தேமுதிகவின் தேர்தல் சின்னம் பறிபோகிறது? தினகரனை நம்பி ஏமாந்த சோகம்!

11 May 2021, 11:30 am
murasu - updatenews360
Quick Share

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் கட்சியான தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில், அமமுக 161 இடங்களிலும், தேமுதிக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டன. எஸ்டிபிஐக்கு
6 இடங்களும், ஒவைசியின் AIMIM கட்சிக்கு 3 தொகுதிகளும் வழங்கப்பட்டது. இதர சிறு கட்சிகளுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கினார், தினகரன்.

Dinakaran DMDK - Updatenews360

இந்தத் தேர்தலில் தேமுதிக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கட்சியின் அங்கீகாரத்தையும் முரசு சின்னத்தையும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை பெற இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சில முக்கிய நிபந்தனைகளை விதித்து உள்ளது. அதில் ஏதாவது ஒன்றில் தேவையான தகுதியை கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். அப்போதுதான் மாநில கட்சி என்ற அந்தஸ்தையும், தங்களது கட்சியின் தேர்தல் சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

அதாவது மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளிலாவது வென்று இருக்கவேண்டும். அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகுதிகளை பெறும் கட்சிதான் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக
நீடிக்க முடியும். இதன் அடிப்படையில் தங்களுடைய தேர்தல் சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும் இயலும்.

Vijayakanth - updatenews360

அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் தேமுதிகவுக்கு ஏதாவது ஒருவிதத்தில் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். குறிப்பாக, அதிமுக ஒதுக்க முன் வந்த 14 தொகுதிகளை பெற்றுக்கொண்டு போட்டி போட்டிருந்தாலும் கூட இத்தகைய நெருக்கடி தேமுதிகவுக்கு ஏற்பட்டிருக்காது.

இந்த நிலையில்தான், எப்படியும் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம், 6 சதவீத ஓட்டும் பெற்றுவிட முடியும் என்கிற அதீத நம்பிக்கையில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துக் கொண்டது.

குறைந்தபட்சம் 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் மறுபடியும் நுழைந்துவிடவேண்டும் என்று முழு முனைப்புடன் பிரேமலதா, அவருடைய சகோதரர் சுதீஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் ஆகிய மூவரும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.தனது கணவர் 2006-ல் வெற்றிபெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விஜயகாந்தும் சில தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். “எங்களால்தான் 2011 தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. இல்லாவிட்டால் அக்கட்சியின் கதை அப்போதே முடிந்திருக்கும்” என்று பிரேமலதா வாய்க்கு வந்தபடி ஆவேசமாக பேசினார். சுதீஷும், விஜய் பிரபாகரனும் “அதிமுக அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்” என்று ரொம்பவே ஓவராக கூவினர்.

ஆனால் தேர்தலில் அமமுக- தேமுதிக கூட்டணி ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாமல் ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப்பட்டது. அதைவிட மிகப்பெரிய துயரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 2.14 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் 0.45 ஆக சரிந்துபோனது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதம் என்பது சுமார் 27 லட்சம் ஓட்டுகள் ஆகும். இந்த ஓட்டு சதவீதத்துடன் தேமுதிக சார்பில் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே கட்சியின் சின்னமும், அங்கீகாரமும் தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் தேமுதிக வாங்கியதென்னவோ 1 லட்சத்து 96 ஆயிரம் ஓட்டுகள்தான். இதனால் தேமுதிக இனி முரசு சின்னத்தை நினைத்துப் பார்க்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

vijayakanth - murasu - updatenews360

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அப்போது முரசு சின்னத்தில் போட்டியிட தேமுதிக விரும்பினாலும் மாநில தேர்தல் கமிஷன் நினைத்தால் மட்டுமே அது நடக்கும். இல்லையென்றால் கோர்ட்டுக்கு சென்றுதான், இறுதியானதொரு வாய்ப்பாக தேமுதிகவால் முரசு சின்னத்தை பெறமுடியும். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. தற்போதைய நிலையில் முரசு சின்னம் பறிபோகும் வாய்ப்பே பெரிதாக தென்படுகிறது.

இதுபற்றி தேமுதிகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கடந்த 2016 தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணி அமைத்து ஒரு பெரிய தவறை செய்தார். அதனால் அவருடைய பெயர் கெட்டுப் போனதுதான் மிச்சம். அந்தக் கூட்டணியில் இருந்த 4 கட்சிகள் அவரை கழற்றி விட்டுவிட்டு திமுக அணிக்கு தாவி 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் புத்துயிர் பெற்று விட்டன. அதிமுக கூட்டணியில் இணைந்த தாமாக தலைவர் ஜிகே வாசன், ராஜ்யசபா எம்பி பதவியும் பெற்று விட்டார். தேமுதிகதான் இப்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக ஒதுக்கிய 14 தொகுதிகளை பெற்றுக்கொண்டு போட்டியிட்டு இருந்தால் கூட நிச்சயம் மூன்று நான்கு எம்எல்ஏக்கள் எங்களுக்கு கிடைத்து இருப்பார்கள். ஆனால் டிடிவி தினகரனை நம்பிப்போய் இப்போது வெறும் கையுடன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். அனேகமாக முரசு சின்னமும் கையை விட்டுப்போய் விடும் போல் தெரிகிறது

premalatha vijayakanth - updatenews360
கோப்பு படம்

இந்தத் தேர்தலில், கட்சியின் அத்தனை முடிவுகளையும் பிரேமலதாவே எடுத்தார். கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவர்களிடம் திணிக்கப்பட்டவையாகத்தான் இருந்தது.

தொடர்ந்து அடிக்கடி இப்படி தவறான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருந்தால் கட்சியில் யாருமே இருக்க மாட்டார்கள். இந்தத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு தோற்று இருந்தால்கூட மனதை தேற்றிக் கொண்டு இருப்போம். ஆனால் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து, இருந்த செல்வாக்கையும் இழந்து தத்தளிக்கிறோம். எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று அந்த தேமுதிக நிர்வாகி மன வேதனையை கொட்டினார்.

Views: - 282

1

0