கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின்-துரைமுருகன் மோதலா? தலைவரின் வெள்ளைக்கொடி அறிக்கையைப் பஞ்சராக்கிய புதிய பொதுச்செயலாளர்!!

Author: Babu
15 October 2020, 6:51 pm
stalin - duraimurugan - updatenews360
Quick Share

சென்னை : திமுக கூட்டணியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட இரண்டு நாட்களில் ‘இப்போதைக்கு’ அப்படித்தான் கூற முடியும் என்று தலைவரின் அறிக்கையை பஞ்சராக்கி, அதே பிரச்சினையை மீண்டும் பற்றவைத்தார் பொதுச்செயலாளர் க.துரைமுருகன்.

திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றி தனது சாதிக்கட்சியான பா.ம.க.வை சேர்த்துக்கொள்ள வன்னியரான துரைமுருகன் முயற்சி செய்கிறார் என்று கூறப்படும் நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பாக அவருக்கும், ஸ்டாலினுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும், கட்சித் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

அரசியல் வார இதழுக்கு துரைமுருகன் அளித்த பேட்டியில் ‘திமுக கூட்டணியில் மாற்றம் இருக்கும் எனக் கருதுகிறீர்களா’ என்ற கேள்விக்கு ‘மாற்றம் இருக்க வாய்ப்பில்லை’ என்று நேரடியாகக் கூறாமல், ‘எங்கள் கூட்டணியில் யார்யார் இருக்கிறார்களோ, அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்’ என்று மறைபொருளாக அவர் கூறியுள்ளார். ‘இப்போதைக்கு’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருப்பதன் மூலம் கூட்டணி தற்காலிகமானது என்பதையே மீண்டும் சுற்றிவளைத்துச் சொல்லியிருக்கிறார். ‘தேர்தலுக்கு முன் எந்த மாற்றமும் இருக்காது’ என்றோ, ‘இந்த கூட்டணிதான் தேர்தலில் நீடிக்கும்’ என்றோ கூறாமல் ‘இப்போதைக்கு’ என்று துரைமுருகன் கூறியிருப்பது மீண்டும் சற்று தணிந்துள்ள பிரச்சினையை பற்றவைத்துள்ளது.

Duraimurugan- updatenews360

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அவர்களாக வெளியேறும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒருவேளை துரைமுருகன் சந்தேகப்பட்டாலும், அந்த சந்தேகத்தை பொதுவெளியில் ஏன் பேசுகிறார் என்ற சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் வெளியேறும் அளவுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கப்படுமா அல்லது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அவர்கள் வெளியேறும் சூழ்நிலையை திமுகவே உருவாக்குமா என்ற கேள்விகளும் எழுகின்றன. கூட்டணிக் கட்சிகளை வெளியேற வைத்து, அவர்கள் தாமாக வெளியேறினார்கள், திமுக யாரையும் வெளியேற்றவில்லை என்று வழக்கம்போல திமுக கூறிவிடுமோ என்ற திகிலையும், துரைமுருகனின் பேட்டி கூட்டணித் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ‘உதயசூரியன்’ சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுவது குறித்தும் அவர் மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார். “தங்களது வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்று சில கட்சிகளே சொல்கின்றன. நாங்கள் யாரையும் வற்புறுத்தியதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் தலைவர் தொல். திருமாவளவனும், முஸ்லீம் லீக் கட்சியுன் கூறியுள்ள நிலையில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சில கட்சிகளே கேட்டதாக அவர் கூறியுள்ளது அந்த நிபந்தனையை திமுக கைவிடவில்லை என்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எந்தக் கட்சியினர் அப்படிக் கூறினார்கள் என்பதை துரைமுருகன் கூறவில்லை. திமுகவிடம் பேசும்போது ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், வெளியில் பேசும்போது தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூட்டணித் தலைவர்கள் கூறுவதாக துரைமுருகன் குற்றம்சாட்டுவதாகவும் அவரது பேட்டி அமைந்துள்ளது.

dmk all party meet - updatenews360

திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்றும் கூட்டணிக் கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் பரவலாக பல மாதங்களாக வந்த செய்திகளையும், விவாதங்களையும் ‘அனுமானங்கள்’ என்றும் ‘அதீதமான கற்பனைகள்’ என்றும் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையிலும் தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும், தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அப்படியே நீடிக்கும் என்ற நேரடியான உத்தரவாதமோ அந்த அறிக்கையில் இல்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் ஸ்டாலின் சற்று இறங்கிவருவதையே அந்த அறிக்கை காட்டியது.

ஆனால், மீண்டும் கூட்டணியின் தற்காலிகத்தன்மை பற்றி துரைமுருகன் அளித்துள்ள பேட்டி, ஸ்டாலினின் அறிக்கையைத் தொடர்ந்து சற்றுத் தணிந்திருக்கும் பிரச்சினையில் மீண்டும் திரிகொளுத்தியுள்ளார். ஸ்டாலினின் அறிக்கையிலும் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுகள் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஸ்டாலினும், துரைமுருகனும் ஒருவருக்கொருவர் பேசி ஒரே விஷயத்தை வேறுவேறு முறைகளில் சொல்கிறார்களா அல்லது இருவருக்கும் இடையில் கூட்டணி தொடர்பாக மோதல் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பமும் திமுக தொண்டர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

விசிகவை கூட்டணியில் தொடரவைக்க ஸ்டாலின் நினைக்கிறார் என்றும், அந்தக் கட்சியை வெளியேற்றிவிட்டு பாமகவை உள்ளே இழுக்கலாம் என்று சாதிப்பாசத்துடன் துரைமுருகன் கணக்குப் போடுகிறாரா என்றும் தெரியவில்லை. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் தனது மாவட்டத்தில் நிறுத்தப்படும் திமுக வேட்பாளர்கள் எளிதாக வெற்றிபெற பாமக அணியில் இருப்பது நல்லது என்று துரைமுருகன் எண்ணுகிறார் என்றும் கூறப்படுகிறது.

Views: - 58

0

0