விடாது துரத்திய தேமுதிக… : விரட்டி அடித்த திமுக!!

9 February 2021, 6:37 pm
DMDk - dmk - cover - updatenews360
Quick Share

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை சார்ந்தே உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகியவை தனித்தே களம் காணும் நிலையில் இருக்கின்றன.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சீமான் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று தீவிர பிரச்சாரமும் செய்து வருகிறார். ஆனால் 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக திகழ்ந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவின் நிலைமை மட்டும் தற்போது இதில் கேள்விக்குறியாகவும், கேலிக்குரியதாகவும் இருக்கிறது.

Vijayakanth - updatenews360

அந்தக் கட்சி ‘கேப்டன்’ இல்லாத கப்பல் போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இங்கே கேப்டன் என்பது விஜயகாந்தை ஒப்பிடுவதற்காக கூறப்பட்ட வார்த்தை அல்ல. உண்மையிலேயே நடுக்கடலில் செல்லும் ஒரு கப்பலில் கேப்டன் இல்லாமல் போனால் அந்தக் கப்பலுக்கு என்ன கதி நேருமோ என்பதற்காக சொல்லப்பட்டது.

கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகவே தேமுதிக பயணிக்கும் பாதை எது என்பது தெளிவற்ற ஒன்றாக உள்ளது.
திக்கு தெரியாத திசையில் அது செல்வதுபோல் தெரிகிறது. 2017-ல் உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு, தேமுதிகவை முழுக்க முழுக்க வழிநடத்தி வருவது மனைவி பிரேமலதாவும், அவருடைய சகோதரர் எல்.கே. சுதீசும்தான்.

விஜயகாந்தால் பொது, அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலையில், இவர்கள் இருவரும் கட்சியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருந்தபோது, காணப்பட்ட எழுச்சி இப்போது இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். வெற்றி, தோல்வி பற்றி விஜயகாந்த் கவலைப்படாமல் தீர்க்கமான முடிவை எடுப்பார். ஆனால், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், துணை பொதுச் செயலாளர் சுதீசும் முடிவு எடுப்பதில் குழப்ப நிலையையே கடைப்பிடித்து வருகின்றனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இப்போது இவர்களின் வரிசையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரனும் இணைந்து கொண்டிருக்கிறார். அம்மா, மகன், தாய் மாமன்…என்று இந்த மூவரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதான கட்சிகளை அணுகும் விதம் அனைவரையுமே முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. அதாவது இவர்கள் அரசியலில் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் பேசுகிறார்கள். பொறுமை காக்கத் தெரியவில்லை என்பது பாமரர்களுக்கும் கூட புரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி அடிப்படையில் பார்த்தால் அதிமுக அணியில் தேமுதிக இருக்கிறது. இந்தக் கூட்டணியில் பாமக, பாஜக, தமாக ஆகியவையும் உள்ளன. இந்த வரிசையில் முறைப்படி அதிமுக முதலில் பாமகவுடன்தான் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த வேண்டும். இவர்கள் இரு தரப்பினர் இடையேயும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், எங்களுடன் விரைவில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்று பிரேமலதா தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்தார்.

முதலில் பாமகவுடன் பேச்சுவார்த்தை முடித்துக் கொள்கிறோம். பிறகு பாஜகவிடம் பேசிவிட்டு உங்களிடம் வருகிறோம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் பொறுமை காக்க விரும்பாத பிரேமலதா, பாமக இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார். அப்படியென்றால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்க விரும்பவில்லை என்றே அர்த்தம் ஆகிறது.

ஆனாலும், பிரேமலதாவின் கடுமையான நிபந்தனைக்கு அதிமுக சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. நீங்கள் இவ்வளவு அவசரப்பட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதும் பிரேமலதா பதுங்கிக் கொண்டார்.

இதற்கிடையே ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற முறையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் சுதீஷை உரிமையோடு தூது அனுப்பி திமுக கூட்டணியில் இணைவதற்கான ஒரு தீவிர முயற்சியையும் அவர் மேற்கொண்டார். எத்தனை சீட்டு எதிர்பார்க்கிறீர்கள்? என்று துரைமுருகன் கேட்டதற்கு 18 தொகுதிகள் போதுமென்று மிகப் பெருந்தன்மையோடு சுதீஷ் கூறியிருக்கிறார். அதில் பாதியே இங்கு கிடைப்பது கடினம். உங்கள் கட்சியை சேர்த்துக் கொள்வதற்கு தளபதி தயங்குகிறார் என்று கூறி துரைமுருகன் நழுவிக் கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் அடுத்த சில நாட்களில் நாங்கள் அதிமுக அணியில்தான் இருக்கிறோம் என்று பிரேமலதா ‘யூ டேர்ன்’ அடித்தார்.

அதேநேரம் இப்போதைக்கு தொகுதி பங்கீடு பேச்சு நடத்த தங்களை அழைக்க மாட்டார்கள் என்று தெரிந்ததும் அவர் மீண்டும் நிறம் மாறினார். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்று கடுமையாக விமர்சித்தார். இதை அதிமுக அவ்வளவாக ரசிக்கவில்லை. இனி, அவசியம் ஏற்பட்டால் மட்டும் தேமுதிகவை கூட்டணியில் வைத்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு அதிமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமலதா அடுத்து அமமுக பக்கம் பார்வையை திருப்பினார்.

“சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை ஒரு பெண் என்கிற முறையில் வரவேற்கிறேன்”என்று திடீரென பெண்ணியம் பேசினார். தாயாருக்கு ஒத்து ஊதுவதுபோல் விஜய் பிரபாகரனும், “ஒரு பெண்மணியாக சசிகலா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தைரியமாக செயல்படுகிறார்” என்று உருகினார்.

ஆனால் டிடிவி தினகரன் தரப்போ இவர்களை கண்டுகொள்ளவே இல்லை.

இதைத்தொடர்ந்து மறுபடியும் துரைமுருகனை அணுகி 12 சீட்டுகள் ஒதுக்கினால் சேர தயாராக இருக்கிறோம் என்று பிரேமலதா
சரணாகதி அடைந்திருக்கிறார். அவரோ “எங்கள் கூட்டணியிலேயே தொகுதி பங்கீடு விஷயத்தில் பல கட்சிகள் அடம் பிடித்து அழுது கொண்டிருக்கின்றன. அதை சமாளிப்பதற்கே எங்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. இனிமேல் நீங்கள் எங்கள் பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்” என்று விரட்டியடிக்காத குறையாக தன்னிடம் தூது வந்த சதீஷை அனுப்பி வைத்திருக்கிறார், துரைமுருகன்.

இதைத்தொடர்ந்து பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன் மூவரும் ஒரே நேர்கோட்டிற்கு வந்துள்ளனர்.

இப்போது இவர்கள் ஒரே குரலில் “அதிமுக, திமுக இரண்டுக்கும் மாற்றாக தொடங்கப்பட்டதுதான் தேமுதிக. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எங்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. எங்களால் 234 தொகுதிகளிலும் தனித்தே நிற்க முடியும்” என்று கோரஸ் பாடுகின்றனர்.

இதெல்லாம் தேமுதிகவை நிறுவிய விஜயகாந்துக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு விடை கூறத்தான் யாரும் இல்லை.

Views: - 1

0

0

1 thought on “விடாது துரத்திய தேமுதிக… : விரட்டி அடித்த திமுக!!

Comments are closed.