7 பேர் விடுதலை விவகாரம் : ராகுல்காந்தியின் தூண்டுதலா.. ? காங்கிரஸ் – திமுக இடையே மோதல்!!

7 November 2020, 7:41 pm
DMK - congress - updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை வழங்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக திமுகவுக்கும், அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை வெளிப்படையாகக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவுப்படி வந்திருக்க வேண்டு என்று திமுக கருதுவதால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. “கொள்கை வேறு; கூட்டணி வேறு” என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதால் காங்கிரசுடன் திமுக கொண்டுள்ள உறவு கொள்கைக் கூட்டணியல்ல என்பதையும், அது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி என்பதை திமுக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இது காங்கிரசுடன் உறவை முறித்துக்கொள்ள முன்னோட்டமான பேட்டியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இலங்கைத் தமிழர் படுகொலை, காவிரி, முல்லைப்பெரியாறு, நீட் ஆகிய பல பிரச்சினைகளில் காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் திமுக தமிழர் உணர்வுப்பிரச்சினைகளில் இரட்டைவேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டு, 2009-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் படுகொலை நடந்த காலம் முதல் பேசப்பட்டு வருகிறது. காங்கிரசுடன் உறவைத் தொடர்ந்தால் ஸ்டாலினின் தமிழர் நலன் பேச்சு என்பது இரட்டைவேடம் என்பது அம்பலமாகிவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக பல தமிழர் அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருகிறது. இதில் நளினிக்கு மட்டும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று திமுக ஆட்சி பரிந்துரை செய்தது.

rajiv case - UpdateNews

2009-ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் ஒத்துழைப்புடன் இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழர்களும், ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்ட பின் ஏழு தமிழர் விடுதலைக் கோரிக்கை வலுவடைந்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்குத்தொடர்ந்து அதில் ராம்ஜெத்மலானியை வாதாட வைத்ததால் ஏழு தமிழர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அவர்களின் ஆயுள் தண்டனையையும் நீக்கி அவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இதை வெளிப்படையாக எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜீவ்காந்தியின் மகனுமான ராகுல்காந்தி பேட்டியளித்தார். ஜெயலலிதா உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து விடுதலையை காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறுத்தியது.

அதைத்தொடர்ந்து அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தொடர்ந்து முயற்சிசெய்துவருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மீண்டும் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையில் எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. ஆளுநர் ஏன் கால தாமதம் செய்கிறார் என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பிய நிலையில், மீண்டும் இந்தப்பிரச்சினை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று திமுகவின் கூட்டணியில் இருக்கும் வைகோவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தபின் திமுக தலைவர் ஸ்டாலினும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

ஸ்டாலினின் கருத்தை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். “ஏழு பேர் விடுதலை தொடர்பாக அரசியல் கட்சியினர் கோரிக்கை வைக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Rajiv-Gandhi-assassination-case - congress - - updatenews360


“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்துத் தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல” என்றும் கே.எஸ் அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அழகிரியின் அறிக்கை ஸ்டாலினை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மீண்டும் ராகுல்காந்திக்குத் தெரியாமல் அழகிரி திமுகவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்க முடியாது என்று திமுக தலைவர்கள் கருதுகின்றனர். ராகுல்காந்தியின் உத்தரவுப்படி இந்த அறிக்கை வந்திருக்கவே பெரிதும் வாய்ப்புள்ளது. ஏழு தமிழர்களை விடுதலை செய்வதை மீண்டும் ராகுல்காந்தியும் சோனியாகாந்தியும் தடுக்க நினைக்கிறார்கள் என்று தமிழக மக்களும் நினைக்கின்றனர்.

stalin-rahul- updatenews360

ஏற்கனவே, காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் இலங்கைத் தமிழர் படுகொலை, காவிரி, முல்லைப்பெரியாறு நீட், மீத்தேன் திட்டங்கள் ஆகியவற்றில் திமுக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுவருகிறது. இப்போது, ஏழு தமிழர் விடுதலையை எதிர்த்து அரசியல் செய்வதாலும் கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்பதாலும் காங்கிரசைக் கழற்றிவிடும் முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியே கூட்டணியைத் தொடர்ந்தாலும் இரு கட்சித்தொண்டர்களும், வாக்காளர்களும் கூட்டணியை ஏற்றுக்கொள்ளாமல், திமுக கூட்டணி தோல்வி அடையும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.

Views: - 33

0

0