கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவைக்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறைவு ஏன்..? தட்டுப்பாடா…? தடுமாற்றமா…?

16 July 2021, 11:38 am
Quick Share

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 200க்கு கீழாகவும் குறைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் அன்றாட பாதிப்பு 2500-க்கு கீழே இறங்கியுள்ளது. இந்த நிலையில், அடுத்து கொரோனா மூன்றாவது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை வேறு விடுத்துள்ளனர்.

தடுப்பூசியில் மத்திய அரசு கவனம்

இன்னும் சிலர் ஏற்கனவே 3-ம் அலை தொடங்கிவிட்டது என எச்சரித்து இருக்கின்றனர். இன்னொரு பக்கம் முதல் அலையில் கொரோனாவுக்கு தப்பியவர்கள் தற்போதைய இரண்டாம் அலையில் சிக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

south block 1 - updatenews360

இதனால்தான் கொரோனா தாக்காமல் இருக்க மத்திய அரசு, இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிடவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை வினியோகம் செய்தும் வருகிறது.

என்றபோதிலும் தமிழகம், தெலுங்கானா போன்ற ஒருசில மாநிலங்களில் தடுப்பூசி மையங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசி வினியோகம் இல்லை என்பதால் கடுமையான தட்டுப்பாடும் நிலவுகிறது.

டோக்கனால் ஏமாற்றம்

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினமும் தடுப்பூசி மையங்களுக்கு, நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வருவதும், அவர்களில் 300, 400 பேர் இருப்பு இல்லை
என்ற அறிவிப்பை கேட்டு எரிச்சலுடன் திரும்பிச் செல்லும் காட்சிகள் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.

பல மையங்களில் இருப்புக்கு ஏற்ப டோக்கன்கள் முதல்நாளே விநியோகம் செய்யப்பட்டாலும் கூட வழக்கம்போல் வந்து ஏமாற்றத்துடன் செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

அதுவும் கூலி வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு தடுப்பூசி போட வந்து 6, 7 மணி நேரம் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்துவிட்டு ஊசி இல்லை என்று தெரிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகின்றனர். இதனால் தடுப்பூசி மையங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு, கைகலப்பு என்பதெல்லாம் மாநிலத்தின் பல பகுதிகளில் தினமும் காணக்கூடிய காட்சிகள் ஆகிவிட்டன.

தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

அதேநேரம், தடுப்பூசி விநியோகத்தில் சில மாவட்டங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்திற்கு ஜூன் மாதம் முழுவதும் மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அது உண்மைதான் என்று கூறுவதைப்போல கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி சென்னையில் முதல் டோஸ் தடுப்பூசி 41 ஆயிரத்து 912 பேருக்கு போடப்பட்டுள்ளது. அதே 26-ம் தேதி கோவை மாவட்டம் முழுவதும் 28,762 பேருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது.

அதேபோல ஜூலை 8-ம் தேதி சென்னையில் போடப்பட்ட முதல் டோஸ் தடுப்பூசி 9 ஆயிரத்து 530. அதே தினத்தில் கோவை மாவட்டத்தில் 4,419 பேருக்கே போடப்பட்டுள்ளது.

ஜூலை14-ம் தேதி சென்னையில் போடப்பட்ட முதல் டோஸ் தடுப்பூசியின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 301. இது கோவை மாவட்டத்தில் 7678. ஜூலை15-ம் தேதி சென்னையில் மொத்தம் 15 ஆயிரத்து 876 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 716 பேருக்கு ஊசி போட்டு இருக்கின்றனர்.

அதேநேரம், ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் கோவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்குள்தான் இருந்தது. இப்படி சமூக ஆர்வலர்கள் சென்னைக்கும், கோவைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர்.

இதில் ஒரு ஆச்சரியம், என்னவென்றால், கடந்த 4 நாட்களாக கோவை, மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு தடுப்பூசி வினியோகம் வழக்கத்தை விட வினியோகம் கூடுதலாகி இருக்கிறது.

கோவை புறக்கணிப்பா..?

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, “மாநிலத் தலைநகரான சென்னை என்பதால் அங்கு கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட கோவை,சேலம், தருமபுரி, மதுரை நாமக்கல் போன்ற மாவட்டங்களில் தடுப்பூசியை அதிகளவில் வினியோகித்து, கொரோனாவை இன்னும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்த மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் மிகக் குறைந்த அளவில் தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால்தான் இங்கு அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது ஒரு கோடி தடுப்பூசிகளை தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மாநில அரசு கேட்கும் அளவிற்கு மத்திய அரசு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யுமா? என்பது தெரியவில்லை. அந்த அளவிற்கு கிடைத்தால் நல்லதுதான். எவ்வளவு கிடைத்தாலும் சரி, கடந்த 4 நாட்களாக மாவட்டங்களின் மக்கள் தொகை மற்றும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகள் ஓரளவு பகிர்ந்தளிக்கப்பட்டது போல் இருக்கவேண்டும்.

கோவை மாவட்டத்தில் இன்னும் கொரோனா பரவல் வேகம் குறையவில்லை. எனவே மாநில அரசு கோவையை மட்டும் அல்ல, எந்த மாவட்டத்தையும் வஞ்சிக்காமல் தடுப்பூசி வினியோகம் செய்யவேண்டும். பல இடங்களில் ஆளுங்கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்துவந்து டோக்கன் இல்லாமலேயே தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இதனால்தான் ஒவ்வொரு மையத்திலும் தினமும் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர் என்பதும் உண்மை. இதையும் சரி செய்யவேண்டும்” என்று
அவர்கள் வலியுறுத்தினர்.

கோவை பாஜகவினரோ, கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி சீராக விநியோகம் செய்யப்படுவதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கூறுகின்றனர்.
“கொங்குநாடு பிரச்சினை வெடித்த பின்புதான், கோவைக்கு தடுப்பூசி வினியோகம் சீராகி இருக்கிறது. அதேபோல மதுரை, திருச்சிக்கும் கூடுதல் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதை முதலிலேயே திமுக அரசு உணர்ந்து கொண்டிருந்தால் கொங்கு மண்டல மக்களின் கோபத்திற்கு ஆளானதை தவிர்த்திருக்கலாம். இனியாவது சென்னை அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காமல் அத்தனை மாவட்டங்களின் மீதும் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

Views: - 158

0

0