பதவி கிடைக்காவிட்டால் கட்சி மாறுவேனா..? துரைமுருகன் திடீர் அறிக்கை
7 August 2020, 12:03 pmசென்னை: பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் தான் கட்சி மாறுவதாக கூறுவதை திமுகவின் துரைமுருகன் கண்டித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்தியாக தினமலர் (7.8.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.
இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.என் வரலாறு தினமலருக்கு தெரியாது போலும். எம்.எல்.ஏ, எம்.பி, – அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன், அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.
நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து, இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது தினமலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது, அமைச்சர்களுக்கு கவரி வீசுவது, அதனால் ஆதாயம் பெறும் தினமலருக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.
சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். தினமலர் தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.