ருத்ரதாண்டவமாடும் கொரோனா 2.0 : வார இறுதி ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்…!!!!

24 April 2021, 10:58 am
Curfew_Updatenews360
Quick Share

கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வார இறுதி ஊரடங்கை பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் 3 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 2,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் போதிய இடவசதியில்லாத அவலம் ஏற்படுகிறது. அதேவேளையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன.

இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும் என்று பிரதமர் மோடியும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனையின் போது தெரிவித்துள்ளார். மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும், பாதிப்புகளுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் அவர் அனுமதியளித்தார்.

முன்னதாக, கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளதால், பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு , வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல் படுத்தியுள்ளன. அதன்படி,கர்நாடகம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்குக்கு நிகரான கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தன.

அதன்படி, சனிக்கிழமையான இன்று முழு ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 192

0

0