உஷாரான பாக்யராஜ்… திடீரென ஜகா வாங்கியதற்கான காரணம் என்ன..? அதிர்ச்சியில் ஓபிஎஸ் அணி..!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 3:55 pm
Quick Share

பாக்யராஜ்

கடந்த மாதம் 26-ம் தேதி நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், சென்னை ராயப் பேட்டையில் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்ததாகவும் அன்று ஊடகங்களில் வேகமாக செய்தி பரவியது.

இதற்கு முக்கியக் காரணம் அப்போது அவர் அளித்த பேட்டிதான்.

செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசும்போது, “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் அதிமுகவை எப்படி விட்டு விட்டு சென்றார்களோ, அதே போல அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எம்ஜிஆர் உடல் நலமில்லாமல் இருந்தபோது அரசியல் மேடைகளில் பேசியுள்ளேன். அதிமுகவுக்காக
தேர்தலில் பிரச்சாரமும் செய்து இருக்கிறேன்.

இப்போது அந்த தலைவர்களின் பேரை காப்பாற்றவும், கட்சியைக் காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னால் முயன்ற அளவில் முயற்சியை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று பேசியிருக்கிறோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்துவார்கள். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் இப்படி சொன்னது அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இபிஎஸ் உறுதி

ஏனென்றால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல நியாயமான குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் மீது தொடர்ந்து கூறி வருகிறார்.

ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே திமுகவுக்கு ஆதரவாக பேசி கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் தனது ஆதரவாளர்களுடன்
அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் கதவுகளை காலால் எட்டி உதைத்து உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து சூறையாடியதையும், கட்சி அலுவலகங்களின் சொத்து பத்திரங்களை அள்ளி சென்றதையும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது. இந்த வன்செயலை எந்தவொரு அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று ஓபிஎஸ்சின் இன்னொரு முகத்தை அம்பலப்படுத்தியும் வருகிறார்.

EPS Warn - Updatenews360

அதனால் அவரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கட்சியை விட்டு நீக்கியது, நீக்கியதுதான் என்பதில் கடந்த ஜூலை 11-ம் தேதி முதலே எடப்பாடி பழனிசாமி மிகுந்த உறுதியாக இருக்கிறார்.

தொண்டர்கள் கோபம்

தவிர ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் எம்பி, திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள அரசு கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மிகவும் வரவேற்றுப் பேசியிருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கும் திட்டத்தையும், அத்துடன் படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்ததையும் நிறுத்தி விட்டுத்தான், இந்தத் உதவித் தொகை வழங்கப்படுகிறது. திமுக அரசின் திட்டத்தால் ஒரு மாணவிக்கு அதிகபட்சமாக 36 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும் என்பதை தெரிவிக்காமல் ரவீந்திரநாத்
அப்படியே மழுப்பி விட்டார்.

இது அதிமுக தொண்டர்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை கோட்டையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிய ரவீந்திரநாத், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டு சான்றிதழும் வாசித்து இருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.

U-Turn

திமுகவை எதிர்த்து எம்ஜிஆர் தொடங்கிய அரசியல் இயக்கம்தான் அதிமுக என்பதை மறந்து விட்டு இப்படி தந்தையும், மகனும் போட்டி போட்டுக்கொண்டு, திமுகவை ஆதரிக்கும் நிலையில் நடிகர் பாக்யராஜ் எடுக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?.. என்ற கேள்வியும் எழுந்தது. அதேநேரம் அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்ததாக கூறப்பட்டது கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.

இந்த நிலையில்தான் நடிகர் பாக்யராஜ், ஓபிஎஸ் அணியில் இணைந்ததாக கூறப்பட்ட விஷயத்தில் அப்படியே ‘யூ டேர்ன்’ அடித்து இருக்கிறார்.

தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அதிமுகவின் ஒபிஎஸ் அணியில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாக்யராஜ், “நான் அதிமுகவில் இன்னமும் உறுப்பினர் கூட கிடையாது” என்று மறுத்து இருக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது “தலைவர்களின் கருத்து வேறுபாடால் கட்சி பலவீனமாகி விடக்கூடாது. மற்ற கட்சிகளால் ஏளனமாக விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை போய் விடக்கூடாது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. அதனால் கட்சி நல்லா இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

இந்த நிலையில்தான் எனக்கு இரண்டு முறை ஓபிஎஸ்சிடமிருந்து போன் அழைப்பு வந்தது. அப்போது நான் சென்னையில் இல்லை. இதனால் ஊர் திரும்பியதும் அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க அவர் தங்கியிருந்த ராயப்பேட்டை ஓட்டலுக்கு தனியாக சென்றேன்.

