கூட்டணியில் ரகசிய பேச்சு : சிறு கட்சிகளுக்கு முதல் பந்தி… அதிர்ச்சியில் உறைந்த காங்.,!!!

5 February 2021, 9:30 pm
allaiance DMK cover - updatenews360
Quick Share

எப்போது நடக்கும் என்று மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட
தொகுதிப் பங்கீடு பேச்சு திமுக கூட்டணியில் ஒரு வழியாக தொடங்கிவிட்டது. கடந்த மூன்று தினங்களாக இந்த திரைமறைவு பேச்சு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் திமுக தலைவர் ஸ்டாலின் தன் வசம் வைத்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகியவற்றுடன் பேச்சு நடத்துவதற்கான அதிகாரத்தை அவரே வைத்துக் கொண்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, SDPI ஆகியவற்றுடன் பேச்சு நடத்தும் பொறுப்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிடம் ஒப்படைத்திருக்கிறார், ஸ்டாலின். இதில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Stalin - Updatenews360

எப்படியும் இன்னும் இரண்டு சுற்றுகள் பேச்சு நடக்கும் அதன்பிறகே கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது பற்றி ஸ்டாலின் இறுதி செய்வார் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையின் தொடக்கமே தலைகீழாக இருப்பதை காணமுடிகிறது. கூட்டணியில் இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள கட்சிகளின் வரிசை அடிப்படையில்தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி பேச்சுவார்த்தையை
தொடங்குவது வழக்கமான ஒன்று. அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையைத்தான் திமுக முதலில் முன்னெடுத்து இருக்கவேண்டும்.

அப்படி அழைப்பு விடுத்து இருந்தால் டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் உடனடியாக சென்னைக்கு பறந்து வந்திருப்பார்கள். ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மாறாக தமிழகத்தில் மூன்றாம், நான்காம் நிலை கட்சிகளாக கருதப்படும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றிடம் திமுக தொகுதி பங்கீடு பேச்சை தொடங்கி இருக்கிறது.

ஒருவேளை சிறிய கட்சிகளுக்கு முதலில் தொகுதிகளை ஒதுக்கி விட்டு பிறகு பேசுவோம் என்று திமுக நினைத்திருக்கலாம். அப்படி கருதும் சூழலில் திமுக ஒரு சம்பிரதாயத்துக்காக காங்கிரசுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அதேபோல் மதிமுக விசிக ஆகியவற்றுக்கும் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர்.

ஆனாலும் முதல் பந்தி போட்டது போல் பேச்சுவார்தை எந்த ஓசையுமின்றி நடக்கத் தொடங்கிவிட்டது. இது தமிழக காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதில் ஒரு கேலிக் கூத்து என்னவென்றால், இப்படி ஒரு ரகசிய பேச்சு நடக்க இருப்பதே டெல்லி மேலிடத்திலிருந்து தெரிவிக்கப்பட்ட பின்பே தமிழக காங்கிரசுக்கு தெரியவந்திருக்கிறது என்பதுதான்.

இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை ராகுல் சற்று கடினமாகவே கடிந்து கொண்டிருக்கிறார். காங்கிரசே அதிர்ச்சி அடைந்து இருப்பதால் மதிமுகவும், விசிகவும் தேசிய கட்சிக்கே இப்படிப்பட்ட அவமானம் என்றால் நமக்கெல்லாம் இது எம்மாத்திரம் என்று மனதை தேற்றிக் கொண்டுள்ளன.

இந்த விஷயத்தில் காங்கிரஸின் பயம் வேறு மாதிரியானது. எங்கே நம்மை கூட்டணியிலிருந்து திமுக கழற்றிவிட்டு விடுமோ என்று அக்கட்சி அஞ்சுகிறது. மேலும் கடைசி நேரத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுக்கு அழைத்து குறைவான தொகுதிகளை ஒதுக்கும் நெருக்கடி தரும் திமுகவின் தந்திரமாகவும் இருக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் கருதுகிறது.

