சீனியர்களுக்கு சீட் இல்லை : முதல் விக்கெட் துரைமுருகன்… அதிர்ச்சியில் வேலூர் திமுக..!!!
22 January 2021, 12:59 pmதமிழ்நாட்டில் அதிகமான சீனியர் தலைவர்களை கொண்ட கட்சி என்னும் பெருமை 72 ஆண்டு பழமை வாய்ந்த திமுகவுக்கு உண்டு.
அக்கட்சியில் இன்றும் மிகுந்த செல்வாக்குடன் திகழும் தலைவர்களில் பலர் 70 வயதை கடந்தவர்கள். 80 வயதை தாண்டியும் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’ என்று உவமை கூறுவதுபோல் சிலரும் உள்ளனர். இவர்கள் அனைவருமே நிச்சயம் அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு இளம் வயதில் அரசியலுக்கு வந்தவர்களாக இருப்பார்கள். தற்போது இவர்கள் முதுமை வயதுக்குள் உள்ளனர் என்பது நிதர்சனம்.
இந்த சீனியர் தலைவர்கள் ‘ஆக்டிவாக’ இருப்பதுபோல் தோன்றினாலும், தங்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகளை வைத்துத்தான் கட்சிப் பணிகளை முழுக்க முழுக்க நடத்துகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம். இவர்களால் 40, 50 வயதில் இருந்ததுபோல் ஓடியாடி துடிப்புடன் கட்சிக்காக நேரடியாக உழைக்க முடியவில்லை என்ற கருத்து சமீப காலமாக திமுக தலைமையிடம் மேலோங்கி வருகிறது.
அதாவது திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, திடீர் வரவு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரிடம் இந்த கருத்து வலுவாக பதிந்து இருக்கிறது. இந்த தலைவர்களில் பலர் அடிக்கடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்று ‘அட்மிட்’ ஆகிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் நேரிடுகிறது. என்றாலும் இவர்கள் தொடர்ந்து கட்சிப்பணியில் ஈடுபட்டும் வருகிறார்கள்.
இதுபோன்றதொரு பட்டியலைத் தயாரித்தால் அதில் முதலிடத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்தான் இருப்பார் என்று அடித்துச் சொல்ல முடியும். அவருக்கு 82 வயதாகிறது.
சமீபகாலமாக அவர் உடல்நலக்குறைவால் மாதத்திற்கு இருமுறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடுகிறார். ஓரிரு நாள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் டிஸ்சார்ஜ் ஆகிறார்.
துரைமுருகன் மட்டுமல்ல இன்னும் பல மூத்த தலைவர்கள் இதுபோல் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இந்த சீனியர் தலைவர்கள் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவருடன் மனம் விட்டு பேசக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் மீது எந்த கடுமையான விமர்சனத்தையும் திமுக தலைவர் ஸ்டாலினால் வைக்க முடியவில்லை. அல்லது அறிவுரையும் கூறமுடியவில்லை.
ஆனால், கருணாநிதியின் மறைவிற்குப் பின்பு இவர்கள் மீதான ஸ்டாலினின் சிந்தனை வேறு கோணத்தில் நகரத் தொடங்கி இருக்கிறது என்னவோ உண்மை. இதை உணர்ந்துகொண்ட அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் தன் பங்கிற்கு ஸ்டாலினை நிறையவே உசுப்பேற்றி விட்டிருக்கிறாராம்.
“இந்த சீனியர் தலைவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் 7 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து விட்டார்கள்.
இவர்களின் முகம் மக்களுக்கு பழகி அலுத்து சலித்துப் போயிருக்கும். எனவே இவர்களை வைத்து வரும் தேர்தலை சந்திப்பது அவ்வளவு உசிதமாக இருக்காது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தால்தான் இலக்கு 200 என்கிற லட்சியத்தை எட்ட முடியும்” என்று திட்டவட்டமாகவே ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்.
இதனால் 70 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் மட்டுமல்ல. 60 வயதைக் கடந்தவர்களும் கூட மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
திமுகவின் தற்போதைய பொதுச் செயலாளரான துரைமுருகன் தேர்தலில் போட்டியிடுவதில் பொன்விழா கண்டவர். 1971 முதல் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு வரும் இவர், 11 தேர்தல்களை சந்தித்து அதில் 9 முறை வெற்றியும், இரு தடவை தோல்வியும் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் முன்னாள் அமைச்சர்களான K.பொன்முடி, K.N.நேரு, I.பெரியசாமி, TPM.மொகைதீன்கான், KKSSR ராமச்சந்திரன், MRK பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு, ஆகியோர் 5 முதல் 7 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தவர்கள். இதுமாதிரி அனுபவம் வாய்ந்த இன்னும் பல சீனியர் தலைவர்கள் திமுகவில் உள்ளனர். இதனால் ஓட்டுக் கேட்டு செல்லும்போது, இளைய தலைமுறை வாக்காளர்கள் இவர்களை அதிருப்தியுடன் முகம் சுழித்துப் பார்க்கும் ஒரு சூழலும் நிலவுகிறது. இது முதல்முறை வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
இந்தத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டால் உங்களுக்கு பணிவாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் தங்களுடைய செல்வாக்கையும், அதிகாரத்தையும் மேலும் வளர்த்துக் கொள்ளவே விரும்புவார்கள். அதற்காக உங்களிடம் சம உரிமையும் பேசுவார்கள். திமுக ஆட்சியை கைப்பற்றும் போது நிச்சயம் அமைச்சர் பதவி கேட்டு நச்சரிக்கவும் செய்வார்கள். தவிர இவர்களால் கட்சியில் கோஷ்டி பூசலும் அதிகமாகும் என்று எச்சரிக்கை மணியடித்து இருக்கிறார்.
அத்துடன் மட்டுமின்றி இவர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்றும் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் திமுகவின் சீனியர் தலைவர்கள் பிரசாந்த் கிஷோர் மீது கொண்டிருக்கும் கடும் அதிருப்திக்கு மூல காரணம்.
2 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் பேசும்போது, “மூத்த தலைவர்கள் திடீர் திடீர்னு ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொள்கிறார்கள். தேர்தலில் போட்டியிட இவர்களுக்கு சீட்டு கொடுத்தால் எப்படி பிரச்சாரம் செய்வார்கள்? போட்டி வேறு மிகக் கடுமையாக உள்ளது. எனவே பிரசாந்த் கிஷோர் சொல்வதும் நியாயமாகத்தான் தெரிகிறது. சீனியர் தலைவர்கள் எப்படியும் மூன்று முறை அமைச்சர் பதவியில் இருந்திருப்பார்கள். அதனால் இம்முறை அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தனது புதிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார், என்கிறார்கள்.
இந்த வரிசையில் துரைமுருகன் உள்பட குறைந்தபட்சம் பத்து சீனியர் தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பது 100 சதவீதம் சந்தேகமே! எனவே, இதில் முதல் விக்கெட்டாக விழப் போவது துரைமுருகன்தான் என்ற பேச்சு அண்ணா அறிவாலயத்தில் சற்று பலமாகவே கேட்கிறது. திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. அது போன்றதொரு சூழல் தற்போதைய பொதுச்செயலாளர் துரை முருகனுக்கும் உருவாகியிருக்கிறது என்று திமுகவினர் மத்தியில் பரபரப்பு பேச்சு உள்ளது.
வரும் தேர்தலோடு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும் இதர சீனியர் தலைவர்களுக்கும் இந்த தகவல் வயிற்றில் புளியை கரைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
0
0