அமித்ஷாவை மிரட்ட சபரீசனை OPS சந்தித்தாரா?…அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 9:45 pm
OPS Amitshah - Updatenews360
Quick Share

OPS என அழைக்கப்படும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்
ஓ பன்னீர்செல்வத்தின் சமீபகால நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் அதில் ஏராளமான முரண்பட்ட விஷயங்கள் இருப்பதை அப்பட்டமாக காண முடியும்.

இவை அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கே வேட்டு வைப்பது நிச்சயம் என்பது போலவும் அமைந்துள்ளது.

கர்நாடக தேர்தல் பின் வாங்கிய ஓபிஎஸ்

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக காந்திநகர், புலிகேசி நகர், கோலார் தங்க வயல் ஆகிய 3 தொகுதிகளில் தனது ஆதரவு வேட்பாளர்களை ஓபிஎஸ் நிறுத்தினார். இதில் காந்தி நகருக்கு அறிவிக்கப்பட்ட கே. குமார் என்பவர் போட்டியிடுவதற்காக அதிமுகவின் பெயரில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து
ஏ மற்றும் பி படிவங்களை பெற்று இணைத்து இருந்ததாக தெரிகிறது.

ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்திருப்பதால் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஆதரவாளர் குமார் குறுக்கு வழியில் பெற முயன்றது அம்பலம் ஆனது.
கடைசி நாளில் வேட்பு மனுவை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மூவருமே வாபஸ் பெற்று விட்டாலும் கூட தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதாக குமார் மீது மோசடி வழக்கை கர்நாடக போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கடந்த 24-ம் தேதி திருச்சியில் நடந்த தனது ஆதரவாளர்கள் மாநாட்டில் அதிமுகவின் பொதுக்குழு போலியானது. அது கலைக்கப்படுகிறது என்று ஓபிஎஸ் தடாலடியாக அறிவித்தார்.

முரண்பாடுகளின் மொத்த உருவம்

அதுவரை, தான் சட்டப்படி நடந்து வருவதாகவும், கட்சியில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத்தான் தொடர்ந்து கோர்ட் படிகளை ஏறி வருகிறேன் என்றும் கூறிவந்த அவர் இப்படி சொன்னது அரசியல் வட்டாரத்தில் கேலிப் பொருளாகவே பார்க்கப்பட்டது.

ஏனென்றால் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் கட்சியின் பொதுக்குழுவை ஏற்றுக் கொண்டுள்ளன. அதனால் ஓபிஎஸ் பொதுக்குழுவை கலைக்கிறேன் என்று அறிவித்தது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்பதுதான் எதார்த்தம்.

இப்படி இரண்டு விஷயங்களில் தன்னை முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஓபிஎஸ் மாற்றி கொண்டு விட்டார் என்பதும் கண்கூடு.

ஓபிஎஸ்சை ஒதுக்கிய பாஜக?

இந்த நிலையில்தான் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை அண்மையில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓ பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு இரண்டு எம்பி சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் இல்லை, ஓபிஎஸ் டிடிவி தினகரன் இருவருமே திமுக ஆதரவு மனநிலையுடன்தான் செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ்சை பொறுத்தவரை திமுகவின் B டீம் ஆகவே மாறிவிட்டார் என்பதை சுட்டிக்காட்டி, எடப்பாடி பழனிசாமியும் அவருடன் சென்றிருந்த அதிமுகவின் 6 முன்னாள் அமைச்சர்களும் அதற்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்தனர் என்ற தகவல்களும் வெளியானது.

இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார் என்பதால் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதிமுக விவகாரம் அமித்ஷா கருத்து

அதேநேரம் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்
“அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமுகமான முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவை இருவரும் பேசி எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது என்னைச் சார்ந்தது இல்லை”என்று பொடி வைத்து கூறியிருந்தார்.

இதை ஊடகங்கள் ஓபிஎஸ்ஐ அமித்ஷா கை கழுவி விட்டார் என்றும், இல்லை இல்லை அவர் ஓபிஎஸ்ஐ அதிமுக கூட்டணியில் இணைக்கவேண்டும் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் அவரவர் விருப்பத்துக்கு தகுந்ததாற்போல் வெளியிட்டு மேலும் பரபரப்பு காட்டின.

இதனிடையே டெல்லியில் அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச ஓபிஎஸ் பல முறை நேரம் கேட்டும் அதற்கு பாஜக மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவலும் பரவியது.

அடுக்கடுக்கான இந்த அரசியல் அதிர்வலைகள் ஓய்வதற்குள் இன்னொரு அதிரடியான சம்பவமும் ஓபிஎஸ் தரப்பில் அரங்கேறியது.

சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்த ஓ பன்னீர்செல்வம், கேலரி அறை ஒன்றில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை நேரில் சென்று சந்தித்து தனிப்பட்ட முறையில் 15 நிமிடங்கள் பேசினார்.

இதை மரியாதை நிமிர்த்தமான ஒரு சந்திப்பு என்று ஓபிஎஸ் ஆதரவாளர்களும் டிடிவி தினகரனும் கூறினாலும் கூட நிச்சயம் சபரீசனிடம் ஓபிஎஸ் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட்டது பற்றி கவலையுடன் கூறி இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

சொந்த காசில் சூனியம்

அதேநேரம் அதிமுகவினர் இந்த சந்திப்பை தங்களுக்கு கிடைத்த சரியான சந்தர்ப்பமாக கருதுகின்றனர். ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் B டீம்தான் ஓபிஎஸ் அணி என்று கூறி வருவதை இது உறுதி செய்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கிண்டல் அடித்திருக்கிறார்.

“டெல்லி பாஜகவை மிரட்டுவதற்காக சபரீசனுடன் சந்திப்பு என்னும் ஆயுதத்தை தன் கையில் எடுத்த ஓபிஎஸ்க்கு இது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதைபோல் ஆகிவிட்டது.

அவருடைய இந்த சந்திப்பு பாஜக தலைவர்கள் அமித்ஷா, ஜே பி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூவருக்கும் மட்டுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதேபோல ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அமித்ஷாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்

ஏனென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். அதில், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியும், மருமகன் சபரீசனும் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது என்று தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டுவது போல இருந்தது.

இந்த ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மறுத்தாலும் கூட இது தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த ஆடியோ பதிவை அமித்ஷாவிடம் அனுமதி பெற்ற பிறகே அண்ணாமலை வெளியிட்டார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. அதனால் இதுவரை ஓபிஎஸ்ஐ கைவிடக்கூடாது என்று எண்ணியிருந்த அமித்ஷாவுக்கும் ஓபிஎஸ் அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிட்டார். ஓபிஎஸ் திமுகவின் B டீம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது நிரூபணம் ஆகிவிட்டதே
என்பதையும் அவர் உணர்ந்திருப்பார்.

அதிருப்தியில் முதலமைச்சர் ஸ்டாலின்?

அதேநேரம் டிடிவி தினகரன் இது ஒரு மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு தான் என்று கூறியதும் பிசுபிசுத்து போய்விட்டது. அதனால் டிடிவி தினகரன் மீதும் அமித்ஷா இனி நம்பிக்கை வைக்க வாய்ப்பு இல்லை. அதே நேரம் ஓபிஎஸ்சிடம் எஞ்சியுள்ள அதிமுக ஆதரவாளர்களும் அவரை பின்தொடர்வார்களா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி.

அதேபோல தனது மருமகனை இந்த நேரத்தில் ஓபிஎஸ் சந்தித்திருக்கக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் சபரீசன் கட்சியில் இல்லாத நபர் என்றாலும் கூட மருமகன் என்கிற முறையில் அவர் மீது பெரும்பான ஊடகங்கள் திமுக முத்திரையை பதித்துள்ளன என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். ஓபிஎஸ் கடைசி வரை அதிமுகவில் இருந்தவாறு குடைச்சல் கொடுத்தால்தான் நாம் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று திமுக தலைமை கணக்கு போட்டு வைத்திருந்தது. இப்போது அதற்கு ஓபிஎஸ் ஒரேயடியாக வேட்டு வைத்து விட்டாரே என்ற கோபமும் திமுகவுக்கு வந்திருக்கும்.

END Card போட்ட ஓபிஎஸ்

கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் சென்னை கோட்டையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதுடன் அவரை வெகுவாக புகழ்ந்தும் தள்ளினார். அப்போதும் இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு தான் என்று ஓபிஎஸ்சை ஆதரிக்கும் ஒரு சில நிர்வாகிகளும் அவருக்காக முட்டுக் கொடுத்தனர்.
இப்போது ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஓபிஎஸ் சந்தித்து பேசியதையும் அவர்கள் அதே கண்ணோட்டத்தில் தான் கூறுகின்றனர். ஒரு வேளை ராகுல் காந்தியை ஓபிஎஸ் சந்தித்தாலும் கூட இப்படித்தான் சொல்வார்களோ, என்னவோ?…

அதனால் இதை டெல்லி பாஜக தலைவர்களும், ஓபிஎஸ்சிடம் எஞ்சியிருக்கும் ஆதரவாளர்களும் நம்பி ஏமாற மாட்டார்கள் என்பது உறுதி” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ் அரசியலில் தனக்குத்தானே End Card போடுக்கொண்ட மாதிரித்தான் தெரிகிறது!

Views: - 280

0

0