கொரோனா விதிமுறை… கரை வேட்டிகள் இல்லை… தனி ஆளாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்த எடப்பாடியார்…!!

By: Babu
15 March 2021, 2:12 pm
eps nomination - updatenews360
Quick Share

சேலம் : சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என நாள்தோறும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி, எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி தனலிங்கத்திடம் வேட்பு மனுவை கொடுத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வருவதற்கு 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா விதிகளை கடைபிடிக்கும் விதமாக, தேர்தல் அலுவலகத்திற்கு 100 மீட்டருக்கு முன்பு இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி ஒரு நாளாக நடந்து சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 1989ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பில் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றேன். தொடர்ந்து, மாபெரும் மக்களின் செல்வாக்கோடு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன். மேலும், பல்வேறு திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளேன். எம்எல்ஏ, எம்பி மற்றும் அமைச்சர், அதிமுகவில் பொறுப்பு என பல்வேறு நிலைகளிலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளேன்.

எடப்பாடி தொகுதி ஏற்றம் பெறவும், மக்களுக்கான நன்மை கிடைக்கவும் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். தேர்தல் முடிவான பிறகு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 இலவச சிலிண்டர் அறிவிப்பு வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பது குறித்து தெரிய வரும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களுக்கு பயனளிக்கக் கூடியது.

எந்த மாநிலத்தில் கடன் இல்லை. வளர்ச்சி திட்டப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்தது. நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளோம். எனவே, அதனை வைத்து தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வோம், எனத் தெரிவித்தார்.

Views: - 129

0

0