ஆனால் நான் அங்கே போனபோது ஏராளமானோர் வந்திருந்தனர். ஓபிஎஸ்சிடம் 10 நிமிடம் பேசினேன். அப்போது என்னை கட்சியில் இணையும்படி அவர் அழைப்பும் விடுத்தார்.

மேலும் கட்சியின் ஒற்றுமைக்காக நீங்கள் முயற்சிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு நான் கூறும்போது என்னுடைய பங்கு என்னவோ, கடைசி தொண்டனாக அதைச் செய்வேன். கட்சியை வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நானும் கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றுதான் கூறினேன். அதற்குள் வெளியில் செய்தியாளர்கள் கூடிவிட்டனர்.

அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்னிடம் உள்ளே என்ன பேசினோம் என்பதை செய்தியாளர்களிடம் சொல்லுங்கள் என்றனர். அப்போது நான் உள்ளே பேசியதுபோல எல்லோரும் நல்லா இருக்கணும். கட்சியின் ஒற்றுமைக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று இருவரிடமும் பேச நினைத்தேன் என்பதை கூறினேன்” என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.

தவறை உணர்ந்தார்

“நடிகர் பாக்யராஜின் தற்போதைய பேட்டியின் மூலம் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ்தான், அவரை சந்திப்பதற்கு இரண்டு முறை வலியச் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். பாக்யராஜ் தன்னை தனிப்பட்ட முறையில் சந்திக்க வருகிறார் என்பதை தெரிந்து கொண்டதும் அதை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் தனது ஆதரவாளர்களை ஓட்டலில் முன் கூட்டியே திரட்டி பரபரப்பானதொரு நிகழ்வாகவும் அதை மாற்றி விட்டார். இது ஓபிஎஸ்சின் சுயநலம் தவிர வேறு எதுவும் கிடையாது “என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வின் மூலம், தான் ஒரு பலவீனமான தலைவர் என்பதை ஓபிஎஸ் நிரூபித்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அதிமுகவில் இன்னும் உறுப்பினர் கூட ஆகாத நிலையில் பாக்யராஜ் தங்கள் அணியில் இணைந்து விட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்கு ஒரு தவறான தகவலையும் பரப்பி இருக்கின்றனர்.

இதனால்தான், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவேன் என்று பாக்யராஜ் கூறி இரண்டு வாரம் ஆகிவிட்ட நிலையில் அதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல் அவர் மௌனமாகி விட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

தவிர சமரச, சமாதான முயற்சியை மேற்கொள்பவர்கள், எப்போதுமே இருதரப்பிலும் உள்ள சாதக, பாதகங்களை தெரிந்துகொண்ட பின்புதான் அதில் இறங்குவது வழக்கம். ஆனால் இதற்கு ஆயத்தமாகும் முன்பே ஓபிஎஸ் விரித்த வலையில் பாக்யராஜ் சிக்கிக் கொண்டு விட்டார். தற்போது ஓபிஎஸ்சின் சுயரூபம் முழுமையாக வெளிப்பட்டு விட்டது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதையும் அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இரண்டு வாரத்திற்கு முன்பு அரசியலில், தான் காட்டிய ஆர்வம் தவறானது, அது பெரிய அளவில் விமர்சனத்திற்கும் உள்ளாகி தனக்கு அவப்பெயரையும் ஏற்படுத்திவிட்டது என்பதை உணர்ந்தே இப்போது பாக்யராஜ் அடக்கி வாசிக்கிறார்.

அதைத்தான் அவருடைய தற்போதைய பேட்டியும் உணர்த்துகிறது. தவிர ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, அவரை நாம் எப்படியெல்லாம் விமர்சித்தோம் என்பதும் பாக்யராஜின் நினைவுக்கு வந்திருக்கும். எனவே இனி ஓபிஎஸ்ஐ கண்டாலே அவருக்கு அச்சம்தான் வரும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமல் பாக்யராஜ் அவசரப்பட்டு விட்டார், ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டும் விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது!

Views: - 395

0

0