பொது முடக்கம் வேண்டாம்; கண்டிப்பா போட்டே ஆகணும்! அது போன வருஷம்… இது இந்த வருஷம்.!! ராகுல் அடித்த அந்தர் பல்டிகள்

10 May 2021, 10:55 am
rahul cover - updatenews360
Quick Share

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் வீரியம் நமது நாட்டில் படுவேகமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துவிட்டது. தினசரி இறப்பு விகிதமும் 4 ஆயிரம் என்பதையும் தாண்டி இருப்பதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வெளியே நடமாட வேண்டிய சூழல் உள்ளது.

இவ்வளவு வேகமாக கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பது பற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள கொரோனா 2-ம் அலை மீதான ஆய்வறிக்கை மிகவும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

Corona_UpdateNews360

அதாவது உருமாற்றம் பெற்றுள்ள இந்த வகை கொரோனா காற்றில் பரவுகிறதுதான் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேறுகிற நீர்த்திவலைகள், 30 வினாடிகள் வரை சுற்றியுள்ள காற்றுடன் கலந்து காணப்படுகிறது. அதன் பிறகே அந்த வைரஸ் செயலிழந்து, காய்ந்து போகிறது.

இந்த அரை நிமிட நேரத்திற்குள், அந்தப் பகுதியில் நடமாடுபவர்கள் காற்றை சுவாசிக்கும்போது கொரோனா வைரஸ், மனிதனின் மூச்சுக்குழாய் வழியாக தொண்டைப் பகுதிக்கு சென்று, அங்கிருந்து வீரியமடைந்து பல்கிப் பெருகி நுரையீரலை கடுமையாக தாக்குகிறது. இதன் காரணமாகத்தான் 4 அல்லது 5 நாட்களுக்குள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பலர் மூச்சு திணறி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால்தான் உயிரைக் காக்கும் முதல் மருந்து போல் முக கவசமும், இரண்டாவது மருந்ததாக தடுப்பூசியும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு பக்கம் கொரோனா நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கொரோனாவை வைத்து அரசியல் விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பது, வேதனை தரும் நிகழ்வாக உள்ளது.

கொஞ்சம் விட்டால், இந்த வைரஸை உலகம் முழுவதும் பரப்பியது சீனா என்பதையே மறந்து, மோடிதான் வேண்டுமென்றே இதை இறக்குமதி செய்து நாட்டு மக்களை கொன்று வருகிறார் என்று கதை கட்டி விடுமளவிற்கு அந்த தலைவர்களின் கற்பனை பரந்து விரிவடைந்துள்ளது.
அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா பெருந்தொற்று தொடர்பாக தினமும் ட்விட்டரில் போடும் பதிவுகளை பார்த்தால் தலையே கிறுகிறுத்து போய்விடும்.

Rahul_Gandhi_UpdateNews360

அவருக்கு அடுத்தபடியாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி என்று வரிசையாக பல தலைவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் மத்திய பாஜக அரசுக்கே உள்ளது என்றும் தங்களுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் தினமும் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பிரதமர் மோடி நாடு தழுவிய இரு வார பொது முடக்கத்தை முதலில் அறிவித்தபோது அதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘லாக் டவுன்’ போட்டால் நாட்டின் பொருளாதாரமே முழுமையாக சீரழிந்துபோய்விடும் என்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் கண்ணீர் வடித்தார். இன்னும் சொல்லப் போனால் கொரோனா விவாகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு தரவே இல்லை.

ஆனால் ராகுல் அலறியமாதிரி அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்தாண்டு கொரோனாவை மத்திய,மாநில அரசுகள் நன்றாகவே கட்டுப்படுத்தின. தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டன.

குறிப்பாக, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டு நற்சான்றிதழும் பெற்றது.

CM Modi -Updatenews360

அதன்பிறகு இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி மருந்துகளை மத்திய பாஜக அரசு, 35க்கும் மேற்பட்ட ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும், 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்தது. அதாவது, நமது நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் மனிதாபிமான அடிப்படையில் இந்த ஏற்றுமதியை மத்திய அரசு செய்தது.

தற்போது, உள்நாட்டில் தடுப்பூசி தேவை அதிகரித்து விட்டதால் மத்திய அரசு அந்த ஏற்றுமதியை குறைத்துக் கொண்டும் விட்டது. அதேநேரம் கொரோனா பரவலின் வேகத்தை கண்டு தடுப்பூசி தயாரிப்பை தீவிரமாக முடுக்கி விட்டும் உள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றால் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என்று குற்றம் சாட்டுவது, சிலிண்டர்கள் தாராளமாகக் கிடைத்தால் எங்களுக்கு இதைவிட இன்னும் அதிகம் தேவை என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டு கட்டுவது, மாநிலங்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அப்படியே எங்களுக்கே கொடுக்கவேண்டும் என்று நிபந்தனை விதிப்பது என மத்திய அரசுக்கு ஏதாவது நெருக்கடி கொடுத்து கொண்டே போவது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தினசரி நடவடிக்கைகளாக உள்ளன. சரிமருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை எப்படி செலவிடுகிறீர்கள்? என்று மத்திய அரசு விளக்கம் கேட்டால் அது எங்கள் தனிப்பட்ட உரிமை, நீங்கள் அதில் தலையிடக் கூடாது என்று அவர் அலறுகிறார்.

