காங்கிரஸ் தலைவர் தேர்தல் : சோனியா நடத்தும் நாடகமா?

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 10:11 pm
Congress ACT - Updatenews360
Quick Share

தொடர்ந்து 2014, 2019 என இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து விட்ட நிலையில் கட்சிக்கு நேரு குடும்பத்தினர் அல்லாத ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற கோஷம் காங்கிரசில் கடந்த ஒரு வருடமாகவே உரக்க ஒலித்து வருகிறது.

அதாவது ஏற்கனவே காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா, அவருடைய மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா என யாரும் கட்சியின் தலைமைப் பதவிக்கு தேவையில்லை என்பது மறைமுகமாக வலியுறுத்தப்பட்டது. அப்போதுதான் 2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு காங்கிரசால் கடுமையான போட்டியை கொடுக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்

இதை தற்காலிக தலைவரான சோனியாவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17-ம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டது. கட்சியில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதை உறுதி செய்யும் விதமாக, இதற்காக யாரும் யாரின் அனுமதியையும் பெற தேவை இல்லை என்று காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பும் வெளியிட்டது.

இத்தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட முதன்முதலில் தனது விருப்பத்தை வெளியிட்டவர் முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் தொகுதி எம்பியுமான சசி தரூர்தான். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் போட்டிக் களத்தில் குதித்தார்.

அசோக் கெலாட்டுக்கு வந்த ஆசை

ஆனால் அவர் தனது முதலமைச்சர் பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் என்று டெல்லி தலைமை விரும்பியது. அதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க மறுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், அசோக் கெலாட் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

உண்மையில் சோனியாவின் விசுவாசியாக கருதப்படும் அசோக் கெலாட் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் தனது கட்டுப்பாட்டின் கீழ் அவர் செயல்படுவார் என்று நம்பித்தான் அவரை தேர்தலில் போட்டியிட சோனியா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தால் தனது எதிர்கால அரசியலே பாழாகி விடுமோ என்று பயந்தோ, என்னவோ அசோக் கெலாட் கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் சோனியாவும், ராகுலும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

களத்தில் குதித்த சசி தரூர்

இந்த நிலையில்தான் சசி தரூர், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் ஆகியோர் காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வாங்கினர்.

வேட்பு மனு தாக்கலின்போது சில அதிரடி திருப்பங்களையும் காணமுடிந்தது.போட்டியில் இருந்து விலகுவதாக திக் விஜய் சிங் திடீரென்று ஜகா வாங்கினார்.

மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் ஏற்கனவே அறிவித்தபடி, சசி தரூர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், தனது வேட்புமனுவை கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசூதன் மிஸ்த்ரியிடம்
தாக்கல் செய்தார்.

மேளதாளங்கள் முழங்க கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்துடன் அவர் வந்த போதும் கூட கட்சியின் முக்கிய தலைவர்களோ, அறிமுகமான பிரபலங்களோ என்று ஒருவர் கூட சசி தரூருடன் இல்லை. இத்தனைக்கும் அப்போது கட்சி அலுவலக வளாகத்தில், அனைத்து தலைவர்களும் குவிந்துதான் இருந்தனர்.

மல்லிகார்ஜு கார்கே வேட்பு மனு

அதேபோல முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.என்.திரிபாதி ஆகியோரும்
மனுத்தாக்கல் செய்தனர்.

இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சசி தரூர் மனு தாக்கல் செய்தபோது அவருடன் எந்தவொரு மூத்த தலைவர்களும் வராத நிலையில் மல்லிகார்ஜுன கார்கே மனுதாக்கல் செய்தபோது அசோக் கெலாட், திக்விஜய்சிங், பிரமோத் திவாரி, ஏ.கே.அந்தோணி பவன்குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து உடன் வந்து முன்மொழிந்தனர் என்பதுதான்.

