மோசடி வழக்கால் மன உளைச்சல்.. குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற பிரபல ஜோதிடர் மரணம் : சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 11:54 am
Astrolger Dead -Updatenews360
Quick Share

கோவையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னசாமி (வயது 41). ஜோதிடரான இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் 25 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை மோசடி செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரசன்னசாமி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.

மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னசாமி, மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, மகள் ஆகியோர் கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பிரசன்னா உயிரிழந்தார்.

ஜோதிடர் பிரசன்னா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததின் பேரில் சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதிபிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு துண்டியதாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 157

0

0