தீபாவளி ‘ஸ்வீட்’டில் ஊழல்…? ஜகா வாங்கிய திமுக அரசு…!

Author: Babu Lakshmanan
25 October 2021, 8:26 pm
Quick Share

தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் சுமார் 1.25 லட்சம் ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி 100 டன் ஸ்வீட் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டது.
ஆனால் இந்த டெண்டரில் பங்குகொள்ள நினைத்த சிறு சிறு இனிப்பு நிறுவனங்கள் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

கடும் நிபந்தனை

இதில் மிக முக்கியமான நிபந்தனை, டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது. இந்த நிபந்தனையை கண்டதும் பலருக்கும் தலை சுற்றியது.

ஏனென்றால் 100 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் இனிப்பு வகைகள் விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் ஒன்றிரண்டு இருக்கலாம். அவர்கள் மட்டுமே கலந்து பங்கேற்கும் வகையில் இந்த நிபந்தனை டெண்டரில் வைக்கப்பட்டிருந்தது.

TN Secretariat - Updatenews360

இதில் வேடிக்கையானதொரு விஷயம் என்னவென்றால், அந்த டெண்டரில் ஒரு நிறுவனம் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் கொண்டிருக்கும் அனுபவம் பற்றியோ அல்லது அதன் தரம் குறித்தோ எந்த நிபந்தனையும் கூறப்படவில்லை. அதாவது 100 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது மட்டுமே பிரதானம்.

மேலும் ஒரு கிலோ இனிப்புக்கு 800 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் இதில் 30 சதவீதம் கமிஷன் பெற முயற்சி நடந்ததாகவும் சமூக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது. அதாவது 100 டன் இனிப்பு வாங்கும்போது அதற்காக செலவிடப்படும் 8 கோடி ரூபாயில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கமிஷனாக கிடைத்து விடும் என்பது நிச்சயம்.

எதிர்கட்சிகள் கேள்வி

இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளும், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் ஆளும் திமுக அரசிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினர்.

annamalai - Updatenews360

தமிழகத்தில் உள்ள 9 போக்குவரத்து மண்டலங்களிலும் பேருந்துகள் பெருத்த நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் இவ்வளவு விலை கொடுத்து இனிப்பு வாங்க வேண்டுமா?…
நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறிய கடைகளில் ஒரு கிலோ 400, 500 ரூபாய்க்கே கிடைக்கிறதே?…

கடந்த ஆண்டு கூட ஒரு கிலோ இனிப்பு 500 ரூபாய்க்குதானே வாங்கப்பட்டது, கமிஷன் இல்லாமல் குறைந்த விலையிலேயே நெய்யால் தயாரித்த ஸ்வீட்டை அரசின் ஆவின் நிறுவனத்தில் வாங்கி, மொத்தமாக போக்குவரத்து கழகத்திற்கு 3 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியுமே?…
என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது.

இது பற்றிய செய்திகள் ஒரு சில முன்னணி நாளிதழ்களிலும், முந்தைய அதிமுக ஆட்சியில் ஏதாவது ஒரு சிறு பிரச்சினை என்றாலும் கூட அதை பூதாகரமாக்கி விவாதங்கள் நடத்தும் தனியார் டிவி செய்தி சேனல்களிலும் வெளியாகவே இல்லை. முதன் முதலில் சமூக ஊடகங்களில்தான்,
இனிப்பு டெண்டரில் முறைகேடு நடக்க இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அது ஆளும் திமுக அரசுக்கு கசப்பு மருந்து கொடுக்கும் சிகிச்சை போல ஆகிவிட்டது.

ஆவின் நிறுவனம்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது “அந்த டெண்டர் இன்னும் திறக்கப்படவில்லை. டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒருவேளை பிரச்சனை ஏற்பட்டால் ஆவின் நிறுவனத்திடமிருந்து இனிப்புகளை வாங்குவோம்” என்று தெரிவித்து இருந்தார்.

raja kannappan - updatenews360

ஆனால் இந்த விஷயத்தில் தற்போது, முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. “அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்திலேயே போக்கு
வரத்துக் கழக ஊழியர்களுக்கு இனிப்புகளை வாங்க வேண்டும்” என்று அரசின் உயர் அதிகாரிகளுக்கு அவர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார், என்கின்றனர்.

