2021-க்குப் பிறகு காணாமல் போகும் தேமுதிக..? பிரேமலதாவால் அலறும் தொண்டர்கள்..!!

12 November 2020, 8:00 am
dmdk - updatenews360
Quick Share

சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் கேப்டன் விஜயகாந்தை முதலமைச்சராக்குவோம் என்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மகன் விஜய பிரபாகரனும் அடிக்கடி பேசுவதைக் கேட்டு கட்சியில் மிச்சம் மீதியிருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் பீதியடைந்துள்ளனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எந்த அணியில் சேரும் என்பதே மிகவும் முக்கியமான விவாதமாக இருந்த நிலை தற்போது இல்லை என்பதை பிரேமலதா புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் புலம்பிவருகிறார்கள்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக வடசென்னையிலும் திருச்சியிலும் டெபாசிட் இழந்தது. தற்போது, அதிமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக தனித்துப் போட்டியிடப் போவதாகவும் விஜயகாந்தை முதலமைச்சராக்கப் போவதாகவும் பிரேமலதா கூறிவருகிறார். பொதுமக்களுக்கு இது சிரிப்பை வரவழைத்தாலும் கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இந்தப் பேச்சுகள் பீதியைக் கிளப்பி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் 2.19 சதவீத வாக்குகளே வாங்கிய நிலையில் தேமுதிகவின் தற்போதைய செல்வாக்கைப் புரிந்துகொள்ளாமல் கட்சியின் தலைவர்கள் பேசக்கூடாது என்றும் பழைய நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிடும் என்றும் ஏற்கனவே நொந்துபோயிருக்கும் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அதிமுகவும் தேமுதிகவைக் கண்டுகொள்ளாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது இருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியைவிட்டு ஓடிப்போகும் சூழல் ஏற்படும் என்று அவர்கள் பயத்தில் இருக்கின்றனர்.

2006 தேர்தலில் தேமுதிக எட்டு சதவீத வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றது. மீண்டும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி 10 சதவீத ஓட்டுகளுக்கும் அதிகமாகப் பெற்றது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அணி அமைத்து 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற்றதால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான பிறகு அவரது செயல்பாடுகள் மோசமாக இருந்தது. அதிமுக அணியைவிட்டுப் பிரிந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் சேர்ந்தார். ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. பாஜக அணியில் சேர்வதற்கு நீண்ட காலமாக அவர் பேரம் நடத்தியதால் அந்த அணியில் தொகுதிப் பங்கீடு மிகவும் தாமதமானது. கடைசி நேரம்வரை அவர் ஜவ்வாக இழுத்ததால் கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதிகள் என்பது தெரியாத நிலையில் எல்லாக்கட்சிகளும் தவித்தன. தேர்தலுக்கு சில நாட்களே இருந்தபோது, அவர் கூட்டணியில் சேர்ந்ததால் அந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது.

இருந்தாலும் 2016 தேர்தலில் அவரை தங்கள் அணியில் சேர்க்க திமுகவும் பாஜகவும் மக்கள்நலக் கூட்டணியும் கடுமையாகப் போட்டிபோட்டன. ஒவ்வொரு நாளும் விஜயகாந்த் எந்த அணியில் சேர்வார் என்பதே பேச்சாக இருந்தது. மீண்டும் கூட்டணி பேரத்தை அவர் ஜவ்வுமிட்டாய்போல இழுத்துவந்தார். முதலில் பெரும் எழுச்சியுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிய மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்தின் தாமதத்தால் பங்கீட்டை மிகவும் தாமதமாக முடித்தது. விஜயகாந்தின் நீண்டகாலத் தொகுதி பேரத்தால் மக்களும் மிகவும் எரிச்சல் அடைந்தனர். கடைசியில் அவர் அந்த அணியில் சேர்ந்தபின் வேட்பாளர் அறிவிப்பும் பிரச்சாரமும் தாமதமாகத் தொடங்கியது. இந்தக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. தேமுதிக வாக்குகள் 2.39 சதவீதமாகக் குறைந்தது.

2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு தேமுதிகவுடன் கூட்டணி சேருவதற்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், அதை மனதில் வைத்து மீண்டும் பிரேமலதா பேசிவருவது மக்களுக்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. ஆனால், இந்த முறை அவருடன் பேச எந்தக்கட்சியும் முன்வராது என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது.

மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் குறிப்பிட்ட கொள்கை நிலைப்பாட்டை அறிவித்து தங்கள் கூட்டணியை முன்னதாகவே வெளிப்படையாக அறிவிக்கின்றன. ஆனால், தேமுதிக ஒவ்வொரு தேர்தலிலும் எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணியை முன்பே முடிவு செய்யாமல், இப்படியே இழுத்துக்கொண்டு போனால் 2019-ஆம் நாடாளுமன்ற தேர்தலில் தனது அணியில் சேர்த்துக்கொண்ட அதிமுகவும் கண்டுகொள்ளாத நிலையில், 2021 தேர்தலுக்குப் பின் தேமுதிக காணாமல் போகும் என்று நிர்வாகிகள் பீதியில் இருக்கின்றனர்.

Views: - 28

0

0