திமுக வேட்பாளர் பட்டியலில் பெண்கள் புறக்கணிப்பு : ஐ-பேக் மீது மகளிர் அணி அதிருப்தி..!!

6 November 2020, 8:20 pm
DMK female - updatenews360
Quick Share

சென்னை: திமுகவுக்கு ஆலோசனை சொல்லும் ஐ-பேக் தயாரித்துள்ள 2021 சட்டப்பேரவைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு விரல்விட்டு எண்ணும் அளவுக்கே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள தகவலால் கனிமொழி ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் திமுகவில், பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற உயரிய பதவியிலும், முதல்வர் அரியணையிலும் ஜெ.ஜெயலலிதா அமர்ந்திருந்தார். திமுகவில் தலைமைப் பதவிக்குப் பெண்கள் வருவதில்லை என்பது மட்டுமில்லாமல் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தேர்தல் என்று வரும்போது எப்போதும் திமுகவில் பெண்களுக்கு மிகவும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும்.

duraimurugan - stalin1 - updatenews360

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆலோசனை வழங்க ஐ-பேக் நிறுவனத்தை பலகோடி ரூபாய் செலவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமர்த்தியுள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியையும் ஐ-பேக் செய்துவருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஐந்து வேட்பாளர்களை அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்து முதல்கட்ட பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் பெண்களுக்கு மிகவும் குறைவான இடங்களை தரப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் கனிமொழியும் அவர் தலைமையில் இயங்கும் மகளிர் அணியும் குமுறிவருகின்றனர்.

சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் ஒரு இடம் கூட பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. திமுகவுக்கு வெற்றிவாய்ப்பில்லாத தொகுதிகளே பெண்களுக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளதாக பெண் உடன்பிறப்புகள் கொந்தளிக்கின்றனர். மேலும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மண்டலவாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளிலும் ஒன்றுகூட பெண்களுக்கு இல்லை.

kanimozhi - stalin - updatenews360

தென்மண்டல பொறுப்பாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் கடும் எதிர்ப்பால் அந்தப்பதவி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தரப்படப்போகிறது. கிழக்கு மண்டல பொறுப்பாளராக சண்முகம், வடக்கு மண்டல பொறுப்பாளராக ஆ.ராசா ஆகியோரை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த 4 மண்டலங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பொறுப்பாளராக கே.என்.நேருவை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக வலிமையான போராட்டங்களை நடத்தியிருப்பதுடன் தேசிய அளவில் குரல் கொடுத்தும் வருகிறது தி.மு.க. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் பெண்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அவ்வப்போது திமுக தலைவர்கள் தம்பட்டம் அடிப்பது பழக்கம். ஆனால், கட்சி என்று வரும்போது, தேர்தல் நேரத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்.

பொதுவாகவே, பெண்களின் ஆதரவு அதிமுகவுக்குத்தான் என்ற நிலை இருக்கிறது. அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த நிலை இருந்துகொண்டுவருகிறது, ஜெயலலிதா தலைமையேற்றபிறகு அதிமுகவுக்கு பெணகளின் வாக்குவங்கி மேலும் வலுப்பட்டது. திமுகவுக்கு எப்போதும் பெண்களின் ஆதரவு மிகவும் குறைவுதான். இந்த நிலையில் கட்சியில் இருக்கும் மகளிர் அணியையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டால் திமுகவுக்குப் பெண்கள் வாக்களிப்பது மேலும் குறைந்துவிடும் என்று கருதப்படுகிறது. கட்சியில் மகளிர் அணிக்கும் இளைஞர் அணிக்கும் நடைபெறும் மோதல் மேலும் வலுவடையும் என்றும் இது வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் கட்சியின் மூத்த தலைவர்கள்.

Views: - 38

0

0