வருகிற 15-ம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதற்குள் பேச்சுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் காங்கிரசுக்கு திமுக கல்தா கொடுத்து விடும் என்றே கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க தொகுதி பங்கீடு பேச்சு நடத்திய சிறு சிறு கட்சிகளுக்கு கிடைத்த அனுபவம் வேடிக்கையானது.

cpm - updatenews360

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டையும், இந்திய கம்யூனிஸ்ட்டையும் தனித்தனியாக அழைத்துப் பேசிய எ.வ.வேலுவிடம் இரு கட்சிகளின் தலைவர்களும் தலா 12 தொகுதிகள் கேட்டு இருக்கின்றனர். ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தை 25 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை என்கிறார்கள். முந்திரிப்பருப்பு பக்கோடா, பாதாம் பருப்பு, தேநீர் பரிமாறலுடன் சட்டென்று முடிவுக்கு வந்துவிட்டதாம்.

முதலில் சந்தித்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் 12 தொகுதிகள் கேட்டுள்ளனர். அதற்கு திமுக தரப்பில் உங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் போதே சிறப்பாக கவனிக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிகம் கிடைக்காது. 3 தொகுதிகள் தரலாம் என்று தலைவர் முடிவு செய்திருக்கிறார் என்று அவர்களிடம் சொல்லப்பட்டு இருக்கிறது.

இது தங்களை கேலி செய்வதுபோல் இருப்பதாக உணர்ந்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் எங்கள் கட்சி நிர்வாக குழுவிடம் கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று பேச்சை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பி விட்டனர். அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவரிடமும் அதே பல்லவியை திமுக பாடியது என்கிறார்கள். இதை ஏற்காத இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் எங்கள் அகில இந்திய தலைமையுடன் ஆலோசித்து விட்டு சொல்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டனர். இந்த இரு கட்சிகளுக்கும் அதிகபட்சம் நான்கு சீட்டுகள் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும்போல் தோன்றுகிறது.

இன்னொருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள துரைமுருகன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவரான காதர்மொய்தீனையும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லாவையும் அழைத்துப் பேசியுள்ளார்.

இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்கு தலா 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். துரைமுருகனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. கூட்டணி கட்சிகள் எல்லாம் எப்படி சொல்லி வைத்ததுபோல் ஒரே மாதிரி இடங்கள் கேட்கின்றன என்பது புரியாமல் சற்று தடுமாறித்தான் போயிருக்கிறார். பின்னர் சமாளித்துக் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்க தளபதி முடிவு செய்திருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்த இரு தலைவர்களும் கூட துரைமுருகனிடம் நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருக்காமல் உடனடியாக வெளியேறிவிட்டனர் என்கிறார்கள்.

இதுபற்றி பெயரை வெளியிட விரும்பாத இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இதுவரை கருணாநிதியிடமே நேரடியாக சட்டப் பேரவை தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்திய எங்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. அவர் எங்களைக் கண்டவுடன் அருகில் வந்து உரிமையுடன் தோளில் கை போட்டுக் கொள்வார். துரை முருகனிடம் நாங்கள் அதை எதிர்பார்க்காவிட்டாலும் கூட ஒரு புன்முறுவலாவது கிடைக்கும் என்று பார்த்தோம். ஆனால் அவர் தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்கு பதிலாக நாம்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்பதுபோல்
இறுக்கமான முகத்துடன் பேசுகிறார். திமுகவுக்கு கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்லும் போக்கு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஆக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிபங்கீடு பேச்சில் கிடைத்த அனுபவம் மிகப் பெரிய படிப்பினை போல் தோன்றுகிறது.

இனி இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட மற்றும் அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தைகள் எல்லாம் வேறு உள்ளது.
அதில் என்னென்ன சுவாரசியமான காட்சிகளெல்லாம் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை!

Views: - 24

0

0