பெண்கள் குறித்து அடுத்தடுத்து அவதூறு… டிஜிபிக்கு பறந்த புகார்கள் : ஆயத்தமாகும் காவல்துறை… சிக்குகிறார் டுவிட்டர் போராளி சித்தார்த்..?

Author: Babu Lakshmanan
11 January 2022, 4:52 pm
Quick Share

பெண்கள் குறித்து அடுத்தடுத்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதால், நடிகர் சித்தார்த் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, பாதியிலேயே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இதனால், பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது என்று பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு நடிகர் சித்தார்த் ஆபாசமான வார்த்தைகளால் பதில் அளித்திருந்தார். அவரது பதிவுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

மேலும், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சித்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ‘தேசிய மகளிர் ஆணையம்’ மகாராஷ்டிரா மற்றும் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தது.

இருப்பினும், சில எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து, தனது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அவரை அவமரியாதை செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை என்று சித்தார்த் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், இந்த விவகாரம் அவரை விட்டபாடில்லை.

இதேபோன்று, பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட பிரபல தனியார் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளரையும் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, இந்த சம்பவமும் பூதாகரமாகி வருகிறது. பெண் செய்தி வாசிப்பாளரை அவதூறாக பேசிய நடிகர் சித்தார்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா மேலும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபிக்கு தேசிய பெண்கள் ஆணையம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க தமிழக போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DGP Warn-Updatenews360

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்று பெண்கள் குறித்து இழிவான கருத்துக்களை கூறிய நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிறருக்கு இதுபோன்று செய்யும் எண்ணம் வராது என்கின்றனர் பெண் சமூக ஆர்வலர்கள்.

Views: - 253

0

0