தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமரியாதை: ‘தமிழ்த்தாய் மன்னிப்பாள்…சட்டம்?’…வைரமுத்து கண்டனம்..!!

Author: Rajesh
27 January 2022, 12:05 pm
Quick Share

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர் ஒருவர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது என்று கூறியுள்ளனர். வங்கி அதிகாரிகளின் இந்த தவறான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.

தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியே

சட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.

இரண்டையும்
மறுத்தால் எப்படி?

தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்…?”

இவ்வாறு பதிவிட்டு அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Views: - 517

0

0