அடுத்தடுத்து குறிவைக்கப்படும் பாஜக, இந்து முன்னணி பிரமுகர்கள்… 24 மணிநேரத்தில் 5 இடங்களில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல்… கோவையில் பதற்றம்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 4:45 pm
Quick Share

கோவையில் கடந்த 24 மணிநேரங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அந்த அமைப்பின் ஏ.எஸ் இஸ்மாயிலை கைது செய்தனர். இதற்கு அந்த அமைப்புச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Cbe Bjp Protest - Updatenews360

அடுத்தடுத்த போராட்டங்களால் கோவையில் பதற்றம் நிலவி வருகிறது. இப்படியிருக்கையில் நேற்றிரவு கோவையில் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் பாஜகவினர் நேற்று இரவே போராட்டம் நடத்தினர். மேலும், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் பாஜக பிரமுகர்கள்களான பொன்ராஜ், சிவா ஆகியோரின் கார்கள், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரின் இரண்டு ஆட்டோக்கள் மற்றும் கார் மீது கோடாரியால் கண்ணாடியை உடைத்தும், டீசல் ஊற்றியும் மர்ம நபர்கள் எரிக்க முயற்சி செய்து உள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்தும், CCTV கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, ரத்தினபுரியில் உள்ள மண்டல் தலைவர் மோகன் வெல்டிங் பொருட்களை விற்கும் கடையிலும், மேட்டுப்பாளையத்தில் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், குனியமுத்தூர் இந்து ‌முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகு என்பவரின் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

கோவையில் கடந்த 24 மணிநேரங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக போலீசார் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 350

0

0