சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு? முந்திக் கொண்ட தே.மு.தி.க.!!

25 August 2020, 12:38 pm
DMDK premalatha - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட விரும்புவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற ஒரு கூரையின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து தே.மு.தி.க. களம் கண்டது. ஆனால், முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட மிகவும் குறைவான வாக்குகளே தே.மு.தி.க.விற்கு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க., யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் தவித்து வந்தது. தேர்தல் நெருங்கிய சூழலில், ஏறத்தாழ கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிகளையும் ஒதுக்கி விட்டன தமிழக அரசியல் கட்சிகள்.

இந்த சூழலில், தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல், கொடுத்த இடங்களை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து கொண்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கடந்த முறை போன்று இந்த முறை இருக்கக் கூடாது என்று பிற கட்சியினரை விட சற்று வேகமாக, தேர்தல் நடவடிக்கைகளை தே.மு.தி.க. முடுக்கி விட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என்றே விரும்புகின்றனர். கொரோனா காலத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனையில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. தற்போது வரை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் அறிவிப்பு வெளியாகும். இது தொடர்பாக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி உரிய முடிவை எடுக்கும்,” எனக் கூறினார்.

Views: - 36

0

0