இதற்காக ஏதாவது காரணங்களைக் கூறி தினமும் கோர்ட்டுக்கு செல்வது அவருடைய அரசுக்கு அன்றாட வேலையாகிப் போனது. கடந்த ஆண்டு கொரோனா பரவலை டெல்லி மாநில அரசு கட்டுப்படுத்தியபோது, அதற்கான அத்தனை நற்பெயரையும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலே எடுத்துக்கொண்டார்.

மத்திய பாஜக அரசு செய்த பெரிய உதவிகளை பெயரளவுக்குக்கூட அவர் வெளியே சொல்லவில்லை. ஆனால் இப்போது உயிர்ப்பலி அதிகரித்து வருவதால் அதற்கு முழு பொறுப்பையும் பிரதமர் மோடி தான் ஏற்க வேண்டும் என்கிறார்.

arvind_kejriwal_updatenews360

கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கம் வரை டெல்லியில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. இந்த 5 மாதங்களில் கெஜ்ரிவால் அரசு தூங்கிக்கொண்டிருந்தா, என்ன?…என்ற கேள்வி எழுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில், தேவைப்படும் அளவிற்கு மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், கொரோனா தடுப்பூசி மருந்துகளையும் டெல்லி மாநில அரசு முன்கூட்டியே வாங்கி கையிருப்பு வைத்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்ட கெஜ்ரிவால் தற்போது எல்லா பழிகளையும் மத்திய அரசு மீது சுமத்துகிறார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்.

மேலும் நல்ல பெயர் என்றால் அது எஙகளுக்கு…கெட்ட பெயர் வரும் என்று தெரிந்தால் நாங்கள் ஒதுங்கிக் கொள்வோம். அந்த அவப்பெயரை மத்திய அரசான நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று கெஜ்ரிவால் தாராளமயம் காட்டுகிறார்.

அப்படி என்றால் மாநில அரசுகள் எதற்காக இருக்கின்றன என்ற கேள்வியை இதுவரை இந்தியாவின் எந்த முன்னணி ஊடகங்களும் எழுப்பவில்லை. மாறாக, மாநில அரசுகளின் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் விதமாகவும் மறைத்திடும் வகையிலும் மத்திய அரசையே இவை குற்றம்சாட்டுகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மத்திய அரசின் பட்ஜெட்டில் தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 4,500 கோடி ரூபாய் மட்டுமே மத்தியஅரசு ஒதுக்கி இருக்கிறது. இது என்ன நியாயம்? என்கிறார்.

இதை மிகவும் கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புரியும். அதாவது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளின் பங்களிப்பு எதுவுமே இல்லை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு இதில் எந்த அக்கறையும் தேவையும் இல்லை என்று கூறுவது போல இது இருக்கிறது. எல்லா நிதியையும் ஒட்டுமொத்தமாக இப்போதே தடுப்பூசிக்காக செலவு செய்துவிட்டு பிற நாடுகளிடம் பிச்சை கேட்டு நிற்கவேண்டும் என்பது அவருடைய நோக்கமாக தெரிகிறது. பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை 5 வருடத்துக்கானது என்பது அவருக்கு தெரியாதா? என்ற கேள்வியும் இதில் எழுகிறது.

கடந்த ஆண்டு, பொதுமுடக்கம் வேண்டாம். இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரமே நொறுங்கிப் போய்விடும் என்று கண்ணீர் குரல் எழுப்பிய ராகுல்காந்தி இப்போது ‘லாக் டவுன்’ வேண்டும் என்கிறார். முதலில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோளும் வைக்கிறார்.

ஆனால் கடந்தாண்டு பொது முடக்கத்தை மோடி அறிவித்த போது, ராகுல் காந்தி செய்த கிண்டலுக்கும் கேலிக்கும் அளவே இல்லை. அப்போது மக்களின் உயிர் அவருக்கு எப்படி தெரிந்தது என்றும் விளங்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ இரண்டு மாத தேர்தல் தூக்கம் கலைந்து, இப்போது கொரோனா… கொரோனா…என்கிறார்.

mamata_banerjee_eci_updatenews360

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடியையும், பாஜகவையும் கொரோனாவை ஆயுதமாக்கி இப்போதே எதிர்க்கட்சிகள் குறிவைக்கத் தொடங்கிவிட்டன.

அதனால்தான் பிரதமர் மோடி பதவி விலகவேண்டும் என்ற கோஷத்தை எதிர்க்கட்சிகள் இப்போதே திட்டமிட்டு வலுவாக எழுப்பி வருகின்றன. இதில் வெளிநாடுகளின் சதி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு இந்த வெளிநாட்டு சதி விஷயத்தில், இன்னும் விழிப்புணர்வு தேவை!

Views: - 159

2

0