ஊரடங்கிற்கு பிறகும் உச்சம் தொட்ட கொரோனா : மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுமா?

15 May 2021, 11:41 am
corona cover - updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்குதல் தீவிரமாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு பாதிப்பு மூன்றரை லட்சத்திற்கு அதிகமாகவும், உயிரிழப்பு 4 ஆயிரமாகவும் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை அறிவித்துள்ளன. என்றபோதிலும் கொரோனா படு பயங்கரமாக தலைவிரித்தாடுகிறது.

Oxygen Andhra -Updatenews360

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமை, பிணவறையில் போதிய இடம் இல்லாததால் பலியானவர்களின் சடலங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைப்பது, இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு
6, 7 மணி நேரம் காத்திருப்பது போன்ற துயரக் காட்சிகள் எல்லாம் நம் நாட்டில் அன்றாட நிகழ்வுகளாகி மனதை மரத்துப் போக வைத்துவிட்டன.

கோவை அரசு மருத்துவமனையில், பிணவறைக்கு அருகே தற்காலிகமாக ஒரு தகர கொட்டகை அமைத்து, அதற்குள் கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது காண்போரின் இதயத்தை பிழிய வைப்பதாக இருக்கிறது. எத்தனை கல் நெஞ்சக்காரர்களின் மனதையும் இக்காட்சி கரைய வைத்து விடும்.

Corona Dead Bodies - Updatenews360

தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கொரோனா பரவலை தடுக்கும் தீவிர முயற்சியாக 10-ந் தேதி முதல் 24-ந் தேதி மாலை 4 மணி வரை இரு வார ஊரடங்கையும் அவர் அறிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டது. இப்படி அரசு அறிவித்ததன் நோக்கமே, மற்ற நேரங்களில் தேவையின்றி மக்கள் வெளியே நடமாடக் கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால் அரசு பிறப்பித்த உத்தரவை, மக்கள் கொஞ்சமும் மதித்ததாக தெரியவில்லை. அவற்றை காற்றில் பறக்கவிட்டதுடன் பொது இடங்களில் மூலம் கவசம் அணியாமல் நடமாடியது,சமூக இடைவெளியை பின்பற்றாமல் மீன், இறைச்சிக் கடைகளிலும், காய்கறி சந்தைகளிலும் முண்டியடித்துக்கொண்டு திரண்டது, தேவையின்றி இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றி வந்தது என்று ஏகப்பட்ட விதிமுறை மீறல்களை காணமுடிந்தது.

karur lockdown - updatenews360

போலீசாரின் கருணைப் பார்வை காரணமாக விழிப்புணர்வுடன் இருங்கள் என அறிவுறுத்தி இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையவில்லை. ஊரடங்கு நடைமுறைக்கு வந்த, கடந்த 10-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 978. டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 20 ஆயிரத்து 904. அன்று ஒரே நாளில் உயிரிழந்தோர் 232.

பொதுவாகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு கொரோனா பரவல் கட்டுக்குள் வருவது இயல்பான ஒன்று. ஆனால் மக்கள் போதிய ஒத்துழைப்பை அரசுக்கு வழங்காததால் கொரோனா பரவல் தமிழ்நாட்டில் குறையாமல் அதிகரிக்கவே செய்தது.

மே 14-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 31 ஆயிரத்து 792 பேர். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 20 ஆயிரத்து 37 பேர். பலியானவர்கள் எண்ணிக்கை 288.

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால், அரசு அறிவித்த ஊரடங்கை பொது மக்களில் பெரும்பாலானோர் ஏற்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதுதான்.

மே 14-ந் தேதி கணக்கின்படி, தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் சுமார் 20 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Corona_Test_UpdateNews360

இப்படி, ஊரடங்கு பிறப்பித்த பிறகும் கொரோனா உச்சம் பெற்று இருப்பதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை வருகிற 17-ந் தேதி முதல் மிகவும் தீவிரமாக்கி இருக்கிறது.

அன்றிலிருந்து மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அதேநேரம் மே 15-ந் தேதி முதல் டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி கிடையாது. அவை மூடப்படவேண்டும். காய்கறி, பூ,,பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கும் அனுமதியில்லை. மே 17-ந் தேதி காலை 6 மணி முதல் திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை தேவை போன்றவற்றுக்காக மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம்.

ஏற்கனவே, அறிவித்தவாறு முழு ஊரடங்கு 16 மற்றும் 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும்.

இதுபற்றி சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபுணர்களும் கூறும்போது, “கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கு மிகவும் அவசியம். ஏனென்றால் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 3 வார ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ஊரடங்கு முடிந்த நிலையில் கொரோனா பரவல் வெகுவாக தடுக்கப்பட்டிருந்தது.

இப்போது முதல் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மக்கள் மதித்து நடந்தது போலவே தெரியவில்லை. சாலைகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ கார்கள், லாரிகள் என அத்தனையும் ஓடிக்கொண்டிருந்தன. மக்களும் இயல்பான வாழ்க்கை வாழ்வது போல சாலைகளில் நடமாடி திரிந்தனர். இறைச்சிக் கூடங்களிலும், சந்தைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் மக்கள் தங்கள் விருப்பம்போல் அலையலையாய் திரண்டனர்.

கடந்தாண்டு கோயம்பேடு சந்தை மூலம், வட மாவட்டங்களுக்கு கொரோனா பரவியதை சென்னைவாசிகள் முற்றிலுமாக மறந்து விட்டார்கள்.

இது, கொரோனா 2-வது அலை. இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து, பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை படுவேகமாக காவு வாங்கி வருகிறது. இனி மூன்றாம் அலை வேறு வரும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அலையே முடியாத நிலையில், மூன்றாவது அலை வந்தால் அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றி மருத்துவ வல்லுநர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களோ அரசு காட்டும் சில தளர்வுகளை தவறாக எடுத்துக்கொண்டு தங்கள் இஷ்டம் போல் நடந்து கொள்கிறார்கள்.

தினம்தோறும் அதிகரித்துவரும், கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு, அரசு அறிவித்துள்ளது போல் மிகக்கடுமையான ஊரடங்குதான் தேவை. மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் மத்திய,மாநில அரசுகள் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. அடுத்த 4 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டால் மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழல் உருவாகும்.

அமெரிக்காவில் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இஸ்ரேல் இதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டது.

senior vaccine - updatenews360

நாமும் இத்தகைய சாதனையை நிகழ்த்தவேண்டும் என்றால், முதலில் அரசுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். இரண்டாவதாக, தடுப்பூசி அனைவருக்கும் போடப்படவேண்டும். அதற்கான கால அவகாசத்தையும் நிர்ணயம் செய்யவேண்டும்.

கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த 6 முதல் 8 வார ஊரடங்கு பிறப்பிக்கவேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் யோசனை தெரிவித்திருக்கிறது. அந்த நிலைக்கு நாம் செல்லாமல் இருக்க தமிழக அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். கொரோனா என்னும் கொடிய அரக்கனை விரட்டி அடித்து விடலாம்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Views: - 202

0

0