‘முதல்ல ஒரு முடிவ எடுங்க.. தனித்து போட்டியெல்லாம் அப்பறம் பாக்கலாம்’ : தேமுதிக நிர்வாகிகளின் மைண்ட் வாய்ஸ்!!
12 February 2021, 5:50 pmவிஜயகாந்த் துறுதுறுவென அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, தேமுதிகவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 2006ம் ஆண்டு முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் சந்தித்தது. அதில் 10 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை வாங்கியது. ஆனால், அந்தத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, நடந்த உள்ளாட்சி தேர்தலிலும ஏராளமான இடங்களை தேமுதிக வென்றது.
இதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. மொத்தம் 41 தொகுதிகளில் 29ல் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி, மக்கள் நலக் கூட்டணி என்ற 3வது அணியை அமைத்து போட்டியிட்டது. இதில், ஒரு இடத்தையும் அக்கட்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தத் தேர்தல் தோல்விக்கு உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியது முக்கியக் காரணமாக இருந்தாலும், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனன் சுதீஷின் செயல்பாடுகளே தேமுதிகவின் பின்னடைவுக்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கூட்டணி குறித்த முடிவை தேர்தல் வரையிலும் இழுத்துச் சென்றதால், கேட்கும் இடங்களை பெற்று வாங்கும் தகுதியை அக்கட்சி இழந்தது. மேலும், உறுதியான கொள்கை முடிவு இல்லாமல், சுதீஷை எப்படியாவது எம்பியாக்கி விட வேண்டும் என்ற கோரிக்கையையே அவர்கள் கூட்டணி கட்சிகளிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது.
முன்பு இருந்த மக்கள் ஆதரவும் கூட இப்போது இல்லாத நிலையில், தேமுதிகவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது என அரசியல் கட்சிகளும் முடிவு செய்து விட்டன.
அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்து மாநில கட்சி அந்தஸ்தை இழந்த நிலையிலும், பிரேமலதா விஜயகாந்தின் வீண் அறிவிப்புகள் கட்சியின் இமேஜை கெடுக்கும் விதமாகவே இருந்துள்ளது. அதாவது, கூட்டணி வைத்து போட்டியிட்டால் மட்டுமே ஒருசில இடங்களிலாவது வெற்றி பெற முடியும் நிலை உள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகளிடையே அதிக இடங்களை பெறுவதற்காக, தனித்து போட்டியிடுவோம்… 3வது அணி அமைப்போம் என பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார்.
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தனது பாணியில் கையாண்டு, வாயடைக்க வைத்து விட்டார். மேலும், அதிமுக கூட்டணியை தேமுதிக நாடி வரும் நிலையும் ஏற்பட்டு விட்டது. ஏனெனில், திமுகவில் இருக்கும் டசன் கணக்கிலான கூட்டணி கட்சிகளுக்கே அங்கு கவுரமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்குமா..? என்ற சந்தேகத்தில் இருந்து வருகின்றன. இதனால், என்ன செய்வதென்று புரியாமல் பிரேமலதா விஜயகாந்தும், சுதீஷும் குழம்பி போயுள்ளனர்.
மேலும், தேமுதிக தலைமையின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு பெரும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. காரணம், இதுவரை சந்தித்த தேர்தல்களில் கூட்டணி அமைத்து, குறிப்பாக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட போதே, மக்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இப்படியிருக்கையில் எந்த நம்பிக்கையில் தனித்து போட்டியிடுவது முட்டாள்தனமான ஒன்று என்று தேமுதிக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக கொடி நாளையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியை விஜயகாந்த் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது : – கூட்டணி குறித்து அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், அதிமுக அல்லது திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தேமுதிக தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை, எனக் கூறினார்.
அவரது இந்தப் பேட்டி தேமுதிக தொண்டர்களிடையே மேலும் வெறுப்பையே ஏற்படுத்தியள்ளது. கூட்டணி குறித்து நிலைப்பாடு ஏதுமின்றி, மீண்டும் அதிமுக அல்லது திமுகதான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனக் கூறுவது, பிற கட்சியின் தயவை எதிர்பார்த்திருப்பதை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் எனக் கூறுவது, வெறும் கையில் காக்கையை ஓட்டுவது போன்றது எனக் கூறி, தேர்தல் தொடர்பாக தலைமை என்ன முடிவை எடுக்கப்போகிறதோ..? என முனுமுனுத்து வருகின்றனர்.
கடந்த தேர்தல்களில் கூட்டணி குறித்து ஒற்றை நிலைப்பாட்டை எடுக்காமல், இரு பக்கமும் வலையை வீசி வந்ததை மக்கள் மத்தியில் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதேதான் தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்து, இந்தத் தேர்தலிலாவது தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என மேலிடத்திற்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம்… இந்த முறை எப்படியென்று…
0
0