திமுக கூட்டணியில் இழுபறி : பணிந்த ப.சிதம்பரமும்… துணிந்த பாரிவேந்தரும்…!!

8 February 2021, 9:30 pm
DMK - IJK - cong - cover - updatenews360
Quick Share

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக கூட்டணியில் மறைமுகமாக தொடங்கி படுவேகமாக நடந்து வருகிறது. ஆனால் கூட்டணியில் நீடிக்க திமுக விதிக்கும் நிபந்தனைகளை கேட்டால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமல்ல, அரசியலில் உள்ள அனைவருக்குமே அது அதிர்ச்சி தருவதாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கும்.

இதனால்தான் திமுக கூட்டணியில் முதல் கட்ட மறைமுக பேச்சுவார்த்தையே இன்னும் முடிந்த பாடில்லை. சலசலப்பு முணுமுணுப்புடன் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மெகா கூட்டணி அமைத்து இருப்பதால் எல்லாக் கட்சிகளுமே கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியாக போய் விடும் என்றுதான் அவர் நினைத்தார்.

stalin upset - updatenews360

ஆனால் நடந்தது வேறு.

கூட்டணிக் கட்சிகள் தாங்கள் அடிமாடாக மாறுவதை விரும்பவில்லை. அதனால் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகின்றன.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தமிழக காங்கிரசின் நிலை குறித்து கட்சி நிர்வாகிகளிடையே மிகவும் கவலைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு திமுகவிடம் காங்கிரஸ் அடிபணிந்து போவதுபோல் அமைந்துள்ளது.

சரி, அவர் பேசியதுதான் என்ன?

“மற்ற எல்லா கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து விட்டன. ஆனால் நாம் இன்னும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்படி இருந்தால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் எப்படி வளரும்? கட்சியில் உள்ள தலைவர்களின் மகன்களே வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அப்படியென்றால் காங்கிரஸின் கொள்கைகளை நம் பிள்ளைகளிடம் நம்மால் திணிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தமாகிறது. எனவே முதலில் கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் நமது வீட்டில் இருந்து அந்த வேலையை தொடங்க வேண்டும்.

P Chidambaram - Updatenews360

திமுக கூட்டணியில் 2011 சட்டப் பேரவை தேர்தலில் நமக்கு 63 தொகுதிகள் கொடுத்தனர். ஆனால் வெறும் 5 இடங்களில் மட்டுமே ஜெயித்தோம். 2016-ல் 41 தொகுதிகள் ஒதுக்கினர். 8 இடங்களில்தான் வெற்றி பெற்றோம். இப்படி இருந்தால் திமுகவிடம் எப்படி அதிக தொகுதிகளை கேட்டு பெற முடியும்?” என்று தனது ஆதங்கத்தை அவர் கொட்டி தீர்த்து இருக்கிறார்.

இதனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. திமுக 15 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசுக்கு ஒதுக்காது என்பது திட்டவட்டமாக தெரிகிறது. அதை வெளிப்படையாக உணர்த்தும் விதமாகவே சிதம்பரம் இப்படி விரக்தியில் பேசியிருக்கிறார், என்று காங்கிரசுக்குள் முனகல் சத்தம் கேட்கிறது.

கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இதனால் கடும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.

இதுபற்றி மனம் திறந்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்ப்பதற்காக சிதம்பரம் என்ன செய்தார். கடந்த ஆண்டு 10 ஆண்டுகளில் அவர் உருப்படியாக எதையுமே செய்யவில்லை. அவருடைய சிவகங்கை தொகுதியிலேயே கூட காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. இதனால்தான் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பயந்து அவர் முன் கூட்டியே ராஜ்ய சபா எம்பி ஆகிவிட்டார். மகனை தனது தொகுதியில் போட்டியிட வைத்து கூட்டணி பலத்தால் அவரையும் வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.

தேர்தல் வரும் நேரத்தில் மட்டுமே சிதம்பரம் தனது தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பார். பரபரப்பாக ஏதாவது பேசுவார். மற்ற நேரங்களில் சென்னையிலும், டெல்லியிலும்தான் அவரை பார்க்கமுடியும்.

