தடையை மீறும் விவசாயிகள்… கண்ணீர் புகை குண்டு வீச்சு… குடியரசு தின நாளில் டெல்லியில் பதற்றம்..!!!

26 January 2021, 11:44 am
Quick Share

டெல்லி : அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக, தடையை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் பதற்றம் நிலவி வருகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்று வருகின்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் அடாவடியாக நுழைந்து வருகின்றனர்.

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் தங்களது டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுத்து வைக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக விவசாயிகளின் பேரணியை நடத்த முயலுவதை தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை எரிந்தனர். மேலும், தடையை மீறி உள்ளே நுழைந்த போலீசார் மீது தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர்.

குடியரசு தின விழா கொண்டாட்டம் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், போலீசார் – விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Views: - 0

0

0