ரூ.10 லட்சம் to ரூ.50 லட்சம்… வேட்பாளர்களுக்கு நிம்மதி கொடுக்கும் தலைமை… ஜரூர் காட்டும் தேமுதிக…!!

19 April 2021, 1:07 pm
DMDK Candidate list - Updatenews360
Quick Share

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக வழக்கம் போல, அதிமுக – திமுக ஆகிய இருகட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. திமுக கூட்டணியை இறுதி செய்து விட்டதாலும், பிரேமலதாவின் கோரிக்கையை அதிமுக ஏற்க மறுத்தாதாலும், வேறு வழியின்றி டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டது.

அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதோடு, தேர்தல் செலவிற்கும், தொகுதிக்கு இத்தனை லட்சம் என சில கோடிகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், தேமுதிக முன்பு இருந்த ஆதரவு தற்போது இல்லை என்பதை உணர்ந்து, 10 பேர் மட்டுமே போட்டியிட முன்வந்தனர். மேலும், 50 தொகுதிகளுக்கு போட்டியிட யாரும் முன்வராமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, மாவட்ட செயலாளர்கள் கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தலைமையின் உத்தரவை மீற முடியாததால், ஒரு சிலர் தங்களிடம் இருந்த கணிசமான தொகையை செலவு செய்யத் தயாராகினர். ஆனால், பெரும்பாலானோர் தங்களிடம் தேர்தல் செலவுக்கு தேவையான பணம் ஏதும் இல்லை எனக் கூறி கையை விரித்துள்ளனர். இருப்பினும், தேர்தலுக்கான செலவை செய்யுங்கள், பின்னர் தேர்தல் செலவுக்கான பணம் திருப்பி வழங்கப்படும் என தலைமையிடம் இருந்து வேட்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கை செய்து கொடுக்கப்பட்டது.

இதனை நம்பி பெரும்பாலான வேட்பாளர்கள் கடன் வாங்கி கூட தேர்தலுக்கான செலவுகளை கவனித்து வந்தனர். ஒரு சிலர் பெயரளவில் பிரச்சாரம் செய்து விட்டு, வீட்டிலேயே முடங்கியும் கிடந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு, சொல்லியபடி, வேட்பாளர்களுக்கான செலவு தொகையை செட்டில் செய்யும் பணியில் தேமுதிக களமிறங்கியுள்ளது. வேட்பாளர்கள் தங்களின் செலவு கணக்கை எடுத்துக் கொண்டு, அதற்கென நியமிக்கப்பட்ட பார்த்தசாரதி தலைமையிலான குழுவின் முன்பு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஆராய்ந்து பார்த்து, பிரேமலதாவிடம் அறிக்கையை கொடுத்துள்ளது.

அதனடிப்படையில், களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்த வேட்பாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளது தேமுதிக. அதேபோல, செலவுகளை பொறுத்து ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேலான தொகையையும் வேட்பாளர்களுக்கு ரிட்டன் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, எந்தவித செலவும் செய்யாத சில வேட்பாளர்களும் தலைமையிடம் பணம் வாங்க, பொய் கணக்கையும் சமர்பித்ததாக தெரிகிறது. ஆனால், அவர்களை கண்டறிந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது என்று அக்கட்சியின் தலைமை திட்டவட்டமாக கூறி விட்டதாம்.

தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில், எந்த முடிவு வந்தாலும் சரி, நாம் செலவு செய்த தொகையோ, அல்லது அதற்கு கூடுதலான ரொக்கமோ கைக்கு வந்து விட்டது என்று தேமுதிக வேட்பாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Views: - 137

0

0