குறைவான தொகுதி கொடுத்ததால் தொண்டர்கள் குமுறல் : கூட்டணிக் கட்சிகளின் வாக்கு திமுகவுக்கு கிடைக்குமா?

8 March 2021, 10:00 pm
DMK alliance cover - updatenews360
Quick Share

சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்தாலும், மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சியிலும், கடும் அதிருப்தியிலும் இருக்கின்றனர். இதனால், திமுக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினரின் வாக்குகள் திமுகவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

தேர்தல் கூட்டணி என்பது வாக்குகளைக் கூட்டுவதால் மட்டும் உருவாகும் கணிதம் அல்ல. அது இரு கட்சித் தொண்டர்களும், வாக்காளர்களும் ஒன்று கலக்கும் வேதியியல் வினை என்று பார்க்கப்படுகிறது. ஆனால், திமுக கூட்டணியில் பெரும்பாலான தொகுதிகளில் தனது கட்சியே நிற்க வேண்டும் என்ற எண்ணத்தால் பேச்சுக்களில் திமுக கறாராக இருந்தது. இதனால், கூட்டணித் தலைவர்கள் மனம் நொந்து போனார்கள். தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக அணியை வீழ்த்த வேண்டுமென்பதால், கொள்கைக்காக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறினார்.

Stalin Condemned- Updatenews360

கொடுத்த இடங்களில் அவர்களுக்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ இல்லை என்பதை அவர்களின் கோபமான முகங்களும், அவர்கள் சொன்ன வார்த்தைகளும் தெளிவாக எடுத்துக்காட்டின. முதலில் வந்து கையெழுத்திட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் வெளிப்படையாகவே ஆறு இடங்களை ஏற்கமாட்டோம் என்று முழக்கமிட்டனர். நீண்ட காலமாக கூட்டணியில் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் வெளியேறி எதுவும் செய்ய முடியாது என்பதாலும், பாஜக எதிர்ப்பு நிலையை எடுத்துவிட்டதாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

DMK - vck - updatenews360

ஆனால், திமுக கடைசி நேரத்தில் தங்களை ஏமாற்றிவிட்டது என்ற எண்ணமே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறது. திமுக போட்டியிடும் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் முழு மனதுடன் தேர்தல் வேலை பார்ப்பார்களா, தலித் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலித் வாக்குகள் வேண்டும், ஆனால், அவர்களின் கட்சிக்கு உரிய மரியாதை தர வேண்டாம் என்ற திமுகவின் அணுகுமுறை, வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் திமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளுக்குள் வருத்தத்துடன் உடன்பாட்டை ஏற்றுக்கொண்டது. எண்ணிக்கையைவிட இலட்சியங்களே முக்கியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர். முத்தரசன் கூறியுள்ளது எண்ணிக்கையில் அவருக்கு திருப்தியில்லை என்பதைக் கூறாமல் கூறியது. தொண்டர் பலமிக்க இந்திய கம்யூனிஸ்ட் திமுக போட்டியிடும் தொகுதிகளில் மன வருத்தமில்லாமல் உழைப்பார்களா என்ற சந்தேக மேகங்கள் கூட்டணியில் வெற்றி வாய்ப்பை இருட்டாக்கிவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

பெரிய அளவு வாக்கு வாங்கி இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை வாக்குகளைக் கொண்டது மதிமுக. தென் மாவட்டங்களிலும், திருச்சி போன்ற நகரங்களிலும் அந்தக் கட்சிக்கு வலுவான வாக்கு வாங்கி இருக்கிறது. கொங்கு மண்டலத்திலும், மதிமுகவுக்கு பல பகுதிகளில் ஆதரவு இருக்கின்றது. கடந்த முறை மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றபோது, விடுதலை சிறுத்தைகளை விடவும், இரு கம்யூனிஸ்ட கட்சிகளைவிடவும் அதிக இடங்களில் மதிமுக நின்றது. ஆனால், இந்த முறை அந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் தரப்பட்டதோ, அதே ஆறு தொகுதிகள் மதிமுகவுக்கு கொடுக்கப்பட்டது. அந்தத் தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு 12 இடங்களை திமுக தரவில்லை.

அதே நேரத்தில் கட்சிக்கு எட்டு தொகுதிகள் தந்திருந்தால் கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அங்கீகாரம் பெற்றுவிட்டால், தேர்தலுக்குப் பின் திமுகவுக்கு எதிராக வளர்ந்துவிடும். அந்த வாய்ப்பைக் கொடுக்கக்கூடாது என்று திட்டமிட்டு திமுக ஆறு தொகுதிகளில் மதிமுகவையும், சிறுத்தைகளையும் அடக்கிவிட்டது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைத்தபிறகு போன முறை ஆட்சியில் நடந்ததுபோலவே, தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தாலோ, பாஜகவுடன் நெருக்கமானாலோ தட்டிக்கேட்க முடியாத நிலையில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் திமுக செயல்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசும் திமுக, தமிழக சட்டமன்றத்தில் தன்னைத் தட்டிகேட்கவே எந்தக் கட்சியும் வலுவுடன் இருக்க்கக் கூடாது என்று கருதுவது தொகுதிப்பங்கீட்டில் தெரிகிறது என்று கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்.

DMK - Congress - Updatenews360

இந்தக் கட்சிகளைவிட காங்கிரஸ் அதிக அவமானங்களை சந்தித்தது. கடந்த நாடாளுமன்றத்தில் 10 இடங்கள் தரப்பட்ட கட்சிக்கு தற்போது 25 தொகுதிகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் தன்னுடன் பேசியதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். கூட்டணியைவிட்டு வெளியேற காங்கிரஸ் கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டது. ஆனால், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வெளிப்படையான பேச்சால், திமுகவுக்கு அவர் தந்த ஆதரவால் கடைசியில் திமுக கொடுத்த இடங்களை காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் இவ்வளவு குறைவான இடங்களில் நிற்பது இதுவே முதல்முறை என்ற வேதனையில் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள். திமுக போட்டியிடும் இடங்களில் திமுகவுக்கு பெரும்பாலான காங்கிரஸ் வாக்காளர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
1980-ஆம் ஆண்டு தொகுதி உடன்பாட்டிலும் முதல்வர் யார் என்பதிலும் கடும் பிரச்சினை ஏற்பட்டு, கூட்டணி அமைத்த திமுகவும், காங்கிரசும் தோற்றுப்போனது பலருக்கும் நினைவில் நிழலாடுகிறது.

எல்லாக் கட்சிகளும் கொடுத்த இடங்களை ஏற்றுக்கொண்டதால் மார்க்சிஸ்ட் கட்சியும் உடன்பாட்டுக்கு சம்மதித்துள்ளது. கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளிப்படையாவே இதை தெரிவித்துவிட்டார்.

திமுகவின் கடுமையான அணுகுமுறையால் கூட்டணிக் கட்சி தொண்டர்களும் வாக்காளர்களும் கரும் கொந்தளிப்பில் இருப்பதால் திமுக போட்டியிடும் இடங்களில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. பெரிய கூட்டணியை அமைத்தாலும், கூட்டணிக்கு கட்சிகளை கிள்ளுக்கீரைபோல கறிவேப்பிலை போல திமுக நடத்தியதால் கூட்டணிக் கணக்குகளை கூட்டணி வேதியியல் திமுகவுக்கு எதிராக மாற்றும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

Views: - 1

1

0