‘இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி’: மதப்பிரச்சாரம் செய்யக் கூடாது… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 5:47 pm
Quick Share

கோவை – அன்னூர் அருகே மதப்பிரச்சாரம் செய்ய யாரும் வரக்கூடாது, இது இந்துக்கள் மட்டுமே வாழும் இடம் என வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் சர்ச்சையினை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகை தான் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பேசுபொருளாகி வருகிறது. மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது.

மேலும், இந்த பேனர் காவி நிறத்தில் எச்சரிக்கை என்ற பெரிய எழுத்துக்களுடன், “இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப்பிரச்சாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” எனவும், இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அண்மையில் சிலர் காடுவெட்டி பாளையம் பகுதியில் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்த பேனரை வைத்துள்ளதாக காடுவெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தகவலாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 649

0

0