அதிருப்தி தலைவர்களும் ஆதரவு

இதில் இன்னொரு வேடிக்கையையும் பார்க்க முடிந்தது. அதாவது ‘ஜி 23’ குழுவின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து, சோனியாவுக்கு எதிராக கையெழுத்திட்ட ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா, மணீஷ் திவாரி, பிரித்விராஜ் சவுகான் என பலரும் மல்லிகார்ஜுன கார்கேவின் பின்னால் அணிவகுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின்னர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிறுவயது முதலே காங்கிரசுக்காக நான் உழைத்து வருகிறேன். பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் 9,100 பேருக்கு வாக்குரிமை உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் வருகிற 17-ம் தேதி தேர்தல் நடைபெறும். அந்தந்த மாநிலத் தலைமை அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். 19-ம் தேதியன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையின் போது கே.என். திரிபாதியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மல்லிகார்ஜுன கார்கே- சசி தரூர் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

நடுநிலையை தவறிய சோனியா

இந்தத் தேர்தலில் யாருக்கு சாதகமாகவும் நடந்து கொள்ள மாட்டேன். நடுநிலை வகிப்பேன் என்று கூறியிருந்த சோனியா தற்போது, தனது முழு ஆதரவையும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அளிப்பதாக கூறப்படுகிறது.

நடுநிலையாளரான சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது உறுதியாக தெரிந்த உடனேயே கட்சியை தொடர்ந்து தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கேவை, சோனியா களத்தில் இறக்கி விட்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சோனியாவின் திட்டமிட்ட நாடகம்?

“இந்த தேர்தல் சோனியா, ராகுல் இருவராலும் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம்” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக முதல் ஆளாக அறிவித்ததுடன் சசி தரூர், சோனியாவை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது, ‘யார் பக்கமும் நான் நிற்க மாட்டேன். புதிய தலைவருக்கான தேர்தலில் நடுநிலை வகிப்பேன்’ என்று சோனியா வாக்குறுதியும் அளித்தார். அதேநேரம் அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய விசுவாசிகளுக்கும் இன்னொரு பயம் வந்து விட்டது.

சசி தரூர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு விட்டால் அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. அவர் தன் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரித்தான் செயல்படுவார் என்று நினைத்து அவர்கள் உஷார் ஆனார்கள்.

இதைத் தொடர்ந்தே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் பேசி, அவரை சோனியாவின் ஆசி பெற்ற மேலிட வேட்பாளராக நிறுத்த ஏற்பாடானது. ஆனால் அவரோ, கட்சித் தலைவராக, சோனியா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதை விட, மாநில அரசியலே மிகவும் சிறந்தது, அதிகாரம் மிக்கது என்று நினைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கடைசி நேரத்தில் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடி கட்சி மேலிடத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டார்.

மேலிடத்தில் மாஸ்டர் பிளான்

இதையடுத்து கமல்நாத், முகுல் வாஸ்னிக், திக்விஜய் சிங் என பல தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் மல்லிகார்ஜுன கார்கேவை சோனியாவின் விசுவாசிகள் களம் இறக்கி விட்டுள்ளனர்.

1996 செப்டம்பர் முதல் 1998 மார்ச் வரை காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை அதிரடியாக வெளியேற்றி, கட்சியை சோனியா கைப்பற்றியது பழைய வரலாறு. அதே பாணியில், தற்போது கட்சியை தன் முழு கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் சோனியா தனது தீவிர விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார்.

இப்போதைய நிலையில் அவருக்குத்தான் சோனியா ராகுல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவும் உள்ளது. ஏனென்றால் மூத்த தலைவர்கள் யாரும் சோனியாவை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களால் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பது நிச்சயம். அடுத்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே புதிய தலைவர் தனது பதவியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகும்.

ராகுலுக்கு அடிக்கும் வாய்ப்பு

ஏனென்றால் பிரதமர் மோடிக்கு எதிராக தன்னால் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்ய முடியாது. அது எந்த விதத்திலும் காங்கிரஸ் வெற்றிக்கு உதவாது, சோனியாவின் குடும்பத்தினரால்தான் அதை எதிர்கொள்ளமுடியும் என்று கூறிவிட்டு அந்தத் தலைவர் ஒதுங்கிக் கொள்வார். அல்லது அந்த தலைவருக்கு பதவியில் இருந்து விலகும் நெருக்கடி அளிக்கப்படலாம்.

அப்போது கட்சிக்கு ராகுலை தலைவராக நியமித்தால் யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்பதுதான் சோனியாவின் நாடகம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது” என அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நடத்தப்பட இருக்கும் தேர்தல் குறித்த தகவல் திடுக்கிடத்தான் வைக்கிறது!

Views: - 391

0

0