50% இடங்கள் தர தினகரன் தயார்: உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியா…? அலறி ஓட்டம் பிடிக்கும் பிரேமலதா!

2 July 2021, 11:06 am
dmdk - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி கண்ட விஜயகாந்தின் தேமுதிக மெல்ல மெல்ல அந்த சோகத்தில் இருந்து விடுபட்டு வருகிறது.

முட்டுக்கொடுத்த கேப்டன்

இந்த தோல்வி காரணமாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களுடைய அரசியல் எதிர்காலம் கருதி அதிமுகவிலும், திமுகவிலும் இணைவதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அதனைக் கேள்விப்பட்டு மனம் நொந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளை கெஞ்சிக் கேட்காத குறையாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

vijayakanth - murasu - updatenews360

அதில், “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள். தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி நிச்சயம் அனைவரும் கலந்து பேசுவோம். தற்போது கொரோனா பரவி வருவதால் உங்களை சந்திக்க முடியாத சூழல் உள்ளது. தொற்றின் வேகம் குறைந்தவுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விரிவாகப் பேசுவோம். நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது”என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனால் அவருடைய கட்சி நிர்வாகிகள், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். என்றாலும்கூட அவர்களில் ஒரு சிலர், இந்த மாத இறுதி வரை கெடு விதித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஜூலை 31-ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது அந்த நிர்வாகிகளின் கோரிக்கை.

வலுப்படுத்த போராட்டம்

இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக விஜயகாந்த் சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட அவர் தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து கண்டன அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை தேமுதிக சார்பில் முன்னெடுப்பது என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 5-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது.

Deadline For 20 Percent Ethanol Blended Petrol Is Now 2023 In India

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளிட்டவற்றை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

வெற்றி, தோல்வி சகஜம்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம், “தேர்தலுக்குப் பிறகு கட்சியை மேலும் வலுவாக கட்டமைக்கப் போவதாக கூறி இருந்தீர்களே?” என்று கேட்டதற்கு, “தேமுதிகவின் கட்டமைப்பு என்றுமே வலிமை மிக்கதுதான்.அரசியலில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜம். வெற்றியை கண்டு ஆணவப்படுவதோ தோல்வியை கண்டு துவண்டு போவதோ தேமுதிகவுக்கு ஒரு போதும் கிடையாது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

premalatha vijayakanth - updatenews360

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக- தேமுதிக கூட்டணி தொடருமா? என்று கேள்வி எழுப்பிய போது, பிரேமலதா அதற்கு பிடி கொடுக்கவில்லை. “முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும். அதன்பிறகு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேமுதிகவின் நிலையை விஜயகாந்த் அறிவிப்பார்” என்றார்.

உஷாராகும் தேமுதிக

பிரேமலதா, உள்ளாட்சித் தேர்தலை குறி வைப்பது ஏன் என்பது பற்றி, தேமுதிக நிர்வாகிகள் கூறும்போது, “பொது மக்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் மூலம்தான் கட்சியை நிலைப்படுத்த முடியும் என்று பிரேமலதா நம்புகிறார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தனிநபர் செல்வாக்குதான் செல்லுபடியாகும் என்பதால், தேர்தல் நடத்தப்பட இருக்கும் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளிலும் 9 மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு தகுதி வாய்ந்த, மக்களுக்கு மிகவும் பரிச்சயமான தேமுதிகவினரை நிறுத்த விரும்புகிறார்.
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சுதீஷ், விஜய் பிரபாகரன் இருவரின் பங்கும் நிறைய இருக்கும்.

இன்னொரு முக்கிய விஷயம், உள்ளாட்சி தேர்தலிலும், அமமுகவுடன் கூட்டணியை தொடரவேண்டும் என்று விரும்பும் சசிகலா, அதுதொடர்பாக அவ்வப்போது பிரேமலதாவுடன் போனில் பேசியும் வருகிறார். ஐம்பதுக்கு ஐம்பது சதவீதம் வார்டுகளை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்.

Dinakaran - vijayakanth updatenews360

செல்வாக்கே இல்லாத அமமுகவுடன் கூட்டணி வைப்பதில் தேமுதிகவுக்கு உடன்பாடு கிடையாது. எனவேதான் பிரேமலதா கூட்டணி அமைப்பதில் தயக்கம் காட்டி வருகிறார். தவிர சசிகலாவும், தினகரனும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நடத்தும் ஆடியோ நாடகம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு அவர்கள் இருவரும் அரசியலில் இருப்பார்களா? என்பதே சந்தேகம்.

அதனால்தான் அமமுகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்கு தேமுதிக தயக்கம் காட்டுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலிலேயே தினகரன் வெத்து வேட்டு என்பது தெரிந்துவிட்டது. அதனால்தான் இப்போது சசிகலாவை தூண்டிவிட்டு தினகரன் வேடிக்கை பார்க்கிறார். அவரையும், சசிகலாவையும் நம்பி ஒரு காரியத்தில் இறங்க முடியாது.

அமமுகவுக்கு குட்பை

கடந்த பிப்ரவரி மாதம்,”நானும் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வருவேன்” என்று பிரேமலதாவிடம் சசிகலா உறுதியளித்தார். அதை நம்பித்தான் அமமுகவுடன் கூட்டணியே வைத்தோம். ஆனால் கடைசிவரை பிரச்சாரத்திற்கு வராமல் சசிகலா ஒதுங்கிக் கொண்டு எங்களை ஏமாற்றிவிட்டார். அவரை மீண்டும் நம்ப நாங்கள் தயாரில்லை.
அதனால் எங்களுக்கு அவர்கள் இருவரின் உதவியும் தேவையில்லை. அமமுகவுடன் கூட்டணியும் வேண்டியதில்லை.

Dinakaran_UpdateNews360

இதை கட்சித் தலைமையிடம் தெளிவாக சொல்லிவிட்டோம். கேப்டனும், பிரேமலதாவும் ஒப்புக் கொண்டுவிட்டனர். அதனால்தான் அமமுகவை கண்டதும் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை எங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது” என்று அந்த நிர்வாகிகள் சூடு கண்ட பூனை போல் குறிப்பிட்டனர்.

தேமுதிக தலைமை அமமுகவுடனான கூட்டணி விஷயத்தில் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது!

Views: - 177

0

0