பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு… சரவெடிகளை வெடிக்கத் தடை… பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வரும் தீபாவளி..!!

Author: Babu Lakshmanan
1 November 2021, 6:16 pm
crackers - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம் பற்றிய விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசுகளை வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. மேலும், பொதுமக்கள் பண்டிகையைக் கொண்டாடும் விதமாகவும், காற்று, ஒலி மாசுபடுவதை தவிர்க்கும் விதமாகவும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வரும் 4ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு பிறகு, பொதுமக்கள் கொண்டாடவிருக்கும் பண்டிகை என்பதால், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

எனவே, இந்த முறை பட்டாசு வெடிக்கும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசம் இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரையில் பட்டாசு வெடிக்கலாம் என்றும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற ஆணைப்படி சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், குறிப்பாக, மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகே பட்டாசுகளை வெடித்த தடை விதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Views: - 420

0

0