தொடரும் நீட் தற்கொலை சோகம் : திமுக வாக்குறுதி என்ன ஆச்சு?!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 8:10 pm
Neet - Updatenews360
Quick Share

நீட் தேர்வு என்றாலே தமிழகத்தில் அரியலூர் நகரின் பெயர் சட்டென்று அனைவரது நினைவுக்கும் வந்துவிடும். அதற்கு சில காரணங்களும் உண்டு.

அனிதா தற்கொலை

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியவர், அரியலூர் மாணவி அனிதா. ஆனால் “நீட் தேர்வு செல்லும். அதில் விலக்கு கோரவும் இயலாது. அதற்கு தடை விதிக்கவும் முடியாது” என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதனால் மனமுடைந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த அனிதாவுக்கு நீட் தேர்வு இல்லாத நிலையில் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்திருக்கும். ஆனால் நீட் தேர்வில் 720க்கு 86 மதிப்பெண்களே அவர் எடுத்திருந்தார். பட்டியலின வகுப்பு மாணவியான அனிதா 107 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க சீட் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அரியலூரில் சோகம்

இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தேர்வு பயத்தில் மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

2021-ம் ஆண்டு அரியலூர் சாத்தம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரின் மகள் கனிமொழி, நீட் தேர்வு எழுதிவிட்டு வந்த பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேவையான கட்-ஆப் மதிப்பெண்ணை நம்மால் பெற முடியுமா?… என்ற பயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில்தான் அரியலூரைச் சேர்ந்தவரும், வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவருமான நடராஜன் என்பவரின் மகள் நிஷாந்தினி நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதுவதற்கு பயந்து நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத் தேர்வை எதிர்கொள்வதற்காக அவர் திருச்சியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மூலம் ஆன்லைன் வகுப்பிலும் படித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நீட் தேர்வு என்றாலே அரியலூரில் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் இன்னுயிர்களை மாய்த்துக் கொள்வது தொடர்ந்து நடைபெறும் துயர நிகழ்வாக மாறிவிட்டது.

நீட் தேர்வும் திமுக வாக்குறுதியும்

அதுவும் 2017-ல் அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக, விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அனிதாவின் தற்கொலையை, ஒரு பூதாகரமான பிரச்சினையாக்கின. தவிர தற்கொலை செய்துகொண்ட மாணவி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வீடுகளுக்கு திமுக கூட்டணி தலைவர்கள் படையெடுக்கவும் செய்தனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில், எங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்தன. ஆனால் மாநிலத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது.

இதனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சியை கைப்பற்றினால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்தது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:

“தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாறு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் அரங்கேறி வருகிறது. இது மிகுந்த வேதனை தரும் விஷயம்.

இதனால்தான் திமுக ஆட்சிக்கு வந்ததால் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்று கடந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகிய மூவரும் மேடைதோறும் இந்த வாக்குறுதியை அளித்தனர்.

அதுவும் உதயநிதி ஒரு படி மேலே சென்று, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என பிரச்சாரமும் செய்தார். திமுக கூட்டணியும் தேர்தலில் வெற்றி பெற்றது.

ஏகே ராஜன் தலைமையில் குழு

ஆட்சிக்கு வந்த பின்பு, தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை திமுக அரசு அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் ஒரு சட்ட முன் வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாளே அதாவது, செப்டம்பர் 12-ம் தேதியே நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

அதேநேரம் அந்த சட்ட முன்வடிவுடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் சில தவறுகள் இருப்பதாக கூறி ஆளுநர் ரவி அதை திரும்பவும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

அதனால் மீண்டும் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கூட்டி திமுக அரசு ஆளுநர் ரவிக்கு இரண்டாம் முறையாக அதை அனுப்பி வைத்தது. அந்த சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது.

அதிமுக அரசு செய்த சாதனை

இது போன்ற சிக்கல்கள் காரணமாகத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை கொண்டு வந்து ஏழை எளியவர்களின் குடும்பத்தினருக்கு பேருதவி செய்தது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1000 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் மாணவர்கள் எதுபோல தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அதே மாதிரித்தான் நீட் தேர்வுக்கும் தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்” என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெற்றோர்களும் எனது லட்சிய கனவே நீ டாக்டருக்கு படித்து இந்த சமுதாயத்தில் உயரிய இடத்தை பெறவேண்டும் என்பதுதான் என்று தங்களது பிள்ளைகளுக்கு நீட் விஷயத்தில் கடும் நெருக்கடியோ, அழுத்தமோ கொடுக்க கூடாது. அதேபோல பள்ளி இறுதி ஆண்டில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டும் வைத்து பிள்ளைகளை எடை போடுவதும் சரியல்ல.

மாணவர்களை ஊக்கமளிக்க வேண்டும்

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றால் கவலைப்படாதே வேறு எத்தனையோ தொழிற் படிப்புகள் இருக்கின்றன அதைப் பார்த்துக் கொள்வோம் என்று ஊக்கமளிக்க வேண்டும். அப்போதுதான் நீட் தேர்வு குறித்து எந்த பயமும் அவர்களிடம் வராது. எப்போதும் போல் இயல்பாக இருப்பார்கள்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு உரிய முறையில் சிறந்த பயிற்சியும், கவுன்சிலிங்கும் கொடுக்கவேண்டும். அப்போது அவர்களின் தன்னம்பிக்கையும், மன தைரியமும் அதிகரிக்கும்.

எனவே தொடர்ந்து நீட் தேர்வு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மாணவர்களை அதற்கு தயார்படுத்துவதே சிறந்த வழியாகும்.

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடங்களில் இருந்தே 95 சதவீத கேள்விகள் நீட் தேர்வில் கேட்கப்படுகின்றன. எனவே இந்தப் பாடங்களை ஆழமாக ஊன்றி படித்தாலே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் பெற்று விட முடியும்” என்று அந்தக் கல்வியாளர்கள் நம்பிக்கையுடன் அட்வைசும் தருகின்றனர்.

Views: - 491

0

0