ஒரு வாரமாக நீடித்த மார்க்சிஸ்ட்டின் பிடிவாதமும் கலைப்பு : 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது திமுக!!

8 March 2021, 11:50 am
dmk - CPM - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஒரு வாரம் நீடித்து வந்த இழுபறிக்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் கட்சிகளை திமுக பேசியே வழிக்கு கொண்டு வந்து விடுகிறது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்து விட்ட திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதியை ஒதுக்கீடு செய்தது.

இதைத் தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தல் தொகுதியையும் கொடுத்து சரிகட்டியது.

இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சிகளில் மற்றொரு பிரிவான மார்க்சிஸ்ட் திமுகவின் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தது. தங்களுக்கு இரட்டை இலக்கத் தொகுதியை வழங்க வேண்டும் என்று விடாபிடியாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடந்த இன்றைய பேச்சுவார்த்தையின் போது, அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது :- மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் திமுகவிடம் கொடுக்க இருக்கிறோம், எனக் கூறினார்.

நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்குள் இழுத்து விட்டதால், மார்க்சிஸ்ட் கட்சியை எளிதில் இழுத்து விடலாம் என்பது திமுகவின் எண்ணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 11

0

0