செப்டம்பரில் புதிய தேர்தல் களம் : இழந்ததை மீட்குமா, தேமுதிக-ம.நீ.ம.?

17 July 2021, 9:57 pm
Quick Share

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

டிசம்பருக்குள் நகர்ப்புற தேர்தல்

எனினும், மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாதங்கள் வரை திமுக அரசு அவகாசம் கேட்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது எதிர்பார்த்ததைவிட கொரோனா வேகமாக கட்டுக்குள் வந்து விட்டதால், அதற்கான அவசியம் ஏதுமில்லை என்றே கருதத் தோன்றுகிறது.

KN Nehru - Updatenews360

இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் நெல்லையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காத மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதேபோல் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே 2019-ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதி என இரு நாட்களில் கோவை மதுரை திருச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டுகள் வரையறை முடிவடையாததால் அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை.

90 %க்கு குறி

இதேபோல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகளுக்கும்
148 நகராட்சிகளுக்கும், 561 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இவற்றில் ஆயிரக்கணக்கான பதவிகள் இருப்பதால் இதனை கைப்பற்றி தங்களுடைய பலத்தை நிரூபிக்க அரசியல் கட்சிகள் விரும்புவது இயல்பான ஒன்று. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி,சேலம் போன்ற மாநகராட்சிகளில் மேயர் பதவி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் போலவே இதிலும் கடும் போட்டி இருக்கும் என்பது நிச்சயம்.

DMK Meeting - Updatenews360

2019 இறுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணி 47 சதவீத இடங்களையும், அதிமுக கூட்டணி கட்சிகள் 43 சதவீத இடங்களையும் கைப்பற்றி இருந்தன. இதனால் இந்த முறையும் தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி.

ஆளும் கட்சியாக இருப்பதால் திமுக 90 சதவீத இடங்களை கைப்பற்றவேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது. அதிமுகவும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிகளைக் குவிக்க விரும்புகிறது. மதுரை கோவை,சேலம், நெல்லை, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், ஓசூர், தூத்துக்குடி, வேலூர் மாநகராட்சிகளை தங்கள் வசம் கொண்டு வந்துவிட முடியும் என்று அதிமுக உறுதியாக நம்புகிறது.

சீமான் நம்பிக்கை

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சி குறைந்தபட்சம் 15 நகராட்சிகளை கைப்பற்றி விடவேண்டும் என்று கணக்குப் போட்டு, அதற்காக ஏற்கனவே முழுவீச்சில் இறங்கிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 30 லட்சம் வாக்குகளைப் பெற்றதால் 9 மாவட்ட ஊராட்சி தேர்தல்களிலும், நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று சீமான் கருதுகிறார்.

Seeman -Updatenews360

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்திய ஆண், பெண் வேட்பாளர்கள் 50-க்கு 50 என்ற அதே பார்முலாவையே அவர் கையாளுவார் என்று தெரிகிறது. சட்டப் பேரவை தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் சிலர் மேயர் பதவிக்கு போட்டியிடக் கூடும்.

நிலைப்பாட்டை மாற்றிய தேமுதிக

தேமுதிகவின் சிந்தனையோ வேறு மாதிரியாக உள்ளது. இந்த முறையாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே தனது பலத்தை காண்பிக்க அக்கட்சி முடிவு செய்திருக்கிறது.

அதன் மூலம் 2011 தேர்தலின்போது தங்களுக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தை மீண்டும் கொண்டு வந்து விட முடியும் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக நம்புகிறார்.
மேலும் 2021 தேர்தலின்போது தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்கு சென்றுள்ளதால் பிரேமலதாவுக்கு அத்தனை மாநகராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் அத்துபடி. இந்த முறை மகன் விஜய் பிரபாகரனுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுகவுடன் அமைத்த கூட்டணியை கெட்டதொரு கனவாக மறந்துவிட்டு உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை பிரேமலதா உசுப்பேற்றி விட்டிருக்கிறார். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் வரை, பொறுத்திருங்கள் யாரும் அவசரப்பட்டு முடிவு எடுத்து விடாதீர்கள் என்று அண்மையில் கட்சியினரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டதற்கு காரணமும் ஆகும்.

கமலின் நெருக்கடி

மக்கள் நீதி மய்யத்துக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதம் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் விரும்புகிறார்.
நகர்ப்புறங்களில் அவருடைய கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதால், தன்னால் 4 மாநகராட்சிகளில் ஆளும் கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார். வெற்றியோ தோல்வியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்கு சதவீதத்தை பெருக்குவதுதான் அவருடைய முதல் நோக்கமாக உள்ளது.

புற்றீசல் போல அவருடைய கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளில் ஒரு சிலருக்கே மாற்றுக் கட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது கமலஹாசனை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

MNM Kamal - Updatenews360

அதேநேரம், 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தனது கட்சி போட்டியிடாமல் போனது மிகப்பெரிய தவறு என்பதை அவர் இப்போது உணர்ந்து இருக்கிறார். அந்தத் தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிட்டிருந்தால் கணிசமான அளவிற்கு ஊராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதனால்தான் இந்த தேர்தலில், கிராமங்கள் தோறும் தனது கட்சி கொடி பறக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அவருடைய கட்சி நிர்வாகிகள், சரத்குமாரின் கட்சியை மட்டுமல்ல வேறு யாரையும் இந்த முறை கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றனர்.

குழப்பத்தில் தினகரன் :

தினகரனோ, தனது கட்சியின் கூடாரம் அடியோடு காலி ஆகி விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார். சட்டப் பேரவை தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதம் கூட இந்த முறை அமமுகவுக்கு கிடைக்காது என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.

என்றபோதிலும் தன்னிடமும், சித்தி சசிகலாவிடமும் உள்ள அசுர பண பலத்தால் அமமுகவை வெற்றிபெற வைப்பதைவிட, அதிமுகவை எப்படியாவது வீழ்த்திவிடவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கமாக உள்ளது. வெற்றி தோல்வி பற்றி அவர் கவலைப்படவில்லை என்றும்
அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

sasikala - dinakaran - updatenews360

போட்டியிடும் இடங்களை பிரிப்பதில் கூட்டணிக்குள் முரண்பாடு ஏற்பட்டால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்றவை வெளியேற வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜகவும், பாமகவும் வெளியேறலாம்.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அவருடைய கட்சி நிர்வாகிகளில் பலர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு நடையைக் கட்டிவிட்டதால் தமாக எடுக்க இருக்க முடிவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 136

0

0