திமுக அணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,? பரபரப்பான சூழலில் காங்., செயற்குழு கூட்டம்!!

5 March 2021, 1:31 pm
Congress - dmk - cover updatenews360
Quick Share

சென்னை: திமுக கூட்டணியில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காத நிலையில் அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறுவது குறித்து இன்றைய காங்கிரஸ் செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

திமுக அணியில் அதிக இடங்களைப் பெற கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்து பெருமளவு கூட்டத்தைத் திரட்டிக் காட்டிய நிலையிலும், திமுக கேட்கும் எண்ணிக்கையில் இடங்களைத் தர மறுப்பது குறித்து கங்கிரஸார் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். தனித்து நின்றோ, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்தோ, காங்கிரசின் பலத்தைக் கட்ட வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

Cbe Rahul Gandhi- Updatenews360

கடந்த 2016-ஆம் ஆண்டு 41 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் வெறும் 8 இடங்களில்தான் வென்றது. இதனால், திமுக 89 தொகுதிகளை வென்ற நிலையிலும், அதிமுகவில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டபோதும், திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதேபோன்ற நிலை பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஏற்பட்டது.

பீகார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் பாதிக்குப்பாதி இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 51 தோற்றதால் ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பை மயிரிழையில் இழந்தார். இதேபோன்ற நிலை தமிழ்நாட்டில் திமுகவுக்கும் ஏற்படும் என்ற கலக்கமும், பீதியும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கிரசுக்கு இந்த முறை குறைந்த அளவு தொகுதிகளே ஒதுக்க வேண்டும் என்று திமுக தெளிவான முடிவை எடுத்துள்ளது. ஆனால், இந்த முடிவை காங்கிரஸ் மறுக்கிறது.

தமிழ் நாட்டில் பாஜகவுடன் அணி சேர்ந்துள்ள அதிமுக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் என்று திமுக எதிர்பார்த்தது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மனநிலை வேறுவிதமாக உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வருவதால் காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறும் காங்கிரஸ் நிர்வாகிகள், தற்போதுள்ள சூழலில் அதிக இடங்களில் போட்டியிட்டால் அதிமுகவைவிட அதிக இடங்களில் வென்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பும் இருக்கிறது.

dinesh gundu rao - congress - updatenews360

அதைவைத்து தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு பின்னர் ஆளும் கட்சியாகவும் மாறலாம் என்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருப்பதால் குறைந்தது 24 இடங்களை வென்றால்தான் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கணக்கிடுகிறார்கள். அதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மறுமலர்ச்சி காண்பதை திமுக விரும்பவில்லை என்பதால், குறைந்த இடங்களை ஒதுக்கிறார்கள் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

ஆனால், 2016 தேர்தல் மட்டுமின்றி 2011-ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில்தான் வெற்றி பெற்றது. காங்கிரசுடன் 2006-ஆம் ஆண்டு கூட்டணி வைத்த நிலையிலும், திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இலங்கைத் தமிழர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு, காவிரி ஆகிய எந்தப் பிரச்சினையிலும் காங்கிரஸ் சொல்வதை திமுக கேட்டு ஆட்சி நடத்தும் சூழல் உருவானதால், திமுகவுக்கும் அதன் முதல்வர் மு. கருணாநிதிக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. மேலும் நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, ஈழத் தமிழர் படுகொலை, காவிரி, முல்லைப்பெரியாறு ஆகிய எல்லாப் பிரச்சினைகளிலும் காங்கிரஸ் தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கு எதிரான நிலை எடுத்ததால், திமுக அதற்கெல்லாம் மக்கள் மத்தியில் பதில் சொல்லும் சூழல் இருக்கிறது. பாஜகவை எதிர்த்து திமுக கடுமையாகப் பேசிவரும் நிலையில், அதே பிரச்சினைகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவும், பாஜகவும் திருப்பிக் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதனாலும், காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்க திமுக தயங்குகிறது.

ஆனால், அதிக இடங்களைக் காங்கிரஸ் கேட்பதால், காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்துவிட்டு, பின்னர் ஆட்சிக்கு வருவதற்கும் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அதை தக்க வைப்பதற்கும் அவஸ்தைப்படுவதா என்று திமுக தலைவர்கள் யோசித்துவருகின்றனர்.

கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவதில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் கடுமையான கருத்துவேறுபாடுகள் நிலவுகிறது. இதனால், கூட்டணியில் கருத்தொற்றுமை காணாத நிலை இருக்கிறது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியை முறிப்பது காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது. தனித்துப் போட்டியிடுவதா அல்லது மக்கள் நீதி மய்யத்துடன் கைகோர்ப்பதா என்றும் அலசப்படும் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடுமா அல்லது வெளியேறுவோம் என்ற எச்சரிக்கையை வழங்குமா என்ற பரபபரப்பான சூழலில் தமிழக தேர்தல் களம் இருக்கிறது.

Views: - 15

0

0

1 thought on “திமுக அணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,? பரபரப்பான சூழலில் காங்., செயற்குழு கூட்டம்!!

Comments are closed.