ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடியை உடனே அமல்படுத்துக : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

By: Babu
14 October 2020, 5:44 pm
Quick Share

டெல்லி : ரூ. 2 கோடி வரையிலான வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை உடனே அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்கான தவணைத் தொகைகளை செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின் பேரில், கடன் தவணைகளை செலுத்துவதில் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், கடன் தவணை தொகையை செலுத்தும் காலத்தை அதிகரித்ததோடு, கடன் மற்றும் வட்டி சுமை அதிகரிப்பதை சுட்டிக் காட்டிய பல்வேறு தரப்பினர், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும், ரூ. 2 கோடி வரையிலான சிறு,குறு, நடுத்தர நிறுவன கடன்கள், கல்வி கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தொழில்முனைவோர்களின் கடன்கள், கிரெட்டி கார்டு நிலுவைத் தொகையை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த முடிவை அமல்படுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முறையை வங்கிகள் அமல்படுத்தத் தொடங்கி விட்டதாக மத்திய அரசு, வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்தது.

Views: - 40

0

0