பிறகு எப்படி தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளரும்? காங்கிரஸ் ஆதரவு இன்றி திமுகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது சிதம்பரத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் தனக்கும், தன் மகனுக்கும் எல்லாம் கிடைத்துவிட்டது. இனி யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காமல் போனால் என்ன? என்று நினைக்கிறார்.

stalin - chidambaram - updatenews360

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது அமைச்சரவையில் திமுகவுக்கு வளம் கொழிக்கும் இலாகாக்களை சோனியா காந்தியிடம் வாதாடி வாங்கி கொடுத்தவரே சிதம்பரம் தான். அவரே இப்படி பேசினால் திமுக எப்படி அதிக சீட்டு தரும்? திமுக தலைமையிடம் உரிமையை விட்டு கொடுக்காமல் பேசி கூடுதல் தொகுதிகள் வாங்க முடியாத இவர், இதுபோல் அடிபணிந்து போனது வேதனை அளிக்கிறது” என்று கொந்தளித்தனர்.

அதேநேரம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சியான இந்திய ஜனநாயக கட்சி ஒரு அதிரடி காட்டி இருக்கிறது.
அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர், ப.சிதம்பரம் அளவிற்கு புகழ் பெற்றவர் அல்ல என்றாலும் கூட, பண பலத்தில் சிதம்பரத்துக்கு ஓரளவு இணையானவர் என்று சொல்லலாம். தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே சிறிய அளவில் செல்வாக்கு கொண்டிருக்கும் இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் அப்படி என்னதான் சொன்னார்?

“எங்கள் கட்சி திமுக கூட்டணியில்தான் இருக்கிறது. எங்கள் பலத்திற்கு ஏற்ப திமுகவிடம் தொகுதிகளை கேட்டு பெறுவோம். தனிச் சின்னத்திலும் போட்டியிடுவோம். கூட்டணியில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்கமாட்டோம்” என்று தடாலடியாக அறிவித்திருக்கிறார்.

திமுக அணியில் தற்போதுள்ள கட்சிகள் கணக்கின்படி பார்த்தால் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி பதினோராவது இடத்தில்தான் இருக்கிறது. அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தாலே அதிகம். ஏனென்றால் திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவற்றிற்கே இரண்டு சீட்டுகள்தான் கிடைக்கும் போல் தெரிகிறது. அப்படிப்பட்ட சூழலில் பாரிவேந்தர் கட்சிக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்குமா? என்பது சந்தேகமே. என்ற போதிலும் அவர் துணிச்சலாக திமுகவிடம் பேரம் பேசுவது தெரிகிறது. ஆனால், காங்கிரசோ அடி பணிந்து போகிறது.

parivendhar - updatenews360

அதே நேரம், பாரிவேந்தர் இப்படி அதிரடி காட்டியதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில்,” ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா ஒழிப்பு நிதியாக சில நூறு கோடி ரூபாய்களை திரட்டி அதில் பெரும்தொகையை முறைகேடான வழியில் மாநிலத்தின் பிரதான கட்சி ஒன்றுக்கு தேர்தல் நிதியாக வழங்கியுள்ளார், கோவை பிரமுகர் ஒருவர்.

தற்போது வருமான வரி இலாகாவின் பிடியில் வசமாக அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விடுவதற்காக வெளிநாட்டில் இருந்தவாறே சில கோடி ரூபாயை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் செலவுக்கு நிதி கேட்டு திமுக தொழில் அதிபர்களை நாடத்தொடங்கி இருப்பதாக கூறப் படுகிறது. அதனால் திமுக தலைமை பாரிவேந்தரை அணுகி இருக்கலாம்.
அப்படி கொடுத்து உதவினால் கண்கொத்தி பாம்பாக இருக்கும் வருமான வரி இலாகாவின் பிடியில் தானும் சிக்க நேரிடும் என்று அவர் பயப்படுகிறார். மேலும் தனது கல்வி நிறுவனங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சமும் பாரிவேந்தரிடம் உள்ளது. இதன் காரணமாகவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேற அவர் விரும்புகிறார் எனக் கருதத் தோன்றுகிறது” என்று தெரிவித்தனர்.

இதனால்தான், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நச்சென சொல்லி வைத்தாரோ?

Views: - 4

0

0