சோனியாவுக்கு எதிராக சீனியர் தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி… ராஜஸ்தானில் கோஷ்டி மோதல் உச்சம்!!

14 June 2021, 6:55 pm
congress cover - updatenews360
Quick Share

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகார மோதல் ஏற்பட்டது.

காங்கிரசில் இன்னொரு பூகம்பம்

இதைத்தொடர்ந்து அப்போது அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனித் தனியே சந்தித்துப் பேசினார். ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்ட சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பால் அப்போதைக்கு பிரச்சனை ஓய்ந்தது.

Sonia_Rahul_UpdateNews360

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த மாதமே காங்கிரசில் இன்னொரு பூகம்பம் வெடித்தது. அதுவரை கட்சியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத, இது பற்றி வெளிப்படையாக பேசாத காங்கிரசின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதினர்.

டெல்லி மேல்சபையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணிஷ் திவாரி, சசிதரூர், முகுல் வாஸ்னிக், பூபேந்தர் சிங் ஹூடா, ராஜேந்தர் கவுர் பட்டீல்,எம்.வீரப்ப மொய்லி, பிருத்விராஜ் சவான், பி.ஜே குரியன், அஜய் சிங், ரேணுகா சவுத்ரி, மிலிந்த் தியோரா உள்ளிட்ட 23 சீனியர் தலைவர்கள் சோனியாவுக்கு எழுதிய அந்த கடிதத்தில் அனைவராலும் அறியப்பட்ட, முழு நேரமும் துடிப்பாக செயல்படும் ஒரு சிறந்த தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல், கட்சி தலைமைக்கு மீண்டும் தேர்தலை நடத்துவது, கட்சியின் புத்துணர்வான செயல்பாட்டுக்கு வழிகாட்டுவதற்கான நிறுவனம் சார்ந்த நடைமுறையை உடனடியாக உருவாக்குவது போன்ற கோரிக்கைகளும் அதில் இடம்பெற்று இருந்தன.

ஆனால் இப்படி கடிதம் எழுதிய தலைவர்களை, கட்சியில் கலகம் ஏற்படுத்துவோர் என்று முத்திரை குத்தப்பட்டது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் வலியுறுத்தினர். அப்படி நடவடிக்கை எடுத்தால் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை, பெயரளவுக்கு 23 பேருக்கும் விளக்கம் கேட்டு ஒரு நோட்டீசை அனுப்பிவிட்டு இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டது.

கெலாட் – பைலட் மீண்டும் மோதல்

இந்த நிலையில்தான், சரியாக ஓராண்டுக்கு பின்பு ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. தங்களது செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது பகிரங்கமாகவே குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

இதை உடனடியாக சச்சின் பைலட் கட்சியின் மேலிடத்திற்குத் தெரிவித்து விட்டார். கடந்த ஆண்டு சமரச முயற்சியில் ஈடுபட்ட பிரியங்கா இரண்டாவது முறையாக மீண்டும் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட சச்சின் பைலட்டிடம் பிரியங்கா சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்., க்கு தலைவலி :

உண்மையில் இதுசெல்போன் ஒட்டு கேட்டது தொடர்பாக எழுந்த மோதல் போல் தெரியவில்லை. கடந்தாண்டு நடந்த சமரசத்தின் போது சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால் ஒரு வருடம் ஆகியும் இடம் கொடுக்கவில்லை என்பதால்தான் இப்போது பிரச்சினை வெடித்துள்ளது என்கின்றனர்.
இதனால் ராஜஸ்தான் அமைச்சரவையை விரைவில் விரிவாக்கம் செய்து, கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பிரியங்கா யோசனை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Sonia_Gandhi_UpdateNews360

ஆனால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவது டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியான விஷயம்தான்! அதேநேரம் காங்கிரஸ் தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் இன்னொரு விவகாரமும் கடந்த ஆண்டைப் போலவே சீனியர் தலைவர்கள் மூலம் மறுபடியும் உருவாகி இருக்கிறது

கட்சிக்கு அறுவை சிகிச்சை :

கடந்த சில வாரங்களாகவே காங்கிரசின் மூத்த தலைவர்களான வீரப்ப மொய்லியும், கபில்சிபலும் கட்சித் தலைமையை தட்டி எழுப்பும் விதமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

வீரப்ப மொய்லி சொல்வது என்ன?

“2019 நாடாளுமன்ற தோல்வியை தொடர்ந்து, காங்கிரசுக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று சொன்னேன். அதை செய்யாமல் தாமதித்து விட்டோம். தள்ளிப்போடாமல், இப்போதே பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குடும்ப பெருமையை மட்டுமே கட்சி சார்ந்து இருக்கக்கூடாது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். திறமையான நபர்களை உரிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். கட்சியை சீரமைத்து வழிக்கு கொண்டு வந்தால், மோடியை தேர்தலில் வீழ்த்தி விடலாம்” என்கிறார்.

இன்னொரு மூத்த தலைவரான கபில்சிபல் பேசும்போது, “பாஜகவுக்கு எதிராக தற்போது வலுவான அரசியல் மாற்று இல்லை. அசாமிலும், மேற்கு வங்காளத்திலும் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விகளை மறுஆய்வு செய்ய குழுக்களை அமைப்பது நல்லது. எனினும், பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளை செயல்படுத்தாவிட்டால் எந்த பலனும் கிடைக்காது. கட்சி செயலற்ற நிலையில் இல்லை என்பதை காட்ட, கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். கட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்,’’ என்றார்.

kabil sibal 1- updatenews360

இந்த இரு தலைவர்களும் வெளிப்படையாகவே சோனியா, ராகுல் இருவரை மட்டுமே நம்பி கட்சி இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்கள். மேலும் கட்சிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறும் இருவரும் சோனியாவின் தலைமையை விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது!

23 தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஜிதன் பிரசாதா அண்மையில் பாஜகவில் இணைந்து விட்டதும், அதைத்தொடர்ந்தே இந்த இரு தலைவர்களும் சோனியாவின் தலைமைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி உயர்த்தியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது விஷயம்!

காங்கிரசுக்கு இப்படி ஒரே நேரத்தில் இரு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Views: - 189

1

0