அம்மா உணவக பெண் ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்.. திமுக பிரமுகரின் ஆதரவாளர்களை பணியமர்த்துவதாக புகார்… நள்ளிரவில் திடீர் போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 11:46 am
Quick Share

கடலூரில் அம்மா உணவக பெண் ஊழியர்களை 16 பேரை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து, நள்ளிரவில் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் ஊழவர் சந்தை அருகிலும், தலைமை மருத்துவமனையிலும் 2 அம்மா உணவகங்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 16 பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர். இதையறிந்து, அதிர்ச்சியடைந்த அம்மா உணவக ஊழியர்கள், நேற்று இரவு 8.30 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது :- கடந்த 7 ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறோம். கொரோனா காலத்திலும் எங்கள் உயிரையும் துச்சமென நினைத்து பணி செய்தோம். ஆனால் எங்களை திடீரென மாநகராட்சி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி விட்டு, எங்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமித்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆகவே எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. எங்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி செய்ய மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக பிரமுகர் அவருக்கு ஆதரவானவர்களை பணியில் நியமிக்க முடிவு செய்து இதுபோன்று செயல்படுகிறார். நாங்கள் சாவியை யாரிடமும் ஒப்படைக்க மாட்டோம். மேலும் எங்களை பணிக்கு சேர்க்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் இரவு 11 மணியை கடந்தும் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 326

0

0