வீடு, வாகன கடனுக்கான இஎம்ஐ செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு : ரெப்போ வட்டி விகிதமும் குறைவு

22 May 2020, 10:58 am
SakthikandhaDas_Updatenews360
Quick Share

டெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு, வாகன கடனுக்கான இஎம்ஐ செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் விதமாக, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கிக் கடனுக்கான மாத தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மே 31-ம் தேதி வரை ஊரடங்கை 4-ம் கட்டமாக மத்திய அரசு நீட்டித்தது. ஆனால், கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டும் சில சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருந்தது. அதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ. 20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது :- ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறையும். 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொழில்துறை உற்பத்தி சரிந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் 14 சதவீதம் வரையில் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது.

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. அதோடு, உலகப் பொருளாதாரமும் மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிவப்பு அல்லது ஆரஞ்ச் மண்டலத்திலேயே இந்தியாவின் 60 சதவீத உற்பத்தி துறை அடங்கியுள்ளது. இந்தியாவில் மூலதனப் பொருட்களின் இறக்குமதி கடந்த மார்ச்சில் 27% குறைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி மார்ச்சில் 17% சரிந்துள்ளது. ஏப்ரலில் உணவுப் பொருள் பணவீக்க விகிதம் 8.6% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பிரச்சனை முடிந்த பின் பொருளாதார வளர்ச்சி உயரும்.

மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வீடு, மற்றும் வாகன கடன்களுக்கான மாத தவணையை செலுத்தும் கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.

Leave a Reply