திமுக பிரமுகரை கைது செய்யச் சென்ற போலீசார் மீது தாக்குதல் : கைவிலங்கை உடைத்து தப்பிச் சென்ற சம்பவம்… ஆம்பூரில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 1:14 pm
Quick Share

திருப்பத்தூர் : திருட்டு வழக்கு ஒன்றில் திமுக பிரமுகரை கைது செய்த போலீசார் மீது, அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுவிதா. இவரது கணவர் கணேஷ் திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க, எல். மாங்குப்பம் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளனர்.

திமுக பிரமுகரான கணேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, திடீரென அங்கு வந்த கோயம்பத்தூர் தணிப்படை போலீசார், அவரை கைது செய்து காரில் ஏற்றியுள்ளனர்.

போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கணேஷை போலீசாரிடமிருந்து மீட்டு, அவருக்கு போடப்பட்டிருந்த கைவிலங்கை வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று உடைத்தனர். மேலும், கணேஷின் ஆதரவாளர்கள் தாக்கியதில், காவலர்கள் 2 பேர் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றம் நிலவியது.

இதனிடையே, தப்பியோடிய கணேசனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். அதேவேளையில், கணேசனுக்கு போடப்பட்டிருந்த கைவிலங்கை உடைத்த வெல்டிங் கடையின் உரிமையாளரை கைது செய்த போலீசார், குற்றவாளியை கைது செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Views: - 446

0

0