கோவையில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ததில் முறைகேடு… சிஆர் ராமச்சந்திரனைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Babu Lakshmanan
3 February 2022, 1:31 pm
Quick Share

கோவை : பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாக கோவையில் திமுக பொறுப்பாளர் சிஆர் ராமச்சந்திரனை கண்டித்து அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்.,19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி, பாஜக, பாமக என பல்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. வேட்பாளர் தேர்வில் திருப்தி இல்லாமல் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆளும் திமுகவில்தான் அதிருப்தி அலைகள் அதிகம் வீசி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் திமுக வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் 77 வது வார்டில் திமுகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜலட்சுமியை மாற்றக்கோரி, 77 வது வார்டு செயலாளர் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்வபுரம் பகுதியில் போராட்டம் நடத்தினர்.

அப்போது, திமுக பொறுப்பாளர் சி.ஆர். இராமச்சந்திரன், பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாகவும், தகுதியில்லாதவர்களுக்கு சீட் ஒதுக்கியதால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை செல்வபுரம் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Views: - 870

0

0