள் அறிவோம். காங்கிரசை வீழ்த்துவதற்கு பாஜகவுடன் சேர்ந்து வேலைசெய்தவர் நீங்கள்தான். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயம்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதாவது எங்க கட்சிக்குள்ள நாங்க ஏதோ செய்து கொள்வோம். உங்க வேலையைப் பார்த்துக்கொண்டு பேசாம போங்க என்று அதிரடி காட்டி இருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு காங்கிரசால் தனித்து பாஜகவை வீழ்த்த முடியாது என்று பிரசாந்த் கிஷோர் சொன்னபோது கூட அதற்காக இப்படி தனிப்பட்ட முறையில் ஜோதிமணி கண்டனம் தெரிவிக்கவில்லை.

அப்போது வராத ஆவேசமும் கோபமும், இப்போது மட்டும் வந்தது ஏன்?…

நெருக்கடி..?

இதுபற்றி டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பிரசாந்த் கிஷோரின் கருத்து பல மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகம், மராட்டியம், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரசின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏனென்றால் தமிழகத்தில் திமுகவையும், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசையும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவையும் சார்ந்தே அது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் நாடாளுமன்ற தொகுதிகளை பேரம்பேசி கேட்டுப் பெறுவது காங்கிரசுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் அக்கட்சிக்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகளை திமுகவோ, தேசியவாத காங்கிரசோ, ராஷ்டிரிய ஜனதா தளமோ ஒதுக்க முன்வராது என்பது எதார்த்தம்.

2019 தேர்தலில் மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் 19 தொகுதிகளையும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 9 சீட்டுகளையும், ஜார்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 7 தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தன. அடுத்த தேர்தலில் இந்த மாநிலங்களில் காங்கிரசுக்கு போட்டியிடும் தொகுதிகள் கணிசமாக குறைக்கப்படலாம்.

ஸ்டாலினுக்கு துணை பிரதமர் பதவி?

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 9 தொகுதிகளை ஒதுக்கியது. புதுச்சேரியையும் விட்டுக் கொடுத்தது. ஆனால் 2024 தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. 3 அல்லது 4 தொகுதிகளை திமுக ஒதுக்கலாம். புதுச்சேரியிலும் திமுகவே போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றால் திமுகவுக்கு துணைப்பிரதமர் பதவி வழங்கப்படலாம் என்கிற பேச்சும் உள்ளது. எனவே தமிழகத்தில் திமுக மட்டுமே 33 தொகுதிகளில் போட்டியிடும் என்கின்றனர்.

Cm stalin -Updatenews360

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும், காங்கிரசுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் கிடைத்தவரை லாபம்தான் என்று கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். திமுகவிடம் எந்த பேரமும் பேச மாட்டார்கள்.

ஜோதிமணிக்கு கல்தா

இதுபோன்ற நிலையில் தற்போதைய எம்பிக்காளான திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த் போன்றவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மல்லு கட்டுவார்கள். எனவே ஜோதிமணி மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மீது அண்மையில் ஜோதிமணி பகிரங்கமாக குற்றம்சாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதை திமுக தலைமையும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவ்வளவாக ரசிக்கவில்லை. தனது போராட்டத்தை வாபஸ் பெற்றபோது கூட தனக்கு நெருக்கமானவரும், தனது மாவட்டத்தைச் சேர்ந்த வருமான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி நன்றி தெரிவிக்கவும் இல்லை.

இதனால் 2024 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும் கூட கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படாது என்ற பேச்சும் இப்போதே அடிப்படுகிறது.

ஒருவேளை அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக ஜோதிமணி நியமிக்கப்பட்டாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்படலாம்.

தான் மீண்டும் ஒருமுறை எம்பி ஆகும் வாய்ப்பை, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கெடுத்துவிடுவாரோ என்ற பயமும் உள்ளூர ஜோதிமணிக்கு வந்துள்ளது. அந்த கோபத்தில்தான் டெல்லி மேலிட தலைவர்களுக்கு இணையாக அவரும் இப்படி பொங்கி இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது”என அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 297

0

0