அதாவது அதிக விலை கொடுத்து ஸ்வீட் வாங்கத் தேவையில்லை என்பது முதலமைச்சரின் கருத்து. இதை உண்மை என்று ஊர்ஜிதப்படுத்துவதுபோல அரசு வட்டாரத்தில் சில நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இந்த விவகாரத்தில், அரசுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

கடிதம்

இதைத்தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த விவகாரத்தில்
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவர் இது தொடர்பாக அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஆவின் நிறுவனம் என்னென்ன இனிப்பு வகைகளை தயாரித்து வருகிறது, என்பதை விளக்கமாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.

அந்த விரிவான கடிதத்தில், “தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆவின் தரமான இனிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆவின் இனிப்புகள் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றன.

எனவே தங்கள் துறை சார்ந்த ஊழியர்களுக்கு பண்டிகையையொட்டி இனிப்புகளை வழங்கும் பட்சத்தில் அவற்றை ஆவின் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் இனிமேல் அரசு துறை சார்ந்த கூட்டங்களில் வழங்கப்படும் இனிப்புகளையும் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது இனிமேல் அரசுத்துறைகளில் யாரும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து இனிப்பு கார வகைகளை வாங்க கூடாது என்பதை தலைமைச் செயலாளர் சுட்டி காண்பித்திருக்கிறார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் உள்ளது.

அதாவது, விடுமுறை நாளான 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த கடிதத்தை அவசர அவசரமாக எழுதியிருக்கிறார். ஒரு நாள் தாமதம் ஆனால் கூட வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆவின் நிறுவனம் தவிர வேறு எங்காவது ஸ்வீட்களுக்கு ஆர்டர் செய்துவிடக் கூடாது என்ற மின்னல் வேகம் அந்த கடிதத்தில் தென்படுகிறது.

தமிழக தலைமைச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் சமூக நலத்துறை, உயர்கல்வித்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என 40 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இவற்றில் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒட்டுமொத்தமாக 1,100 டன் இனிப்பு கார வகைகள் தீபாவளிக்காக தேவைப்படலாம் என்பதால் இந்த அவசரக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

இதுபற்றி அவர்கள் மேலும் கூறும்போது, “பல்வேறு துறைகளில் ஏற்கனவே அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் அல்லது பிரபல கடைகளில் இருந்து தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட், கார வகைகளை வாங்குவதற்கு ஆர்டர் செய்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களுக்கெல்லாம் தலைமைச் செயலாளரின் கடிதம் நிச்சயம் அதிர்ச்சி அளிக்கும். ஏனென்றால் ஆவினில் வாங்காவிட்டால் கேள்வி வரும். எனவே அதிக கமிஷனுக்கு எந்த அதிகாரியாவது இனிப்பு வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டு கமிஷன் வாங்கியிருந்தால் நிச்சயம் அவர்களது பாடு திண்டாட்டம்தான்.

போக்குவரத்து துறையில் தீபாவளி ஸ்வீட் வாங்க டெண்டர் விட்டதில் பேரம் படிந்தும் இருக்கலாம். அது நடக்காமலும் போயிருக்கலாம். ஆனால் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கும்போது ‘நெருப்பு இன்றி புகையாது’ என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. இதில் கமிஷன் பெறப்படாமல் இருந்திருந்தால் சரியான நேரத்தில் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். ஒருவேளை கமிஷன் பெறப்பட்டு இருந்தால் அதை வாங்கியவர்கள் உடனடியாக திருப்பி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

CM Stalin -Updatenews360

எனவே இனி அரசுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும், ஆவின் இனிப்புகள் தான் வாங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு எந்த அளவிற்கு கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே முறைகேடு நடக்கிறதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். எனினும் தற்போது அரசின் தலைமைச் செயலாளர் எடுத்துள்ள முடிவு சரியானதே.

அதேநேரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சாதாரண நாட்களில் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் கூட பெரிய நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும் இனிப்பு, கார வகைகள்தான் பரிமாறப்படுகிறது.

அதையும் கண்காணித்தால் தமிழக அரசுக்கு அடுத்த நான்கரை ஆண்டுகளில் சில நூறு கோடி ரூபாய்கள் மிச்சப் படும்” என்று அவர்கள் யோசனை கூறினர்.

Views: - 250

0

0