திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் குழப்பம் : கார்த்தியைத் தொடர்ந்து ஆட்சியில் பங்கு பற்றி கே.எஸ். அழகிரியும் கருத்து !!

Author: Babu
5 October 2020, 8:37 pm
mk-Stalin-ks-alagiri - updatenews360
Quick Share

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் கூட்டணி குறித்து அண்மையில் கூறிய கருத்து கூட்டணிக் கட்சிகளிடையே தொடர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறது. துரைமுருகனின் கருத்தை அடுத்து திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரியும் பேசியுள்ளது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

‘தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வெளியில் போவார்கள். யாராவது வருவார்கள்’ என்று துரைமுருகன் சொன்னது திமுக கூட்டணிக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன் ஒருமையில் பேசவில்லை என்றும், அப்படி யாராவது கருதியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். ஆனால், சொன்ன கருத்தின் உள்ளடக்கத்தை அவர் இதுவரை மறுக்கவில்லை.

Vellore DuraiMurugan - Updatenews360

இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அழகிரி, திமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இப்போது பேசவேண்டிய தேவையில்லை என்று கூறியிருப்பது மீண்டும் உரசலை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று அழகிரி கூறாமல், அது பற்றிப் பின்னர் பேசுவோம் என்ற பொருளில் கூறியிருப்பது தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாடு வந்திருந்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கூறியிருந்தார். திமுகவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் துணைநிற்கும் என்று பல்டி அடித்தார்.

Congress DMK - updatenews360

இதே கருத்தை முன்னரே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சொல்லியிருந்தார். அரசியல் வார இதழ் ஒன்றில் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாது என்றும், காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்ற பிறகு திமுகவுக்கு தங்கள் ஆதரவு தேவையா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். தனித்த பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று திமுக வியூகங்களை வகுத்து வரும்போது தேர்தல் முடிவைப் பொறுத்து காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கார்த்தி கூறியிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஆனாலும், கார்த்தி கட்சியின் தலைவரில்லை என்பதால் என்று திமுக தலைவர்கள் அமைதி காத்தனர்.

Karthik chidambaram - updatenews360

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கார்த்தியை நியமிக்க ப.சிதம்பரம் முயற்சி செய்யும் நேரத்தில் கார்த்தியின் பேட்டி கூட்டணி ஆட்சி முழக்கத்தை எழுப்பியும் அதிரடியாகப் பேசியும் கட்சியினரின் ஆதரவைப்பெறும் முயற்சியாகவே அவரது கருத்துகள் பார்க்கப்படுகிறது. கார்த்தியின் கருத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவைப் பெறவே அழகிரியும் கூட்டணி ஆட்சி பற்றிப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், தமிழ்நாட்டு ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற ஆசை காங்கிரஸ் கட்சியினருக்கு இருப்பதையே கார்த்தியின் பேச்சும், அழகிரியின் பேச்சும் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கி அதில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

alagiri-updatenews360

இதனால், காங்கிரசுக்குக் குறைவான இடங்களை ஒதுக்க திமுக முயற்சி செய்யும் என்று தெரிகிறது. கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் வலியுறுத்தக்கூடாது என்பதால்தான் துரைமுருகன் திமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியதாக காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கருதுகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இரு கட்சிகளின் தலைவர்களுக்க் இடையே மோதல் போக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மாநிலக் காங்கிரஸ் கட்சியினரின் கருத்தை மீறி காங்கிரஸ் தலைமை கூட்டணியைக் கட்டாயப்படுத்தினால் தேர்தலில் இரு கட்சிகளும் ஓருவர் காலை மற்றவர் வாருவதன் மூலம் சொந்தக் கூட்டணியைத் தோற்கடிப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

Views: - 42

0

0