கெஜ்ரிவால் நடத்திய ஆக்சிஜன் பற்றாக்குறை நாடகம் அம்பலம் : மத்திய அரசின் அறிக்கையில் ‘பகீர்’ தகவல்!

15 May 2021, 8:08 pm
kejriwal cover - updatenews360
Quick Share

கடந்த மாதம் 3-வது வாரம் தேசிய தலைநகர் டெல்லி தொடர்பான ஒரு செய்தி நாட்டையே உலுக்குவதாக இருந்தது.அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் பற்றாக்குறையை சந்தித்து வருகிறோம்.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு டெல்லிக்கு அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் சப்ளை தேவை. எங்களுக்கு வினியோகத்தை அதிகரிப்பதற்கு பதிலாக கிடைக்க வேண்டிய அளவை குறைத்து மற்ற மாநிலங்களுக்கு எங்களது பங்குகள் சென்று கொண்டுள்ளது” என்று உருக்கமாக கூறியிருந்தார்.

Kejriwal_PSA_oxygen_plant_UpdateNews360

அடுத்த 2 நாட்களில் பிரதமர் மோடிக்கு அவர் தனிப்பட்ட முறையில் விடுத்த வேண்டுகோளில்,”ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் மிகப்பெரிய துயரச் சம்பவங்கள் நேரிடலாம். ராணுவம் மூலம் அனைத்து ஆக்சிஜன் நிறுவனங்களையும் மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும்” என்றும் வற்புறுத்தி இருந்தார்.

இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் உயிரிழக்கலாம் என்று கருதிய டெல்லி ஐகோர்ட், “பிச்சை எடுத்தாவது ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுங்கள்” என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டும் மறு உத்தரவு வரும்வரை டெல்லி மாநில அரசுக்கு தினமும் 700 டன் மருத்துவ ஆக்சிஜனை கட்டாயம் வினியோகம் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில்தான் மே முதல் வாரம் டெல்லியில் உள்ள இரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 கொரோனா நோயாளிகள், போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Corona_Patient_Death_UpdateNews360

இதனால் கொதிப்படைந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘மோடி அரசுக்கு ஈவு இரக்கமே இல்லை, மக்களின் உயிர்களை காக்க தவறிய மோடி பதவி விலகவேண்டும்’ என்று போர்க்கொடியும் உயர்த்தின. உலகளவில் பிரதமர் மோடியை, ஒரு வில்லன் போலவும் சித்தரிக்கச் செய்தன.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். அதுபோல தனது அரசியல் ஆதாயத்திற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிக்க முடியாமல், மிகச் சாதுரியமாக மத்திய அரசை நோக்கி திருப்பிவிட்டு இருப்பது தற்போது வெளிச்சதுக்கு வந்து இருக்கிறது.

‘பெசோ’ எனப்படும் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதாவது 8-ந் தேதி முதல், 5 நாட்களுக்கு தினமும் காலை மாலை என்று டெல்லியில் 64 மருத்துவமனைகளில் கெஜ்ரிவால் அரசு பயன்படுத்திய ஆக்சிஜன் அளவு குறித்து மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் வினியோகத்தை கெஜ்ரிவால் அரசு சரிவர கையாளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எங்களுக்கு தினமும் 700 டன் மருத்துவ ஆக்சிஜன் தேவை என்று குரல் கொடுத்து வந்த கெஜ்ரிவால் அரசு, தினமும் சராசரியாக 590 டன் ஆக்சிஜனை மட்டுமே பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றாடம் எஞ்சிய 110 டன் ஆக்சிஜனை ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

arvind_kejriwal_updatenews360

அதேபோல் மே மாதம் 1-ம் தேதி முதல், 10-ம் தேதி முடிய சராசரியாக 590 டன் ஆக்சிஜன் டெல்லி அரசுக்கு வினியோகம் செய்யப்பட்டிருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப்பட்டு உள்ளது.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது கெஜ்ரிவால் அரசு, டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ ஆக்சிஜனை முறைப்படி பயன்படுத்தவில்லை என்பதும் மாறாக, மத்திய அரசு மீதும், மோடி பிரதமர் மோடி மீதும் அவதூறு கூறி வந்திருப்பதும் தெரியவருகிறது.

அதாவது,”டெல்லி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்று கதறிய கெஜ்ரிவால் தனது இயலாமையை மறைக்க மத்திய அரசின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கியிருப்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறும்போது, “கெஜ்ரிவால் அரசிடம் மருத்துவ ஆக்சிஜனை சேமித்து வைக்கக்கூடிய வசதி போதுமான அளவில் இல்லை. இதனால் பலமுறை அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆக்சிஜனை திருப்பி கொடுத்துள்ளனர்.
டெல்லியில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு கெஜ்ரிவால் அரசின் திட்டமிடல் குறைபாடே காரணம். டெல்லி முதல்வரின் திறமையின்மை இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

டெல்லியில் 30-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தது பற்றி, டெல்லி அரசிடம் முறையிட்டு எந்த பலனும் இல்லை. இந்த உயிரிழப்புகளுக்கு கெஜ்ரிவால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று வற்புறுத்தி இருக்கிறார்.

ஆனால் பாஜகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து கெஜ்ரிவால் வாய் திறக்கவே இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை விஷயத்தில் பிரதமர் மோடியின் பெயரை இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பெரியஅளவில் சேதப்படுத்தியாகிவிட்டது. இனி எதற்கு நாம் பதில் பேச வேண்டுமென்று நழுவிக் கொண்டு விட்டார் போலிருக்கிறது!

manish_sisodia_updatenews360

கெஜ்ரிவாலுக்கு பதிலாக டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கூறும்போது, “தற்போது டெல்லியில் கொரோனா பாதிப்பு 14 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துவிட்டது. அதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் இல்லை. படுக்கைகள் தட்டுப்பாடும் இல்லை. எங்களுக்கு இப்போது ஆக்சிஜன் தேவை குறைந்து விட்டதால் உபரியாக இருக்கும் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறோம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

கெஜ்ரிவால் அரசு அலட்சியமாக இருந்தது பற்றி குற்றச்சாட்டுக்கு மணீஷ் சிசோடியாவும் பதில் சொல்லவே இல்லை. அதேபோல் டெல்லியில் திடீரென மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

அதேநேரம், மத்திய பெட்ரோலியத் துறை வெளியிட்ட ஆய்வறிக்கைக்கு பிறகுதான், கெஜ்ரிவால் அரசு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தொடர்பான பிரச்சனைக்கே விளக்கமளித்து இருக்கிறது, என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கிய ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் ‘கப்சிப்’ ஆகி விட்டனர். டெல்லியில் நிலவிய மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தினமும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு, மக்களை பீதிக்கு உள்ளாக்கிய பெரும்பாலான ஊடகங்களும் இந்த விஷயத்தை அப்படியே மறந்து விட்டன என்பதுதான் இதில் வேதனை!

Views: - 199

0

0