உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? எதிர்க்கட்சிகளுக்கு தீனி போட்ட திமுக எம்எல்ஏ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 7:15 pm
Udhayanithi - Updatenews360
Quick Share

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திமுகவைச் சேர்ந்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பல கோரிக்கைகளை எடுத்துக்கூறிப் பேசினார்.

பெரம்பலூர் நகர், வி.களத்தூர், அகரம் சீகூரில் தனிக் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு தனி கோட்டாட்சியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்த அவர், கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி எம்எல்ஏவாக தனது கன்னி பேச்சில், “சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு காலம் கனிந்துவிட்டது. நமது முதல்வருக்கு மனம் கனியவேண்டும்” என்று பேசியதை சொல்லிக்காட்டினார்.

இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்று பலரும் வாழ்த்தும் வண்ணமாக, பாராட்டத்தக்க வகையில் செயலாற்றி வருகிறார்.

அவர் பாணியில் சொல்லப்போனால் நின்று விளையாடி ஃபோர், சிக்ஸ் என விளாசி கலக்குகிறார். அவரது உன்னதமான உழைப்பு, பொதுமக்களிடம் கனிக நடந்துகொள்ளும் அணுகுமுறை, செயலாற்றும் பாங்கு ஆகியவை ஓரிரு துறைகளோடு நிற்கக்கூடாது” என்று சொன்னார்.

பிறகு தான் சொல்லவந்த முக்கியமான விஷயத்துக்கு வந்த அவர், ” தனது உழைப்பு, சீரிய சிந்தனை, மகளிர் உயர்வு குறித்த தொலைநோக்கு ஆகியவற்றை நமது நம்பர் ஒன் முதல்வர் தலைமையின் கீழ் அவருக்கு துணை நின்று அனைத்து துறைகளிலும் செயல்பட வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

நைஸாக அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக ஆக்க வேண்டும் என்ற மறைமுகக் கோரிக்கையை பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளார்.

அவரது பேச்சில் இருக்கும் அர்த்தத்தை கப்பென்று பிடித்துக்கொண்ட திமுகவின் உதயநிதியின் ஆர்மி, முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து இதுதொடர்பாக நல்ல அறிவிப்பு வருமா என எதிர்பார்க்கின்றனர்.

எம்எல்ஏவான உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தனர். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்து வரும் நிலையில், தற்போது துணை முதலமைச்சர் பதவி அளிக்க கோரிக்கை வைத்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 225

0

0