கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..!!!

Author: Babu Lakshmanan
28 September 2021, 9:46 am
iraiyanbu updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 3வது அலையை தடுக்கும் விதமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேவேளையில், அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை செலுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

மக்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து செலுத்த வேண்டும் என்ற நோக்கில் மெகா தடுப்பூசி முகாமும் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 12-ந்தேதி தமிழகத்தில் 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து 19-ந்தேதி 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், 26ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில், 24 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது.

அரசு சார்பில் நடந்த தடுப்பூசி முகாம்களின் அடிப்படையில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்திய புள்ளி விபரங்களை வெளியிட்டு மாவட்ட நிர்வாகங்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், தடுப்பூசி செலுத்துவதில் சிவகாசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தம் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், கோவை, தேனி, திண்டுக்கல், குமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அபாரமாக இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Views: - 186

0

0