உச்சம் தொட்ட கொரோனா… நிம்மதியை குலைக்கும் ‘நிபா’…!! இரட்டைத் தாக்குதலில் திணறும் கேரளா

Author: Babu Lakshmanan
6 September 2021, 1:12 pm
Kerala corona - updatenews360
Quick Share

குடியிருக்கும் கொரோனா

கொரோனா தொற்று அண்மைக்காலமாக கேரளாவை ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது. அதுவும் கடந்த ஒரு வாரமாக அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது. தினமும் 125 முதல் 150 பேர் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42,766. இவர்களில் 70 சதவீதம் பேர் சுகாதாரத் துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.

Corona_Kerala_UpdateNews360

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கேரளா அரசும், அதன் சுகாதாரத்துறையும் என்னென்னவோ செய்து பார்த்தும் கூட இதுவரை எந்த பலனும் இல்லை.

அச்சுறுத்தும் நிபா வைரஸ்

இந்த நிலையில்தான் 3 ஆண்டுகளுக்குப் பின்பு உயிர்க் கொல்லி நோயான நிபா வைரஸ் கேரளாவில் மீண்டும் தலைதூக்கி இந்தியாவை பயமுறுத்த தொடங்கி இருக்கிறது. 2018-ம் ஆண்டு மே மாதம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கியபோது, ஒரு நர்ஸ் உட்பட17 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார், என்பது நினைவு கூரத்தக்கது.

கடந்த மாதம் 27-ம் தேதி 12 வயது கேரளச் சிறுவனுக்கு திடீரென கடும் காய்ச்சல் கண்டுள்ளது. முதலில் ஒரு தனியார் கிளினிக்கிலும் பின்னர் அவனை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சேர்த்துள்ளனர். அங்கு அவனுடைய நிலைமை மோசம் அடையவே கடந்த
1-ம் தேதி கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான்.

அச்சிறுவன் உயிருடன் இருந்தபோது, 3 வித பரிசோதனைகள் அவனிடம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் மாதிரிகள் புனே நகரில் உள்ள தேசிய தொற்றுநோய் இயல் நிறுவனத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது அந்த சிறுவனுக்கு, நிபா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் அடுத்த சில மணி நேரங்களில் அவன் உயிரை இழந்து இருக்கிறான்.
இதைத் தொடர்ந்து மாநில அரசு கோழிக்கோட்டில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஒன்றை உடனடியாக தொடங்கியும் விட்டது.

அந்த சிறுவனிடம் தொடர்பில் இருந்த அவனுடைய குடும்பத்தினர் 5 பேரும், அக்கம் பக்கத்தினர் 12 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறி எதுவும் தென்படவில்லை என்கிறார்கள்.

சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவன் சிகிச்சை பெற்ற வார்டை உடனடியாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடினர். அதன் அருகில் உள்ள 3 வார்டுகளுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

அதேபோல் அந்த சிறுவன் வசித்து வந்த சாத்தமங்கலம் என்ற கிராமத்திற்குள்
வெளியாட்கள் எளிதில் நுழைந்துவிட முடியாத வைகையில் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

கோழிக்கோட்டின் பக்கத்து மாவட்டங்களான கண்ணனூர், மலப்புரம் மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இதுதவிர மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று உடனடியாக கோழிக்கோடு சென்று விரிவான ஆய்வில் ஈடுபடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உயிரிழப்புக்கு அதிக வாய்ப்பு

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, “சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றி தகவல் தெரியவந்ததும் அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. யாருக்காவது நிபா வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு ஒன்றும் உடனடியாக அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஒரு வைரஸ் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன், பலியாகி இருக்கிறான், இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் நிச்சயம் எழும்.
ஆனால் நிபா வைரசின் வீரியம் பற்றி தெரிந்தவர்கள் பீதி அடைவார்கள்.

நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் 75% முதல் 95% வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இறந்து போய் விடுவதால் இது பெரும் தொற்று நோயாக மாறாமல் தடுக்கப்படுகிறது. ஒருவேளை கொரோனா போல வேகமாக பரவினால் பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிவிடும் என்பது நிச்சயம்.

பொதுவாக பழம்தின்னி வவ்வால்கள் ஆசியக் கண்டத்தில் மலேசியா, பூடான், புருனை, சீனா, இந்தோனேசியா, நேபாளம், மியான்மர், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வகை வவ்வால்கள் பனம் பழத்தை விரும்பித் தின்னும். பனை மரக் கள்ளையும் குடிக்கும். அந்தப் பழத்தையோ, கள்ளையோ சாப்பிட நேர்ந்தால் மனிதர்களுக்கும் நிபா வைரஸ் தாக்கிவிடும். இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வைரஸை பரப்பும் வவ்வாலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்பதுதான்.

இந்த வைரசின் பிறப்பிடம் மலேசியாவிலுள்ள ‘சுன்கை நிபா’ என்னும் பகுதியாகும். 1999-ம் ஆண்டு அங்கிருந்து பரவியதால் இதற்கு நிபா வைரஸ் என்ற பெயர் சூட்டப் பட்டுவிட்டது.

கேரளாவுக்குள் 2-வது முறையாக புகுந்துள்ள நிபா 2001-ல் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியிலும், 2007-ல் நாடியா மாவட்டத்திலும் கடுமையாக தாக்கியது. இதில் 25-க்கும் மேற்பட்டோர், பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிபா வைரஸின் அறிகுறிகள் காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, மூச்சுவிடத் திணறுவது கழுத்துவலி, தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்றவையாகும். காய்ச்சல் உச்சம்பெற்ற 72 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு உறுதி. மேலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை, கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் போலவே இவர்களையும் தனி வார்டில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டிய நெருக்கடியும் உள்ளது என்பதால்தான், நிபா வைரஸை கண்டு மருத்துவ உலகம் நடு நடுங்குகிறது.

கேலிக்குள்ளாகும் கேரள அரசு

கேரள எதிர்க்கட்சிகள் கூறும்போது, “கொரோனா முதல் அலையை சிறப்பாக கையாண்ட மார்க்சிஸ்ட் அரசு, இரண்டாவது அலையின்போது மிகவும் மெத்தனமாக செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. நினைத்தால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, சில நேரம் பண்டிகைகளின் போது தாராளமாய் தளர்வுகளை அறிவிப்பது பினராயி அரசின் வாடிக்கையாகிவிட்டது. மக்களின் உயிர்களை பற்றிய கவலையும் இல்லாமல் போய்விட்டது. இனி அடுத்த மாத இறுதியில் 3-வது அலை வேறு வரப்போகிறது என்கிறார்கள். இப்படி கொரோனாவை நினைத்து மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், நிபா வைரஸ் வேறு பயமுறுத்துகிறது. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரோ யாரும் கவலை கொள்ள தேவையில்லை என்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் அமைச்சர் சொல்வதில் நியாயம் இருந்திருக்கும். ஆனால் அடுத்தடுத்து ஏதாவது ஒரு வைரஸ் பரவினால் மக்களுக்கு உயிர் பயம் வரத்தானே செய்யும்? “என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Kerala Corona - updatenews360

“மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் கேரளாவில் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாக பக்கத்து மாநிலங்களை சேர்ந்த சில அமைச்சர்கள் கூறுகின்றனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. இது கேரள அரசை கேலி செய்வதுபோல உள்ளது” என்றும் அவர்கள் வேதனைப்பட்டனர்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவுவது பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது,”இதுபற்றி மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. என்ற போதிலும் கொரோனா வைரசோ, நிபா வைரசோ மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு பரிசோதனைகளை விரிவுபடுத்தவும் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது”என்று குறிப்பிட்டார்.

நிபா வைரஸ் பற்றி மக்களிடம் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்!

Views: - 307

0

0